வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்லத் தூண்டும் சாலைகள்
இயற்கையுடன் கைகோர்த்து செல்வதற்கு ஏற்ற சாலைகள் உலகின் அனைத்து நாடுகளிலும் விரவி கிடக்கின்றன. ஆனால், சில சாலைகள் சென்றடைய வேண்டிய இடத்தை மட்டுமில்லாமல், பயணத்தின்போது மனதிற்கு ஒருவித குதூகலத்தையும், புத்துணர்ச்சியையம் தருபவையாக இருக்கின்றன. சாவதற்குள் இந்த சாலையில் ஒருமுறையாவது காரை ஓட்ட வேண்டும் அல்லது பயணித்துவிட வேண்டும் என்று மனதிற்குள் அழுத்தம் தரும் சாலைகளின் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வாகன நெரிசலையும், சிக்னல்களையும் பார்த்து கண்கள் புளித்து போன நமக்கு இதுபோன்ற சாலைகள் நிச்சயம் மனதிற்கு இதம் தருபவையாக இருக்கும். சாவதற்குள் நேரில் செல்ல முடியவில்லையென்றாலும், நம் ஸ்லைடரில் வழியாக அந்த சாலையில் ஒரு ட்ரிப் அடிக்கலாம் வாருங்கள்.

பட்டியல்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சாவதற்குள் ஒருமுறையாவது சென்றுவிட தூண்டும் 20 சாலைகளின் தகவல்களையும், படங்களையும் காணலாம்.

1.ஃபயர் ரோடு, அமெரிக்கா
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள நெவடா பகுதியில் உள்ள ஃபயர் ரோடு என்றழைக்கப்படும் சாலை மிகவும் பிரசித்தி பெற்றது. சாலையின் இருபுறமும் சூழந்து நிற்கும் செந்நிற மணற்குன்றுகள் சூரிய ஒளி படரும்போது தீ ஜூவாலை போல் காட்சி தருவதால் இந்த சாலைக்கு ஃபயர் ரோடு என்ற பெயர் வழங்கப் பெறுகிறது.
Photo Credit: Jeff Banke/Shutterstock

2.அட்லாண்டிக் சாலை, நார்வே
நார்வே நாட்டின் அட்லாண்டிக் சாலையும் கார் ஓட்டுபவர்களின் கனவில் நித்தமும் வந்து போகும் சாலைகளில் ஒன்று. அட்லாண்டிக் கடலை ஒட்டிச் செல்லும் இந்த சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் 7 பாலங்கள் கார் ஓட்டுபவர்களுக்கு த்ரில்லையும், புதிய அனுபவத்தையும் வழங்கும்.
Photo Credit:Ivan Tsvetkov/Shutterstock

3. இன்டர்ஸ்டேட் 70, அமெரிக்கா
அமெரிக்காவின் யுட்டா பகுதியில் உள்ள இன்டர்ஸ்டேட் 70 என்ற நெடுஞ்சாலை பயணத்தின்போது களிப்பை வழங்கும் சாலைகளில் ஒன்று. கம்பளம் விரித்தது போன்ற பனிபடர்ந்த மலைகளுக்கு ஊடாக செல்லும் இந்த சாலையும் சாவதற்குள் செல்ல வேண்டிய சாலைகளில் ஒன்றாக கூறலாம்.
Photo Credit:Colin D. Young/Shutterstockk

4. காரகோரம் சாலை
இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதியையொட்டி அமைந்துள்ள காரகோரம் மலைப்பகுதியில் சீனாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் காரகோரம் சாலையும் சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற சாலைகளில் ஒன்று. 1960 முதல் 70 வரை அமைக்கப்பட்ட இந்த மலைச்சாலையில் செல்லும்போது மனதுக்கு ஏக குளிர்ச்சியை தரும் பனிமலைச்சிகரங்களை கண்டு ரசித்துக் கொண்டே செல்லலாம். உலக வெப்பமயமாதல் காரணமாக உலகிலுள்ள பனிச்சிகரங்கள் உருகி வரும் நிலையில், காரகோரத்தில் உள்ள பனிமலைகள் இறுகி வருவதாகவும், விரிவடைந்து வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Photo Credit: Yongyut Kumsri/Shutterstock

5.மில்ஃபோர்டு, நியூசிலாந்து
நியூசிலாந்து நாட்டின், ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் உள்ள ஃபியர்டுலேண்ட் தேசிய பூங்காவின் ஊடாக 230 கிமீ தூரத்துக்கு நீளும் இந்த சாலை மில்ஃபோர்டு சவுண்ட் என்ற இடத்தை இணைக்கிறது. இந்த இடம் சினிமா படப்பிடிப்புக்கு ஏற்றத் தளமாக விளங்குகிறது.
Photo Credit:Yongyut Kumsri/Shutterstock

6.புளூரிட்ஜ் பார்க்வே, அமெரிக்கா
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்திலுள்ள புளூரிட்ஜ் பார்க்வே என்ற சாலையும் இயற்கையை ரசித்துக் கொண்டே செல்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. சராசரி வாழ்க்கையிலிருந்து நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை வழங்கும்.
Photo Credit:Chee.hong /Flicker

7. சாப்மேன்ஸ் பீக், தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்காவின் சாப்மேன்ஸ் பீக் டிரைவ் என்றழைக்கப்படும் இந்த சாலையின் ஒருபக்கம் செங்குத்து மலைகளும், மறுபக்கம் கடலும் நம்மை புதிய உலகுக்கு அழைத்துச் செல்லும்.
Photo Credit:MarkVanDykePhotography/Shutterstock

8.கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் கிரேட் ஓசன் ரோடு சாலையும் சாவதற்குள் ஒருமுறையாவது செல்லத் தூண்டும் சாலை. சுண்ணாம்பு பாறைகளும், கடலும் சங்கமிக்கும் இடத்தின் ஊடாக செல்லும் இந்த சாலையும் உங்களுக்குள் ஆவலைத் தூண்டும்.
Photo Credit:Matej Hudovernik/Shutterstock

9.கல் டி லிசரேன், பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சாலையும் சாவதற்குள் நம்மை அழைக்கும் சாலைகளில் முக்கியமானது. கோடைக்காலத்தில் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் இந்த சாலையில் பலமுறை டூர் டி பிரான்ஸ் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
Photo Credit:Dmitriy Komarov/Shutterstock

11.நார்த் யங்கஸ் ரோடு, பொலிவியா
உலகின் அதிபயங்கர சாலையாக குறிப்பிடப்படும் இந்த குறுகிய சாலை சாகசப் பிரியர்களின் இலக்காக விளங்குகிறது. ஆபத்தான வளைவுகள், அதளபாதாளங்கள் நிறைந்த இந்த சாலையும் நம்மை அழைக்கிறது.
Photo Credit:Soumei Baba/Flickr

11. ஹானா ஹைவே, ஹவாய்
அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் செல்லும் ஹானா ஹைவே என்ற கடற்கரையை தொட்டுச் செல்லும் நெடுஞ்சாலையில் 620 வளைவுகளும், 59 பாலங்களும் உள்ளன. நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த வனப்பகுதி, மறுபுறம் அமைதியான கடல் என வசீகரிக்கிறது.

12. ரூட்டா 40, அர்ஜெண்டினா
அர்ஜென்டினாவிலுள்ள ரூட் 40 என்ற எண் கொண்ட நெடுஞ்சாலை 4,850 கிமீ தூரத்துக்கு நீளும் நெடுஞ்சாலையும் நம்மை வா வா என்று அழைக்கிறது. இந்த சாலையில் குறுக்கே 18 ஆறுகள் கடந்து செல்கின்றன. 20 தேசிய பூங்காக்கள் அமைந்துள்ளன.
Photo Credit:Ted/Flickr
Photo Credit:

13. ட்ரோலிங்ஸ்டன் ரோடு, நார்வே
மலைமீது ஏணியில் ஏறுவது போன்ற அமைப்புடன் காணப்படுவதால் ட்ரோல் லேடர் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் குறுகலான இந்த சாலை அதளபாதாளத்தையும் கொண்டிருப்பதால் டிரைவிங்கின்போது த்ரில்லை தரும். மலை உச்சியை தொடுபவர்களுக்கு பரிசாக 1,050 அடி உயரம் கொண்ட ஸ்டிக்ஃபாஸன் நீர் வீழ்ச்சியின் தரிசனத்தை காணலாம்.
Photo Credit:Wybren/Flickr

14. ஜெபல் ஹபீத் மவுன்டெயின் ரோடு, அபுதாபி
ஐக்கிய அரபு நாட்டின் இரண்டாவது உயரமான மலைப்பகுதியான ஜெபல் ஹபீத் மலை மீது அமைந்திருக்கும் சாலையும் கார் ஓட்டிச் செல்வதற்கான சிறந்த சாலை. மதிய உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டால் சூரிய அஸ்தமனத்தின்போது மலை உச்சியை எட்டிவிடலாம்.
Photo Credit:Awiemuc/Flickr

15. மிதக்கும் சாலை, அமெரிக்கா
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கடல் வழியாக அமைக்கப்பட்டிருக்கும் ஓவர்சீஸ் ஹைவேயில் நிச்சயம் ஒருமுறை செல்லத் தூண்டுகிறது. இந்த சாலையில் கார் ஓட்டும்போது கடலில் மிதந்து செல்வது போன்ற அனுபவத்தை பெற முடியும். சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்க்கும்போது இந்த ஜென்மத்தின் பலனை அடைந்துவிடலாம். 180 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையில் 42 கடல் வழி பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Photo Credit:Nepenthes/Wikimedia Commons

16. ஏ82 ரோடு, ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து நாட்டின் ஏ82 சாலையும் வாகன ஓட்டிகளின் மனதை கரைய வைக்கும் ஆற்றல் கொண்டது. ரனோக் மூர் பாலத்தையொட்டி எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணலாம்.
Photo Credit:Sathish S/Flickr

17.கபோட் ட்ரெயில், கனடா
கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியாவில் உள்ள கபோட் ட்ரெயின் என்ற இயற்கை எழில் சூழ்ந்த சாலையும் வாகன ஓட்டிகளின் வேடங்தாங்கலாக புகழப்பெறுகிறது. கடல், வனம் என அனைத்தின் கலவையும் கலந்து நம் மனதுக்கு இதம் தரும் சாலையாக இது திகழ்கிறது.
Photo Credit:Targn Pleiades/Shutterstock

18. சீனிக் பைவே, அமெரிக்கா
அமெரிக்காவின், அரிசோனா மாகாண எல்லைக்கும், யுட்டா பள்ளத்தாக்குப் பகுதியையும் இணைக்கும் சீனிக் பைவே 163 சாலையும் புதிய டிரைவிங் அனுபவத்தை வழங்கும். பாலைவனமும், ஆங்காங்கே பாறைகளும் எழும்பி நிற்கும் பகுதிகளை இணைத்து இதம் தரும் சாலையாக இதனை குறிப்பிடலாம்.
Photo Credit:Natalia Bratslavasky/Shutterstock

19. ஒபெரால்ப் பாஸ், சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்திருக்கும் ஒபெரால்ப் பாஸ் வாகன ஓட்டிகளை கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாக கூறலாம். கடல்மட்டத்திலிருந்து 6,706 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சாலை கோடைகாலத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது. அதேவேளை, குளிர்காலத்தில் ரயில் மூலம் இந்த இடத்திற்கு வரமுடியும்.
Photo Credit:Al King/Flickr

20. ரோத்தங் பாஸ்
இந்தியாவில் இயற்கை எழில் கொஞ்சும் சாலைகளுக்கு பஞ்சமில்லை. அதில், ஒன்றை உதாரணமாக இந்த பட்டியலில் வழங்கியுள்ளோம். ரோத்தங் பாஸ் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் சாலையும் சாகசப் பிரியர்களின் கனவு சாலையாக குறிப்பிடப்படுகிறது. பனிச்சிகரங்கள், விண்ணை முட்டும் மலைப்பகுதிகள் என மனித இனத்திற்கு எச்சரிக்கை தரும் இயற்கையின் அமைப்பை அங்கே காணலாம்.
Photo Credit:Iryna Rasko/Shutterstock

விந்தையான சாலைகள்
உலகின் விந்தையான சாலைகள் பற்றிய செய்தித் தொகுப்பை காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








