இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
அந்த கால பாட்டிகள் எல்லாம், பெரும்பாலும் வீடுகளுக்கு உள்ளேயேதான் இருப்பார்கள். ஆனால் இந்த கால பாட்டிகள் அப்படி அல்ல. இளைஞர்களுக்கு போட்டியாக அவர்களும் வாகனங்களில் ஊர் சுற்றி பார்க்கின்றனர். பேரன் உடன் காரில் ஊர் சுற்றி பார்க்கும் ஒரு பாட்டி குறித்த சுவாரஸ்யமான செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் சமீபத்தில் வாசகர்களுக்கு வழங்கியிருந்தது.
அந்த செய்தியை நீங்கள் படிக்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்யுங்கள். இந்த வரிசையில் தற்போது மற்றொரு பாட்டி குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. ஸ்ரீனிவாஸ் கணேஷ் என்பவரின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இது தொடர்பான வீடியோ (Video) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் மூதாட்டி ஒருவர், சேர் போட்டு, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 (Royal Enfield Himalayan 452) பைக்கில் ஏறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452, அட்வென்ஜர் டூரர் (Adventure Tourer) ரகத்தை சேர்ந்த பைக் ஆகும். இந்த பைக்கின் பின் இருக்கையில் முதியவர்கள் ஏறி அமர்வது சற்று கடினமான காரியம்தான்.
எனவேதான் வீடியோவில் நாம் பார்க்கும் மூதாட்டி, சேர் உதவியுடன் பைக்கில் ஏறி அமர்கிறார். அவர் அமர்ந்தவுடன் ஸ்ரீனிவாஸ் கணேஷ் அவரை ஒரு ரவுண்டு அழைத்து செல்கிறார். அது ஒரு குடியிருப்பு வளாகம் போல் தெரிகிறது. அதற்குள் ஒரு ரவுண்டு சென்று வந்தவுடன், மீண்டும் சேர் உதவியுடனே அந்த மூதாட்டி பைக்கில் இருந்து இறங்கி கொள்கிறார்.

இந்த மூதாட்டி, ஸ்ரீனிவாஸ் கணேஷின் பாட்டி ஆவார். ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கில் பயணிக்க தனது பாட்டி விரும்பியதால்தான், அவரை அழைத்து சென்றதாக ஸ்ரீனிவாஸ் கணேஷ் தெரிவித்துள்ளார். இது போன்ற சுவாரஸ்மான நிகழ்வுகளின் வீடியோக்கள், அனைவரது கவனத்தையும் கவர்ந்து விடும். அதுவேதான் தற்போதும் நடைபெற்று கொண்டுள்ளது.
இந்த வீடியோவில் நாம் காணும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 452 சிசி சிங்கிள் சிலிண்டர் டிஓஹெச்சி 4 வால்வு இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 40 பிஹெச்பி பவர் மற்றும் 40 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் ஆரம்ப விலை 2.85 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 2.98 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வயதாகி விட்டதே என முடங்கி விடாமல், பேரன்களுடன் இணைந்து பெரியவர்கள் வாகனங்களில் ஜாலியாக வலம் வர தொடங்கியிருப்பது உண்மையிலேயே ஆரோக்கியமான ஒரு விஷயம்தான். இது வாகனங்களின் காதலாக மட்டும் தெரியவில்லை. அவர்கள் தங்களது பேரன்கள் மீது வைத்துள்ள பாசத்தின் வெளிப்பாடும் கூட!


Click it and Unblock the Notifications








