நிலவுக்கு செலுத்தப்படும் சந்திராயன் -2 விண்கலம் குறித்த சிறப்பு தகவல்கள்!
விரைவில் சந்திரனுக்கு செலுத்தப்பட இருக்கும் புதிய சந்திராயன்-2 விண்கலம் பற்றிய சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
பூமியின் துணைக் கோளான சந்திரன் பற்றிய ஆய்வு செய்வதற்காக, 2008ம் ஆண்டு அக்டோபர் 22ந் தேதி சந்திராயன்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 14ந் தேதி அந்த விண்கலமானது, நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

சந்திராயன்-1 விண்கலம் மூலமாக பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தன. சந்திரனின் மேற்பரப்பில் பனிக்கட்டிகள் புதைந்திருப்பதை சந்திராயன்-1 விண்கலம் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.
2 ஆண்டுகள் நிலவில் ஆய்வுகள் செய்யும் இலக்குடன் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 விண்கலம் 315 நாட்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஆனால், 95 சதவீத பணிகளை நிறைவு செய்ததால், அந்த திட்டம் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது.

இதனிடையே, சந்திராயன்-1 விண்கலத்தின் ஆர்பிட்டர் சாதனத்தை நவீன ரேடார் சாதனங்கள் மூலமாக அமெரிக்காவின் நாசா அமைப்பு தேடியது. அதில், இன்னமும் அந்த ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவது தெரிய வந்துள்ளது. எனினும், அது கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்துவிட்டது.

மேலும், சந்திராயன்-1 விண்கலம் மூலமாக உலக அரங்கில் விண்வெளி ஆய்வில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றது. அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, நிலவுக்கு விண்கலம் அனுப்பிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இந்த நிலையில், நிலவை பற்றி மேலும் ஆய்வுகளை நடத்துவதற்காக புதிய விண்கலத்தை இந்திய விண்வெளி மையான இஸ்ரோ நிலவுக்கு அனுப்ப இருக்கிறது. இந்த புதிய விண்கலம் சந்திராயன் -2 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய விண்கலம் பற்றிய சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சந்திராயன்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-II ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்த விண்கலமானது சந்திராயன்-1 விண்கலத்தை விட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

சந்திராயன் -2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய மூன்று முக்கிய பாகங்களாக பிரித்து கூறப்படுகிறது. ஆர்பிட்டர் பாகமானது, சந்திரனில் இருந்து 100 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும். அதிலிருந்து, லேண்டர் சாதனம் தனியாக பிரிந்து சந்திரன் மேற்பரப்பு நோக்கி இயக்கப்படும்.

சந்திராயன்-1 விண்கலம் 'க்ராஷ் லேண்டிங்' முறையில் தரை இறக்கப்பட்டது. ஆனால், சந்திராயன்-2 விண்கலத்தை 'சாஃப்ட் லேண்டிங்' முறையில் தரை இறக்கப்படும். அதாவது சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர் கருவிகள் மூலமாக சந்திரன் மேற்பரப்பில் மெதுவாக தரை இறக்க முடிவு செய்துள்ளனர்.
Trending On DriveSpark Tamil:
Recommended Video


பின்னர், அதிலிருக்கும் ரோவர் என்ற வாகனம் மூலமாக நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சந்திராயன்-2 விண்கலமானது, 2018 மார்ச் மாதத்திற்குள் விண்ணுக்கு செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சந்திராயன்-2 விண்கலத்தை செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன.
இதற்காக, சந்திரனின் மேற்பரப்பு போன்ற, செயற்கையான நிலவின் மேற்பரப்பு மற்றும் பள்ளம் மேடான பகுதிகள் உருவாக்கப்பட்டு லேண்டர்களில் பொருத்தப்பட்டு இருக்கும் சென்சார்களின் செயல்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ரோவர் சாதனம், சந்திரனின் மேற்பரப்பில் எவ்வாறு ஆய்வுகள் மேற்கொள்ளுமோ, அதேபோன்ற செயற்கை சோதனை மையத்தில் வைத்து ரோவர் சாதனமும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ரோவர் சாதனமானது, 6 சக்கரங்களை கொண்டது. இது செமி ஆட்டோனாமஸ் கட்டுப்பாட்டு நுட்பத்தை பெற்றிருக்கிறது.

20 கிலோ எடை கொண்ட இந்த ரோவர் சாதனம் சூரிய மின்சக்தி மின்சாரம் மூலமாக இயங்கும். பூமியிலிருந்து இதன் இயக்கத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டுப்படுத்துவர்.

ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது என நம் நாட்டின் இன்றியமையாத பாதுகாப்பு விஷயங்களில் ரஷ்யா உதவி வருகிறது. அதேபோன்று, இந்த சந்திராயன்-2 விண்கலத்தை தயாரிப்பதிலும் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையம் உதவி செய்துள்ளது.

ஆம். இந்த சந்திராயன்-2 விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டதுதான். ஆனால், லேண்டர், ரோவர் சாதனங்களுக்கான முக்கிய உதிரிபாகங்களை ரஷ்யா வழங்கி இருக்கிறது. ஆனால், ஒப்பந்தம் செய்தபோது, ஆர்பிட்டர் சாதனத்தை நீங்களே தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிடம் கூறி விட்டது.

எனினும், இந்த திட்டம் முழுக்க முழுக்க இந்தியாவின் சொந்த முயற்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.425 கோடி மதிப்பீட்டில் இந்த சந்திராயன்-2 விண்கலம் தயார் செய்யப்பட்டு, இன்னும் சில மாதங்களில் நிலவு நோக்கி செலுத்தப்பட உள்ளது. சந்திராயன்-2 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்யாயத்தை எழுதும் என்று நம்பலாம்.
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications