விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இவ்ளோ பெரிய வளர்ச்சியா? ஆச்சரியமா இருக்கே!
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனையில் கெத்து காட்டி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்த ராயல் என்பீல்டு பைக்குகளில் ஹிமாலயனும் (Royal Enfield Himalayan) ஒன்று. கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் ஆஃப் ரோடு ஆர்வலர்களுக்கு மிகவும் விருப்பமான மாடலாக உள்ளது.

அத்துடன் அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்பவர்கள் மத்தியிலும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிரபலமாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 3,728 ஹிமாலயன் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 108.15 சதவீத வளர்ச்சியாகும்.

ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 1,791 ஹிமாலயன் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதே நேரத்தில் மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 3,633 ஹிமாலயன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்த எண்ணிக்கை அதன் பின் வந்த அக்டோபர் மாதத்தில் 3,728 ஆக உயர்ந்துள்ளது. இது 2.61 சதவீதம் ஆகும். இந்தியாவில் சமீப காலமாக வாகனங்களின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து வருவது உண்மையிலேயே சிறப்பான விஷயம்தான்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில், 411 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.31 பிஎஸ் பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன் பகுதியில் 21 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹிமாலயன் பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் உபயோகமான பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. இதில், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், டிஜிட்டல் காம்பஸ், இரண்டு சக்கரங்களிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், உயரமான விண்டுஸ்க்ரீன் வைசர் ஆகியவை மிகவும் முக்கியமானவை. அத்துடன் இந்த பைக்கிற்கு நிறைய ஆக்ஸஸெரீஸ்களும் கிடைக்கின்றன.

இவை இந்த பைக்கின் ஆஃப் ரோடு மற்றும் டூரிங் பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம் வெகு சமீபத்தில் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்கிற்கும், அதற்கு முன்னதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மீட்டியோர் 350 பைக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த 2 பைக்குகளும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்குடன் விற்பனையில் போட்டியிட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டில் போட்டி கடுமையாகியுள்ளது. வரும் காலங்களில் 350 சிசி செக்மெண்ட்டில் இன்னும் நிறைய பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








