அமித் ஷா மாஸ்டர் பிளான்.. ஓபிஎஸ்-க்கு ஆளுநர் பதவி? விரைவில் வரப்போகும் அறிவிப்பு? மொத்தமாக மாறுது
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக, ஆளும் திமுகவை வீழ்த்த வேண்டுமானால் அதிமுகவின் பிளவுபட்ட அணிகளை ஒன்றிணைப்பதே ஒரே வழி என்பது பாஜகவின் கணக்காக உள்ளது.
சமூக வாக்கு வங்கி மற்றும் அரசியல் சிக்கல்கள்
கொங்கு மண்டலத்தின் பலமான வாக்கு வங்கியைக் கொண்ட கொங்கு சமூகமும், தென் தமிழகத்தின் தேர்தல் வாக்கரசியலில் முதுகெலும்பாக விளங்கும் முக்குலத்தோர் சமூகமும் கைகோர்த்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்று பாஜக மேலிடம் கருதுகிறது. இருப்பினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை (OPS) மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்குத் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

மறுபுறம், ஓபிஎஸ் அவர்கள் தனியாகப் புதிய கட்சி தொடங்கி டிடிவி தினகரனுடன் இணைந்து கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க பாஜக ஒரு புதிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஓபிஎஸ்-க்கு ஆளுநர் பதவி: பாஜகவின் 'மாஸ்டர் பிளான்'
ஓபிஎஸ் அவர்களை கௌரவமான முறையில் அரசியலில் இருந்து வழிநடத்த, அவருக்கு ஒரு மாநிலத்தின் ஆளுநர் பதவியை வழங்க பாஜக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஒருவர் அளித்த தகவலில்,
"ஓபிஎஸ் அவர்களை ஆளுநராக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் எவ்விதத் தடையும் இருக்காது. இந்த நியமனம் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களையும், அவரது சமூகத்தினரையும் திருப்திப்படுத்தும். இது தொடர்பான இறுதி முடிவைப் பிரதமர் மோடி எடுப்பார்," என்று தெரிவித்துள்ளார்.
காலியாக உள்ள ஆளுநர் பணியிடங்கள்
தற்போது நாட்டில் இரண்டு முக்கிய மாநிலங்களில் ஆளுநர் பணியிடங்கள் காலியாகவோ அல்லது கூடுதல் பொறுப்பிலோ உள்ளன:
மணிப்பூர் / நாகாலாந்து: தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் இல. கணேசன் அவர்கள் ஆளுநராகப் பணியாற்றி வந்த நிலையில், ஆகஸ்ட் 2025-ல் காலமானார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஒரு தமிழரை நியமிக்க மத்திய அரசு திட்டமிடலாம்.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் துணை குடியரசு தலைவராகப் பதவியேற்றார். இதனால் அந்த மாநில ஆளுநர் பொறுப்பைத் தற்போது குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகிறார்.
இந்தச் சூழலில், ஓபிஎஸ் அவர்களுக்கு மணிப்பூர் அல்லது மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒன்றில் ஆளுநர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.
கூட்டணியில் இதன் தாக்கம் என்ன?
ஓபிஎஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டால், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்கு இருந்த நெருக்கடி குறையும். அதேசமயம், ஓபிஎஸ் ஆதரவு வாக்குகளைச் சிதறாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர இது ஒரு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவர் சமூக வாக்கு வங்கி (தென் தமிழகம்)
ஓ. பன்னீர்செல்வம் (OPS) அந்தச் சமூகத்தின் மிக முக்கியமான அரசியல் முகமாகப் பார்க்கப்படுகிறார். ஓபிஎஸ் அவர்களை ஆளுநராக நியமிப்பதன் மூலம், அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டதாக அச்சமூக மக்களிடையே ஒரு பிம்பத்தை உருவாக்க முடியும்.
இது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே உள்ள அதிருப்தியைத் தணிக்கும். அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டாலும், தேசிய அளவில் அவருக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, தென் மாவட்டங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி மீதான நன்மதிப்பை உயர்த்தும்.
கொங்கு சமூக வாக்கு வங்கி (மேற்கு தமிழகம்)
எடப்பாடி பழனிசாமி (EPS) கொங்கு மண்டலத்தில் முக்கியமான தலைவராக உள்ளார். ஓபிஎஸ் அவர்களைக் கட்சிக்குள் மீண்டும் சேர்ப்பதை இச்சமூகத்தைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் விரும்புவதில்லை.
ஓபிஎஸ் ஆளுநராகச் சென்றுவிட்டால், அதிமுகவில் இபிஎஸ்-ன் ஒற்றைத் தலைமைக்கு இருந்த கடைசி முட்டுக்கட்டையும் நீங்கும். இது மேற்கு மாவட்டங்களில் இபிஎஸ் தனது முழுக் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்த உதவும், இதனால் தேர்தல் பணிகளில் குழப்பம் இருக்காது.
Credit: Oneindia


Click it and Unblock the Notifications








