கார்களுக்கான வாரண்டி- ஸ்பெஷல் ரிப்போர்ட் பகுதி-2

உங்கள் வாகனத்தில் ஏதாவது பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் வாரண்டி கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்திற்கு செல்லுங்கள். அங்கு வாகனத்தின் பிரச்னை குறித்து தெரிவிக்க வேண்டும். வாகனத்திலுள்ள பிரச்னையை பரிசோதித்து அது தயாரிப்பு நிலையில் எழுந்த குறைபாடாக இருந்தால் இலவசமாகவே சரிசெய்து தருவர்.
சர்வீஸ் மையத்தின் சேவையில் அதிருப்தி ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட கார் தயாரிப்பாளரின் வாடிக்கையாளர் உதவி மையத்தில் புகார் கொடுக்கலாம். அவர்களின் வழிகாட்டுதலின்படி வாரண்டி பெற வாய்ப்பு அதிகம்.
டீலரின் தாமதம்:
வாரண்டி காலம் முடிவடைவதற்கு முன்பே ஒரு பிரச்னையை சொல்லி அது சரி செய்யப்படாமல் வாரண்டி காலம் முடிவடைந்துவிட்டாலும் வாரண்டி கொடுப்பது தயாரிப்பாளரின் கடமை. எனவே, சர்வீஸ் மையத்தில் கொடுக்கப்படும் எழுத்துப் பூர்வமான ஆவணங்களை கவனமாக பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆவணத்தை காட்டினால் வாரண்டி முடிந்து விட்டால் கூட உங்கள் வாகனத்தின் பிரச்னையை இலவசமாகேவ சரி செய்து தருவது தயாரிப்பாளரின் கடமை. மேலும், சர்வீஸ் மையங்களில் ஏதெனும் தாமதம் ஏற்பட்டாலும் பிரச்னை செய்யாமல் எல்லாவற்றையும் எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.
முதல் 6 மாதங்கள்:
வாகனம் வாங்கி முதல் 6 மாதங்களில் ஏதெனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் தெரிவித்து விடுங்கள். அது தயாரிப்பு நிலை குறைபாடாக கருதி பிரச்னைக்குரிய பாகங்களை இலவசமாக மாற்றித் தருவதோடு, லேபர் கட்டணமும் இல்லாமல் சரி செய்து தருவதற்கு வாரண்டியில் வழியுண்டு.
வாரண்டி கார்டுடன் கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் விபர அறி்க்கை சட்ட மொழியில் இருக்கும் என்பதால் படிக்கும்போது புரியாமல் போகலாம். இதில், வாடிக்கையாளர்களை திசை திருப்பும் வகையிலான நிபந்தனைகள் இருக்கலாம். அது நம்மை ஏமாற்றும் வகையில் இருக்கும் வாசகங்கள் இருந்தாலும் சரி பரவாயில்லை.
வாரண்டி பெற முற்படும்போது சர்வீஸ் மையங்களில் கொடுக்கப்படும் ஆவணங்களை மட்டும் பத்திரமாக சேகரித்து வைப்பது நலம். எந்தவொரு சட்ட நுணுக்கத்தையும் எதிர்கொள்ள அதுதான் நம்மை பாதுகாக்கும் கருவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








