IND vs NED: இந்திய அணியில் 3 வீரர்கள் நீக்கம்.. அபிஷேக் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பு? பிளேயிங் 11!
அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. குரூப் ஏ பிரிவில் ஏற்கனவே ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்து சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட இந்திய அணி, எந்தவித அழுத்தமும் இன்றி இந்தப் போட்டியில் களமிறங்குகிறது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்திய அணி நிர்வாகம் தனது ஆடும் லெவனில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
அடுத்து வரும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் மிகவும் முக்கியமானவை என்பதால், அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம்.
உள்ளே வரும் 3 வீரர்கள்
இவர்களுக்குப் பதிலாக முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. முகமது சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர்கள். எனவே, அகமதாபாத் மைதானம் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமானது என்பது அணிக்குக் கூடுதல் பலம்.
அர்ஷ்தீப் சிங் பாகிஸ்தான் போட்டிக்கு முந்தைய போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டவர். பாகிஸ்தான் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், இன்று மீண்டும் அவர் தனது திறமையை நிரூபிக்கக் காத்திருக்கிறார்.
அபிஷேக் சர்மா நீக்கப்படுவாரா?
உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, கடந்த சில போட்டிகளில் ரன் குவிக்கத் திணறி வருகிறார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். இதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், சூப்பர் 8 சுற்றுக்கு முன்பு அவர் ஃபார்முக்குத் திரும்ப வேண்டியது அவசியம் என்பதால், அவருக்கு இந்தப் போட்டியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல பேட்டிங்கில் சொதப்பி வரும் திலக் வர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் இந்த போட்டியைப் பயன்படுத்தி ரன் குவிக்க முயற்சிப்பார்கள்.
இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
Credit: Mykhel


Click it and Unblock the Notifications








