ராயல் என்ஃபீல்டு புதுசா உருவாக்கும் என்ஜினை வைத்து காரை ஓட வைக்கலாம்! உறுமும் சத்தத்தை கேட்டாலே அலற போறாங்க!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அடுத்தடுத்து புது, புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. 2027ஆம் ஆண்டு வரையில் 3 மாதங்களுக்கு ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான், ஹண்டர் 350 (Hunter 350), புதிய புல்லட் 350 (Bullet 350) உள்ளிட்ட பைக்குகள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டன.
சமீப காலமாக, ராயல் என்ஃபீல்டின் திட்டங்களில் பவர்ஃபுல்லான 750சிசி பைக்குகளும் உள்ளன. ராயல் என்ஃபீல்டில் இருந்து இதுவரையில் எந்தவொரு 750சிசி பைக்கும் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை என்றாலும், ஹிமாலயன் (Himalayan) பைக்கை 750சிசி என்ஜின் உடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது.

புத்தம் புதிய ஆற்றல்மிக்க 750சிசி என்ஜினையும், அந்த என்ஜின் உடன் முதல் பைக்காக காண்டினெண்டல் ஜிடி-ஆர் 750 (Continental GT-R 750) பைக்கையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த காண்டினெண்டல் ஜிடி-ஆர் 750 ஆனது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து முதல் 750சிசி பைக்காக ஹிமாலயன் 750 அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்து உள்ளன. முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு ஹிமாலயன் 750 பைக்குகளை லடாக்கிற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் ஜாலியாக ஓட்டி சென்றதை நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம்.

இரு புதிய ஹிமாலயன் 750 பைக்குகள் லடாக்கிற்கு சோதனை ஓட்டமாக அப்போது கொண்டு செல்லப்பட்டு இருந்தன. இதில் ஒரு ஹிமாலயன் 750 பைக் ஆனது எலக்ட்ரிக் பவரில் இயங்கக்கூடியதாக இருந்தது. லடாக்கின் சவாலான பாதைகளில் புதிய ஹிமாலயன் 750 பைக்குகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறியும் முயற்சியாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டு இருந்ததினால், இந்த பைக்குகள் விரைவாக அறிமுகம் செய்யப்படலாம் என நாங்கள் அப்போதே கூறியதற்கு இணங்க, முதல் 750சிசி ராயல் என்ஃபீல்டு பைக்காக ஹிமாலயன் 750 விற்பனைக்கு வர உள்ளது.
முன்னதாக, ஹிமாலயன் 750 பைக் விஷயத்தில் பெரியதாக ஈடுப்பாட்டுடன் இல்லை எனவும், ஆனால் இப்போது ஹிமாலயன் 750 பைக்கை வடிவமைக்கும் பணியில் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் ராயல் என்ஃபீல்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றப்படி, புதிய ஹிமாலயன் 750 பைக்கில் என்னென்ன மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே 650சிசி இணையான இரட்டை-சிலிண்டர் என்ஜினை உருவாக்கி வருவதால், அதன் பரிணாம வளர்ச்சியாகவே புதிய 750சிசி என்ஜின் இருக்கும். பெரிய போர் (Bore) மற்றும் கூடுதல் நீளமான ஸ்ட்ரோக் (Stroke) உடன் வலிமையான மிட்-ரேஞ்ச் பவரை வழங்கக்கூடியதாகவும், அதிகமான டார்க் திறன் உடனும் புதிய 750சிசி என்ஜின் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் தற்சமயம் பிரபலமாக இருக்கும் பைக்குகளுள் ஹிமாலயன் ஒன்றாகும். அட்வென்ச்சரான பயணங்களை விரும்புவோரின் முதன்மையான சாய்ஸாக ஹிமாலயன் உள்ளது. இதனாலேயே, முதல் 750சிசி பைக்கை ஹிமாலயனில் கொண்டுவர ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. மேலும், ஹிமாலயன் 750 ஆனது இந்திய சந்தைக்கு மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்ற பைக்காக இருக்கும்.


Click it and Unblock the Notifications









