இந்த ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்திய டாப்-10 கார்கள்-பகுதி-3

7.ஹூண்டாய் புளூயிடிக் வெர்னா:
அசத்தலான புளூயிடிக் ஸ்கல்ப்சர் வடிவைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல் நியூ வெர்னா விற்பனையில் ஹூண்டாய்க்கு புதிய உத்வேகத்தை அளித்தது. ஹோண்டா சிட்டி, வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆகிய மிட்சைஸ் கார்களுக்கு தனது வடிவைப்பால் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது.
சொகுசு வசதிகள், தரமிக்க இன்டிரியர் பாகங்கள் ஆகியவை ஹூண்டாய் ஆல் நியூ வெர்னாவுக்கு கூடுதல் பலம். புதிய வெர்னா 4 எஞ்சின் வேரியண்ட்களில் கிடைக்கிறது.
1.4 லிட்டர் விடிவிடி, 1.6 லிட்டர் விடிவிடி பெட்ரோல் எஞ்சின் வேரியண்ட்களிலும், 1.4 லிட்டர் சிஆர்டிஐ, 1.6 லிட்டர் விஜிடி சிஆர்டிஐ எஞ்சின் வேரியண்ட்களிலும் புதிய வெர்னா விற்பனை செய்யப்படுகிறது.
8.நிசான் சன்னி:
நம்ப முடியாத விலையில் ஒரு பெரிய காரை இந்திய வாடிக்கையாளர்களுக்கு தந்து பெருமைபட்டுக்கொண்டுள்ளது நிசான். ஆம், பிஎம்டபிள்யூ எம் சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் கார்களுக்கு இணையான இடவசதி சன்னி தருகிறது என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதை மறுப்பதற்கும் இல்லை.
ரூ.5.86 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சன்னியின் வடிமைப்பு வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதிக இடவசதி கொண்ட கேபின் மற்றும் பூட் ரூம், எளிதான கையாளுமை உள்ளிட்டவை சன்னிக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
98 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட சன்னி தற்போது டீசல் எஞ்சின் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதனால், வாடிக்கையாளர்களின் தேர்வில் எளிதாக கலந்துகொள்ளும் வாய்ப்பை சன்னி ஏற்படுத்திக்கொண்டுவிட்டது.
9. மஹிந்திரா எக்ஸ்யூவி 500:
ஸ்கார்ப்பியோ வடிவமைப்பு மூலம் இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்துவிட்ட மஹிந்திரா நிறுவனம், அந்த இடத்தை மேலும் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற வைராக்கியத்தோடு 4 ஆண்டுகால அயராத உழைப்பில் உருவாக்கிய எஸ்யூவி மாடல்தான் எக்ஸ்யூவி 500.
தனது சர்வதேச பயணத்தை துவங்குவதற்கு நம்பிக்கையான மாடலாக இருக்கவேண்டும் என்பதற்காக குளோபல் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டதுதான் எக்ஸ்யூவி 500.
இந்த நிலையில், அனைத்து தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கம்பீரமான வடிவமைப்புடன் இறக்கப்பட்ட புதிய எக்ஸ்யூவி 500 எஸ்யூவியை யாரும் எதிர்பாராத வகையில் ரூ.10.80 லட்சம் என்ற குறைந்த விலையில் மஹிந்திரா அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய எக்ஸ்யூவி 500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும், வாய்ஸ் கன்ட்ரோல் வசதி, லெதர் இருக்கைகள் என எக்ஸ்யூவியில் உள்ள தொழில்நுட்ப வசதிகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
ஏபிஎஸ், இபிடி, ஹில் டிசென்ட் கன்ட்ரோல் என பாதுகாப்பு அம்சங்களிலும் புதிய எக்ஸ்யூவிக்கு குறைவில்லை.
10.டாடா ஆரியா:
எம்பிவி செக்மென்ட்டில் பிரிமியம் வசதிகளுடன் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் ஆரியா நிச்சயம் ஏரியாவை கலக்கும் அம்சங்களுடன் மார்க்கெட்டில் வலம் வருகிறது. முன்பக்கம், பின்பக்கம் மற்றும் பக்கவாட்டில் என எந்த பக்கம் பார்த்தாலும் வடிவமைப்பில் கவர்ச்சியாக இருப்பதால் கண்களை விட்டு உடனே அகல மறுக்கிறது டாடா ஆரியா.
வடிவமைப்பு, அனைத்து வசதிகளும் இருந்தும் ஆரியாவின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால், ஆரியாவின் விலையை ரூ.2 லட்சம் வரை திடீரென குறைத்து மார்க்கெட்டில் டாடா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல் வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் மாடல்களில் ஆரியா கிடைக்கிறது.
ஆரியாவில் உள்ள தொழில்நுட்ப வசதிகள் ரூ.30 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் கார்களின்தான் கொடுக்க முடியும் என மார்க்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆல் வீல் டிரைவ் ஆரியாவை அதிவேக செயல்திறன் கொண்டதாக இயக்க 2.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் காமன் ரயில்(டிகோர்) டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








