Rajinikanth: ரஜினியை தாக்கிய அதிமுகவினர்.. காப்பாற்றியது யார் தெரியுமா? இப்படி எல்லாம் நடந்துச்சா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கடந்த காலங்களில் பல நெருக்கடிகளையும் இன்னல்களையும் சந்தித்துள்ளார். திரைத்துறையில் மட்டும் இல்லாமல் அரசியல் ரீதியாகவும் பெரும் நெருக்கடிகளை அவர் எதிர்கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்த்துக்கும் கடந்த காலங்களில் பனிப்போர் நடந்து கொண்டே இருந்துள்ளது. 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நேரடியாகவே அதிமுகவை எதிர்த்தும் திமுகவை ஆதரித்தும் கருத்து தெரிவித்தார். குறிப்பாக,"ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுள் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது" என்று அவர் சொன்னது திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
இப்படி இருக்கையில் ஒருமுறை அதிமுகவினரால் ரஜினி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், அப்போது அவரைக் காப்பாற்றியது யார் என்பது தொடர்பாகவும் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது அளிப்பட்டதை அடுத்து அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது நான் பேசிய போது மிகவும் ஆவேசமாக ஜெயலலிதாவை விமர்சித்து பேசினேன். ஆனால் எனக்கு அது பெரிதாக தெரியவில்லை.
நான் பேசி முடித்த பின்னர், ஏன் இப்படி பேசினீர்கள் என்று ஸ்ரீதேவி கேட்டார். நடிகர்களை திறந்தவெளி வேனில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டபோது, விஜயகுமார் என்னை வரவேண்டாம் என்று கூறினார். ஆனால் நான் இதில் என்ன இருக்கிறது, நான் வருகிறேன் என்று கூறினேன். நான் பேசியதில் அதிமுக தொண்டர்கள் என் மீது கோபத்தில் உள்ளார்கள்.

தாக்கிய அதிமுகவினர்: நான் எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் இருக்கும்போது சிலர் என்னை இந்த பக்கம் போகனும் சார் என்று அழைத்துச் செல்கிறார்கள், அதன் பின் சிலர் இந்த பக்கம் போகனும் என்று அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் என்னை அடிக்கிறார்கள், கிள்ளுகிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. சிலர் திட்டுகிறார்கள், கல்லால் அடிக்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. உடனே ஒரு குரல் மிகவும் வேகமாக கேட்கிறது, யார் என்று பார்த்தால் அது பாக்யராஜ்.
காப்பாற்றியது பாக்யராஜ்: சூழலைப் புரிந்து கொண்ட அவர், என்னை அதிமுகவினர் தாக்குகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டும், அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரியையும் கடுமையாக திட்டி, காவல்துறை வாகனத்திலேயே என்னை என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். என்னை அழைத்துச் செல்லவில்லை என்றால் நாளைக்கு மீடியாவில் உங்கள் பெயரையும் வண்டி எண்ணையும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார். அதன் பின்னர்தான் அந்த காவல் அதிகாரி என்னை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்" என்று பகிர்ந்து கொண்டார். அண்மையில் திரைக்கதை மன்னன் பாக்யராஜின் திரையுலக வாழ்க்கையில் 50வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக கலாட்டா தமிழ் சேனல் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். இந்த தகவல் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
Credit: Filmibeat


Click it and Unblock the Notifications








