IND vs ENG Final: "இந்த வெற்றிக்கு காரணம் இவங்க தான்.." உலகக்கோப்பை நாயகன் வைபவ் சூர்யவன்ஷி உருக்கம்
ஹாராரே: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்குக் கோப்பையை வென்று தந்த கையோடு, தனக்குக் கிடைத்த விருதுகளை அணியின் உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறி வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பைத் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டதற்காகத் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

விருது யாருக்குச் சொந்தம்?
இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "இந்தத் தருணத்தை எட்டுவதற்கு நாங்கள் கடந்த 8, 9 மாதங்களாகக் கடுமையாக உழைத்துள்ளோம். ஆசிய கோப்பைத் தொடரில் இருந்தே இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. வெளிநாட்டுச் சூழலில் எங்களை மிகச் சிறப்பாகப் பார்த்துக்கொண்ட அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் உழைப்பு அளப்பரியது.
அவர்களின் அயராத உழைப்புதான் எங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அதனால், எனக்குக் கிடைத்த இந்த ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை எங்கள் அணியின் உதவியாளர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
இந்தியில் பேசிய வைபவ்
பரிசளிப்பு விழாவில் வைபவ் சூர்யவன்ஷி இந்தியில் பேசினார். அவர் கூறிய கருத்துக்களை அணியின் மற்றொரு வீரரான ஆரோன் ஜார்ஜ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தொகுப்பாளரிடம் கூறினார்.
தொடர்ந்து பேசிய வைபவ், "நாங்கள் அதிகப்படியான அழுத்தத்தை எடுத்துக்கொள்ளவில்லை. எங்கள் மீதும், எங்கள் வழிமுறைகள் மீதும் நம்பிக்கை வைத்தோம். தொடக்கம் முதலே ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கையாண்டோம். அதுவே எங்களுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது" என்றார்.
U19 WC Final: பெரிய மேட்ச் ஆடப் பிறந்தவன்.. வைபவ் சூர்யவன்ஷி செய்தது சாதாரண விஷயமே இல்லை - அஸ்வின்
தலையைச் சொறிந்த இங்கிலாந்து கேப்டன்
வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் தாமஸ் ரீவ் வியந்து போய்ப் பேசினார் "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் தலையைச் சொறிந்து கொண்டுதான் நின்றோம். வைபவ் அடிக்கத் தொடங்கிய பிறகு, அவரை எப்படி நிறுத்துவது, என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. அவர் எங்களைத் திணறடித்துவிட்டார்" என்று இங்கிலாந்து கேப்டன் வெளிப்படையாக பேசினார்.
IND vs ENG U19 Final: மாபெரும் வரலாறு படைத்த இந்திய அணி.. 6வது U19 உலகக்கோப்பை வென்று சாதனை
இந்தத் தொடர் முழுவதும் வைபவ் சூர்யவன்ஷி மொத்தம் 439 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இளம் வயதிலேயே அவர் காட்டிய பக்குவமும், அணியின் உதவியாளர்களுக்கு அவர் கொடுத்த அங்கீகாரமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Credit: Mykhel


Click it and Unblock the Notifications








