தண்ணீரிலும் சீறப்போகும் அஸ்டன் மார்ட்டின்... புதிய அதிவேக படகை அறிமுகம் செய்தது!
அதிவேக கார் தயாரிப்பில் புகழ்பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் புதிய அதிவேக படகு கான்செப்ட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த மாதம் 27ந் தேதி இங்கிலாந்தின் கேடனிலுள்ள அஸ்டன் மார்ட்டின் டிசைன் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய அதிவேக படகின் படங்கள் வெளியிடப்பட்டன. விரைவில் தயாரிப்புக்கு செல்ல இருக்கும் இந்த புதிய அதிவேக படகின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

படகின் பெயர்
இந்த புதிய அதிவேக படகிற்கு AM37 என்று பெயரிடப்பட்டுள்ளது. அஸ்டன் மார்ட்டினின் குறியீட்டுப் பெயராக ஏஎம் என்ற எழுத்துக்களும், 37 என்பது இந்த படகின் 37 அடி நீளத்தையும் குறிக்கிறது.

டிசைன்
அஸ்டன் மார்ட்டின் டிசைன் பிரிவு இயக்குனர் மரேக் ரிச்மேன் தலைமையில் ஒன்- 77, ரேபிட், வான்கிஷ் மற்றும் வல்கன் ஆகிய பல புதிய கார் மாடல்கள் உருவானது. அவரது தலைமையின் கீழ்தான் இந்த புதிய அதிவேக படகும் உருவாகியுள்ளது. மேலும், அஸ்டன் மார்ட்டின் கார்களில் இருக்கும் டிசைன் தாத்பரியங்களை இந்த அதிவேக படகிலும் கையாண்டிருக்கின்றனர். இதனால், படகின் ஒவ்வொரு பகுதியும் அஸ்டன் மார்ட்டின் பிராண்டை பரைசாற்றும் பேட்ஜ்களும், டிசைன் தாத்பரியங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன.

எஞ்சின்
மெர்குரி எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. முதல்முதலாக தயாரிக்கப்பட இருக்கும் அஸ்டன் மார்ட்டின் அதிவேக படகில் 570எச்பி பவரை அதிகபட்சமாக அளிக்கக்கூடிய பெட்ரோல் எஞ்சின் இருக்கும். பின்னர், 662 எச்பி பவரை அதிகபட்சம் அளிக்கக்கூடிய எஞ்சின் கொண்டதாக வெளியிடப்பட உள்ளது.

அதிகபட்ச வேக திறன்
மணிக்கு அதிகபட்சமாக 111.12 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய திறன் பெற்றது இந்த அதிவேக படகு. உலகின் அதிவேக படகு பட்டியலில் இந்த படகும் இடம்பெறும் என்று கருதப்படுகிறது.

அறிமுகம்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மொனாக்கோவில் நடைபெறும் படகு கண்காட்சியில் இந்த புதிய அதிவேக படகு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் புரோட்டோடைப் மாடல் இன்னும் தயாரிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு
இந்த அதிவேக படகை குயின்டெசன்ஸ் யாட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் லூயிஸ் பால் ஸ்டெயின்பெர்க் ஒரு அஸ்டன் மார்ட்டின் கார் பிரியர். அவரிடம் கிளாசிக் அஸ்டன் மார்ட்டின் கார் ஒன்றும் இருக்கிறதாம். மேலும், படகு வடிவமைப்பில் தலைசிறந்த மல்டர் டிசைன்ஸ் நிறுவனமும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறது.



Click it and Unblock the Notifications








