வயர், ஆணி எதுவும் கிடைக்கல... தானாக ஒரு கார் இப்படி வெடித்து சிதறுமா? டெல்லி சம்பவத்தில் தொடரும் குழப்பம்!
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று (நவ.10) மாலை 7.30 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்து உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தலைநகரின் முக்கியமான பகுதியில் நடந்துள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் கண்காணிப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. டெல்லி சுபாஷ் மார்க் சிக்னலில் மெதுவாகச் சென்ற ஹரியானா மாநில நம்பர் பிளேட் கொண்ட ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரில் இருந்து இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதாகவும், சம்பவத்தின் போது அந்த ஹூண்டாய் காரில் 3 பேர் வரையில் பயணம் செய்திருக்கலாம் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு விசாரணை அமைப்புகள் இந்த சம்பவத்தை விசாரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயர்மட்ட போலீசாருடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சம்பவப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து சாத்தியக்கூறுகளையும் பரிசீலித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் சில பாதசாரிகள் காயமடைந்ததுடன், சில வாகனங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளன. பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் நெருக்கமாக ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்த நேரத்தில், ஹூண்டாய் ஐ20 கார் ஒன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்ற வாகனங்களுக்கும் எளிதாக பரவி, மற்ற வாகனங்களும் தீயில் எரிந்து நசமாகி உள்ளன.

மொத்தம் 4 கார்கள் முற்றிலுமாக எரிந்து நசமாகி உள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கார் குண்டுவெடிப்பு நடந்ததாக கூறப்படும் இடத்தில் எந்தவொரு பள்ளமும் ஏற்படவில்லை. அதேபோல், முதற்கட்ட ஆய்வில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை சுற்றி எங்கேயும் வயர்களையோ அல்லது ஆணிகளையோ போலீசாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இதனால், இந்த சம்பவம் குண்டுவெடிப்பினால் தான் ஏற்பட்டதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தானாக ஒரு கார் இவ்வாறு எதிர்பாராத நேரத்தில் வெடிக்குமா என கேட்டால், அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்றே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சாலையில் இயங்கும் கார் திடீரென தீப்பற்றி கொள்வது உலகம் முழுவதுமே பரவலாக நடக்கக்கூடிய ஒன்றே.

அதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, மின்கசிவினால் தீப்பிடிப்பது மற்றும் அதீத வெப்பமான சூழலினால் தீப்பிடிப்பது ஆகும். இந்த சம்பவம் மாலை நேரத்திற்கு பின் நடந்துள்ளதால், அதீத வெப்பமான சூழலினால் கார் தீப்பிடிப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. மின்கசிவினால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். ஆனால், அப்போதும் கூட இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்படும் அளவிற்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பது போல் கார் வெடிப்பதற்கு வாய்ப்பில்லை.
எந்தவொரு காரிலும் தீப்பிடிப்பதற்கு முன் நிச்சயமாக புகை வெளிவரும். அதை பார்த்து காரை நிறுத்திவிட்டு, காரை விட்டு தூரம் சென்று உயிர்பிழைத்தவர்கள் ஏராளம். ஆனால், இந்த சம்பவத்தில் காரில் இருந்து புகை வந்ததாக எவரொருவரும் தெரிவிக்கவில்லை. காரின் பின்பகுதியில் இருந்து தீ பிளம்பு வெடித்து சிதறியதாக சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தினால், ஹூண்டாய் ஐ20 காரின் பெயர் எல்லா செய்திகளிலும் ஒலித்துக் கொண்டிருப்பது, இந்த காரின் விற்பனையில் எந்த மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால், ஹூண்டாய் ஐ20 ஓர் அருமையான ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். எரா, மக்னா எக்ஸிக்யூட்டிவ், மக்னா ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் (ஆப்ஷ்னல்), அஸ்டா மற்றும் அஸ்டா (ஆப்ஷ்னல்) உள்ளிட்ட வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஐ20 காரில் பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது முழுமையான விசாரணைக்கே பிறகே தெரியவரும். எரிபொருள் டேங்கில் ஏற்பட்ட தீயினால் கார் வெடித்து சிதறியதற்கு வாய்ப்பு மிக குறைவாக இருந்தாலும், அதற்கும் வாய்ப்புள்ளதை நாம் நிராகரிக்க முடியாது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications









