மழையின்போது கார், பைக் ஓட்டுவதற்கான டிப்ஸ்!
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கார், பைக் ஓட்டும்போது ஆபத்துக்களை தவிர்க்க, கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கி இருக்கிறோம்.
சென்னை உள்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த வேளையில், கார் மற்றும் பைக் உரிமையாளர்கள் வாகனத்தை பராமரிப்பதிலும், ஓட்டுவதிலும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். அதற்கான சில எளிய வழிகளை இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம்.

முதல் டிப்ஸ் உங்களுக்கு சற்று ஏமாற்றத்தை தரலாம். அதுதான் சிறந்த டிப்ஸாக இருக்க முடியும். ஆம். முடிந்தவரை மழை நேரத்தில் பயணத்தை ஒத்தி போடுவது நல்லது.
குறிப்பாக, நீண்ட தூர பயணங்களை இப்போது அறவே தவிர்ப்பது அவசியம். இல்லையெனில், அதிக ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அலுவலகம் செல்வதை ஒத்தி போட முடியுமா என்று கேட்பது புரிகிறது. ஆனால், மழை நேரத்தில் வாகனத்தை ஓட்டும்போது நிச்சயம் அது உயிருக்கு அபாயகரமானதாக அமையும் என்பதை மனதில் வைத்து முடிவு செய்யுங்கள். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பு இருப்பவர்கள், அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மழை குறைந்தவுடன் அல்லது, மழை இல்லாதபோது செல்லுங்கள். நன்கு அறிமுகமான சாலை வழியாகவே பயணிக்கவும். விரைவாக செல்லும் நோக்கில் குறுகலான சாலைகளில் செல்வதை தவிர்க்கலாம்.
Recommended Video


தண்ணீர் தேங்கியிருக்கும் சாலைகள் அபாயம் மிகுந்தவை. கார்கள் 12 இன்ச் உயரத்திற்கு தேங்கியிருக்கும் தண்ணீரை கடக்கும். அதேநேரத்தில், 6 இன்ச் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கும் சாலைகளிலும், 4 இன்ச் அளவுக்கு தண்ணீர் ஓடும் சாலைகளிலும் செல்வதை தவிர்க்கவும்.

கழிவுநீர் கால்வாய்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பதால், இந்த சாலைகளில் செல்வதை தவிர்த்து, சில கிலோமீட்டர் சுற்றி வந்தாலும் பரவாயில்லை. வேறு பாதையில் செல்லவும். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் தண்ணீர் தேங்கிய சாலைகளை தவிர்த்து விடுங்கள்.

தண்ணீர் தேங்கிய சாலைகளை கடக்கும்போது, எஞ்சின் பாகங்களில் தண்ணீர் புகும் வாய்ப்பும் உண்டு. இதனால், ஹைட்ரோக் என்ற தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதையும் மனதில் வையுங்கள். இதுபோன்ற சாலைகளை கடந்தே ஆக வேண்டியிருந்தால், முதல் கியரில் வைத்து 5 கிமீ வேகத்திற்கு மிகாமல் காரை செலுத்தவும்.

தண்ணீர் தேங்கிய சாலைகளை கடந்தவுடன் செய்ய வேண்டிய முதல் காரியம் என்ன தெரியுமா? பிரேக்கை ஒருமுறை பிடித்து பார்த்துக் கொண்டு அதன் பிறகு காரை தொடர்ந்து செலுத்தவும். சிலவேளைகளில் இதுபோன்ற தண்ணீரை கடந்து வரும்போது பிரேக் சிஸ்டம் செயல் இழந்து போக வாய்ப்புண்டு.
Trending On DriveSpark Tamil:

தண்ணீர் தேங்கிய இடங்களை கடக்கும்போது காரின் டயர்கள் தரை பிடிப்பு அற்று போகும் ஆபத்து உள்ளது. இதனை ஹைட்ரோப்ளேன் என்று குறிப்பிடுவதுண்டு. எனவே, தண்ணீர் தேங்கிய இடங்களை பார்த்தவுடன் வேகத்தை குறைத்து நிதானமாக கடக்கவும்.

மழை நேரத்தில் கார் பைக்கில் செல்வோர் மிக சீரான வேகத்தில் நிதானமாக ஓட்டுவது அவசியம். திடீர் பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும். மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து சாலையில் விழுந்து கிடக்கும் ஆபத்தும் உள்ளது. மின் வயர்களும் அறுந்து கிடக்க வாய்ப்புள்ளதால், கார், பைக்கில் செல்வோர் உஷாராக இருக்க வேண்டும்.

போதிய வரை முன்னால் செல்லும் வாகனங்களுடன் போதிய இடைவெளி விட்டு காரை செலுத்தவும். அவசரத்திற்கு பிரேக் பிடிப்பதற்கு வசதியாக இருக்கும்.

சப்வே எனப்படும் சுரங்கப் பாதைகள் வழியாக செல்வதை தவிர்ப்பதும் நல்லது. மழை அதிகம் இருந்தால், சாலை ஓரம் காரை ஓரம் கட்டிவிடுங்கள். மழை குறைந்தவுடன் பயணத்தை தொடரலாம். அதேபோன்று, மழையில் கார் ஓட்டும்போது ஹசார்டு சுவிட்சை ஆன்செய்து, நான்கு இண்டிகேட்டர்களையும் ஒளிர விட்டபடி செல்லவும்.

மழை பெய்யும்போது கார் ஓட்டும்போது மழை அளவுக்கு தக்கவாறு வைப்பர்களை இயக்க வேண்டும். அதிக மழை பெய்யும் சமயங்களில் வைப்பர்கள் செயலிழந்து போகும் அபாயமும் உண்டு. எனவே, வைப்பர்களை சரியான வேகத்தில் இயக்கவும்.

ஏசியை டீஃப்ராஸ்ட் மோடில் வைத்து இயக்கவும். இதனால், விண்ட்ஷீல்டில் வெண் பனி போன்று படருவதை தவிர்க்க முடியும். சில வேளைகளில் பனி படலம் போக வில்லையென்றால், ஹீட்டர் மோடில் வைத்து ஏசியை இயக்கவும்.

மழை இல்லாதபோது வீட்டிலிருந்து வெளியில் காரில் புறப்பட்டாலும், வைப்பர், ஹெட்லைட், இண்டிகேட்டர்கள் சரியாக ஒளிர்கிறதா என்று ஒருமுறை சரிபார்த்து கொண்டு புறப்படுங்கள். டயர்களும் பஞ்சர் இல்லாமல் இருக்கிறதா அல்லது தேய்மானம் அதிகம் இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ளவும். அதேபோன்று, காரில் ஏசி சரியாக இயங்குகிறதா என்பதையும் பார்த்து கொள்ளவும்.

இன்று இரவு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் இருப்போர் கார், பைக்குகளை மேடான இடங்களில் நிறுத்தி வைப்பது அவசியம். இல்லையெனில், உறவினர் அல்லது நண்பர்கள் வீடுகளில் நிறுத்தி வைத்து விடுங்கள். தெருவில் நிறுத்தி வைப்போர் மரங்கள் இல்லாத பகுதியில் நிறுத்தி வைக்கவும்.

மழையின்போது அவசரத்திற்கு வெளியில் செல்லும் சூழல் வரும் என்பதால், கார், பைக்கில் எரிபொருள் நிரப்பி வைப்பதும் நல்லது. காரில் டார்ச் லைட், பிஸ்கட் பாக்கெட்டுகளையும் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். மொபைல்போனில் இருக்கும் அவசர தொடர்புக்கான மொபைல்போன் எண்களை டைரியில் குறிப்பிட்டு வைத்துக் கொள்ளவும். அவசரத்திற்கு பயன்படும்.

இரவு நேரத்தில் வீடு திரும்புவோர் இரட்டிப்பு கவனத்துடன் கார், பைக்கை ஓட்டவும். வேகத்தை குறைத்து விழிப்புடன் ஓட்டுவது சிறந்தது. முன்கூட்டியே அலுவலகத்திலிருந்து புறப்பட்டுவிடுங்கள்.

வழியில் ஏதேனும் விபத்தில் சிக்கிக் கொண்டால், சர்வீஸ் மையங்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். வழியில் மின்கம்பம் அல்லது மரம் முறிந்து விழுந்து கிடந்தால், தொடர்ந்து செல்லாமல், அரசு அவசர உதவி மையங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து அவ்வழியே பயணிப்போரின் பாதுகாப்புக்கு உறுதி செய்ய உதவி புரியலாம்.
Trending On DriveSpark Tamil:
தலை சுற்றவைக்கும் முகேஷ் அம்பானி கார் டிரைவரின் மாத சம்பளம்!


Click it and Unblock the Notifications








