WPL 2026: சரித்திர சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்.. 1000 ரன்கள் கிளப்பில் இணைந்த முதல் இந்தியர்
நவி மும்பை: பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய சரித்திர சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காட்டடி அடித்த அவர், மகளிர் ஐபிஎல் வரலாற்றில் 1000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 193 ரன்கள் என்ற இமாலய இலக்கை மும்பை இந்தியன்ஸ் துரத்தியது. அணியை முன்னின்று வழிநடத்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத், தனது வழக்கமான பாணியில் ரன் குவித்தார்.

இந்த போட்டிக்கு முன்பு 1000 ரன்களை எட்ட ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. போட்டியின் 18-வது ஓவரில் ராஜேஸ்வரி கெய்க்வாட் வீசிய பந்துவீச்சில் ஒரு பவுண்டரியை விளாசி, இந்த மைல்கல்லை அவர் எட்டினார். இதன் மூலம் மகளிர் ஐபிஎல் வரலாற்றில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை மற்றும் முதல் கேப்டன் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் படைத்தார்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இங்கிலாந்து வீராங்கனை நாட் சீவர்-ப்ரண்டிற்கு பிறகு இந்தச் சாதனையைச் செய்யும் இரண்டாவது வீராங்கனை இவராவார்.
டாப் 5 ரன் மெஷின்கள்:
பெண்கள் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
நாட் சீவர்-ப்ரண்ட் (மும்பை இந்தியன்ஸ்) - 1101 ரன்கள்
ஹர்மன்ப்ரீத் கவுர் (மும்பை இந்தியன்ஸ்) - 1018 ரன்கள்
மெக் லானிங் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) - 996 ரன்கள்
எல்லிஸ் பெர்ரி (ஆர்சிபி) - 972 ரன்கள்
ஷஃபாலி வர்மா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) - 887 ரன்கள்
மெக் லானிங் இன்னும் 4 ரன்கள் எடுத்தால் 1000 ரன்கள் கிளப்பில் இணையும் 3-வது வீராங்கனை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 193 ரன்களை சேஸ் செய்யும்போது மும்பை அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. பவர் பிளேயில் ஹேலி மேத்யூஸ் ஆட்டமிழந்தார். ஆனால், ஹர்மன்ப்ரீத் கவுர் களத்திற்கு வந்ததும் ஆட்டத்தின் போக்கே மாறியது. அமன்ஜோத் கவுருடன் இணைந்து அணியை மீட்ட அவர், பின்னர் நிக்கோலா கேரியுடன் சேர்ந்து குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
இறுதியில் 43 பந்துகளில் 71 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் வென்று (8-0) தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளது.
ஏற்கனவே 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணிக்குக் கோப்பையை வென்று தந்தவர் ஹர்மன்ப்ரீத். இந்த சீசனுக்கு முன்பாக 2.50 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்ட அவர், நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்.
WPL 2026: ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்மன்ப்ரீத்.. 193 ரன்களை ஈசியாக சேஸ் செய்த மும்பை.. குஜராத் சோகம்
சில தினங்களுக்கு முன்பு டெல்லி அணிக்கு எதிராக 74 ரன்கள் விளாசியிருந்த நிலையில், தற்போது குஜராத் அணிக்கு எதிராகவும் மேட்ச் வின்னராக ஜொலித்துள்ளார். இந்த மைதானத்தில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.
Credit: Mykhel


Click it and Unblock the Notifications








