வித்தியாசமும், விசித்திரமும் நிறைந்த டாப் - 10 பைக் மாடல்கள்!
நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி கற்பனையிலும் நினைத்து பார்த்திராத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. அவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இன்றைய போக்குவரத்தில் மிக முக்கிய சாதனமாக விளங்கும் பைக்குகளை பிரத்யேக அம்சங்களடன் வடிவமைத்து சில நிறுவனங்கள் அல்லது டிசைனர்கள் அசத்தி வருகின்றனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மை மற்றும் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கான்செப்ட் மாடல்கள் நிச்சயம் வியக்க வைப்பதாகவே இருக்கிறது.

பட்டியல்
விசித்திரமான அல்லது பிரத்யேகமான டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

1.விக்டரி விஷன் 800
போலரிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான விக்டரி நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த பைக் மாடல். இந்த பைக்கில் 800சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மிகவும் பிரத்யேகமான டிசைன் கொண்டதாக விக்டரி வடிவமைத்துள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில், பொருட்களை வைப்பதற்கான இடவசதி மற்றும் சிறப்பம்சங்களை கொண்ட க்ரூஸர் மாடலாக கூறப்பட்டது.

2. சுஸுகி ஜி - ஸ்ட்ரைடர்
ஸ்கூட்டர் மற்றும் பைக் சிறப்பம்சங்களை கலந்து கட்டி உருவாக்கப்பட்ட ஓர் கான்செப்ட் மாடல் இது. இது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கான்செப்ட் மாடல். பட்டன்களை அழுத்தி மேனுவலாகவும் கியரை மாற்றுவதற்கான வசதியும் உள்ளது. இந்த பைக்கில் 916சிசி பேரலல் ட்வின் எஞ்சின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலிவுட் சினிமாவில் பயன்படுத்தப்படுவது போன்ற கான்செப்ட் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. ஐ கேர்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த என்ஸைம் டிசைன் வடிவமைத்த இந்த பைக் மாடல் அஸ்டன் மார்ட்டின் அல்லது போர்ஷே வடிவமைத்த இருசக்கர வாகனம் போன்று இருப்பதாக பிரபல டிசைனர்களால் சொட்டு வாங்கிய மாடல். இந்த கான்செப்ட் பைக் மாடலில் 1.8 லிட்டர் ஹோண்டா எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிவேகத்தில் செல்வதற்கான தகவமைப்புகளை கொண்ட மாடலாக இதனை குறிப்பிடுகின்றனர்.

4. ஹோண்டா வி4
ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹோண்டா வி4 ஸ்போர்ட்ஸ் பைக் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் எதிர்கால தொழில்நுட்ப அம்சங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இதனடிப்படையிலான சூப்பர் பைக் திட்டமும் ஹோண்டா வசம் உள்ளது. கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்கிற்கு இணையாக ஓர் புதிய பைக்கை தயாரிக்கும் திட்டம் ஹோண்டா வசம் உள்ளது. அந்த புதிய சூப்பர் பைக் ஹோண்டா வி4 அடிப்படையில் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையினரால் நீண்டகாலமாக எதிர்பார்த்து எழுதப்படும் கான்செப்ட் மாடல்களில் இதுவும் ஒன்று.

5. யமஹா டெசராக்ட்
தொழில்நுட்ப ரீதியில் 4 சக்கரங்களுடன் வடிவமக்கப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் குவாட்ரிசைக்கிளாக குறிப்பிடப்பட்டாலும் இதன் இருக்கை வசதி, தோற்றம் போன்றவை இருசக்கர வாகன அம்சங்களை கொண்டிருக்கிறது. வளைவுகளில் திரும்பும்போது சக்கரங்களை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் தொழில்நுட்பம் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கான்செப்ட்டிற்கு பல்வேறு காப்புரிமைகளை யமஹா நிறுவனம் பெற்றிருக்கிறது.

6. பெராவிஸ் மோட்டார்சைக்கிள்
கார் போன்றே உள்ளே அமர்ந்து செல்லும் வசதி கொண்ட இந்த குளுகுளு வசதி கொண்ட மோட்டார்சைக்கிள் நிச்சயம் எதிர்காலத்தில் வரவேற்கத்தக்க மாடலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள் குறித்த முழுமையானத் தகவல்களை காண இங்கே கிளிக் செய்யவும்.

7. பாம்பார்டியர் எம்ரியோ
ஒற்றை சக்கரத்தில் செல்லும் வாகனத்தை நினைத்துப் பார்க்க முடிகிறதா. ஆம், அதனை நிஜமாக்கும் பணிகளில் வெற்றிகள் பதியப்பட்டுள்ளன. செக்வே இரண்டு சக்கர ஸ்கூட்டர்கள் போன்று தானாக பேலன்ஸ் செய்து கொள்ளும் தொழில்நுட்பம்இந்த பாம்பார்டியோ எம்ரியோ கான்செப்ட் மாடல் ஒற்றை சக்கர ஸ்கூட்டர் மாடல் என்பதோடு, ஹைட்ரஜனில் இயங்கும் என்பதும் இதன் மற்றொரு முக்கிய அம்சம். எனவே, சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராத, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களுக்கு ஏற்ற கான்செப்ட் மாடலாக குறிப்பிடப்படலாம்.

8. பேட்பாட்
தி டார்க் நைட் ஹாலிவுட் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட இந்த பைக் மாடல் பைக் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. அதிவேக ஆக்சிலரேசன் கொண்ட மாடல்கள் இதனடிப்படையில் உருவாக்குவதற்கான அடிப்படையாக இந்த மாடல் கருதப்படுகிறது. அமெரிக்காவில் இதன் மாதிரியில் சிலர் தங்களது பைக்குகளை மாற்றி ஓட்டுவதும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

9. டாட்ஜ் தோமஹாக்
டாட்ஜ் நிறுவனம் உருவாக்கிய இந்த வித்தியாசமான கான்செப்ட் பைக் மாடல் டெட்ராய்ட் ஆட்டோ ஷோ மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. மணிக்கு 680 கிமீ வேகத்தில் செல்லத்தக்க மாடலாக இதனை டாட்ஜ் நிறுவனம் குறிப்பிட்டது. ஆனால், 160 கிமீ வேகத்துக்கு மேல் இந்த பைக்கை இயக்கப்பட்டதில்லை என்பது வேறு விஷயம். இதன் சக்கரங்களும் வளைவுகளில் சஸ்பென்ஷன் அமைப்பு அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வசதி கொண்டது.

10.கான்ஃபடேரட் ரெனோவேஷியோ
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோணியிடம் இருக்கும் ஹெல்கேட் பைக்கை தயாரித்த கான்ஃபடரேட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கான்செப்ட் மாடல்தான் இந்த ரெனோவேஷியோ. தோற்றத்தில் முற்றிலும் வித்தியாசமான இந்த பைக் மாடல் ரெயீத் என்ற மாடலின் அடிப்படையில் உருவானதுதான். இந்த பைக்கில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 190 பிஎச்பி பவரை அளிக்கும் வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரெயீத், ஹெல்கேட்டை தொடர்ந்து கான்ஃபடரேட் நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் இது.


Click it and Unblock the Notifications








