ராயல் என்ஃபீல்டில் எல்லா பைக்கையும் கண்மூடித்தனமா வாங்காதீங்க!! அதிகம் சேல்ஸ் ஆகுவது இந்த 4 பைக்குகள் மட்டுமே!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து தற்சமயம் 7 பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு உள்ளது. குறிப்பாக, ராயல் என்ஃபீல்டின் கிளாசிக்-350 பைக் ஆனது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் டாப்-10 மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக விளங்குகிறது. இங்கிலாந்தில் தோன்றி, தற்சமயம் நமது சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 75,038 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை மட்டுமே ஆகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என்று பார்த்தால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக போகும். கடந்த 2024 ஏப்ரலில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான பைக்குகளை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் வெறும் 68,881 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்க்கும்போது, ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விற்பனை ஆனது 8.94%, அதாவது 6,157 யூனிட்கள் அதிகரித்துள்ளது. வழக்கம்போல், கடந்த ஏப்ரல் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்காக முதலிடத்தை கிளாசிக்-350 பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கிளாசிக்-350 பைக்குகளின் எண்ணிக்கை 29,476 ஆகும்.

அதுவே, 2023 ஏப்ரலில் 26,781 ராயல் என்ஃபீல்டு கிளாசிக்-350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, கிளாசிக்-350 பைக்குகளின் விற்பனை ஆனது கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் 2,695 யூனிட்கள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கும் 3இல் ஒருவர் நிச்சயமாக கிளாசிக்-350 பைக்கை வாங்குகின்றனர்.
கிளாசிக்-350 பைக்கிற்கு அடுத்து 2வது இடத்தில், ஹண்டர்-350 உள்ளது. சமீப காலத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் ராயல் என்ஃபீல்டு பைக்காக விளங்கும் ஹண்டர் 350 கடந்த ஏப்ரல் மாதத்தில் 16,186 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2023 ஏப்ரல் மாதத்தில் 15,799 ஹண்டர்-350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, இந்த ஆண்டு ஏப்ரலில் 387 ஹண்டர்-350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் 3வது இடத்தில் புல்லட்-350 பைக் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 13,165 புல்லட்-350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஏப்ரலில் 12,178 புல்லட்-350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 4வது இடத்தில் மீட்டியோர்-350 பைக் 10,132 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.
2023 ஏப்ரலில் 7,598 மீட்டியோர்-350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில் 5வது மற்றும் 6வது இடங்களில் ஹிமாலயன் மற்றும் 650 ட்வின்ஸ் பைக்குகள் உள்ளன. இவை இரண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முறையே 2,917 மற்றும் 2,189 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்காக கடைசி இடத்தில் சூப்பர் மீட்டியோர் 973 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டின் சமீப கால வெற்றிக்கரமான பைக்காக ஹண்டர்-350 விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், கிளாசிக்-350 பைக்கை முந்தி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்காக ஹண்டர்-350 முதலிடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிளாசிக்-350 பைக்குகளின் விற்பனை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருவதால், ஹண்டர்-350 இரண்டாவது இடத்தையே தொடர்கிறது.


Click it and Unblock the Notifications









