ராயல் என்ஃபீல்டு தொடுவது எல்லாம் பொன்னாக மாறுது! கூட்டம் கூட்டமா ஷோரூமுக்கு படையெடுக்கும் மக்கள்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), நம் சென்னை (Chennai)-இல் செயல்படும் உலகளவில் பிரபலமான பைக் நிறுவனம். இன்னும் சொல்லப்போனால், சென்னையின் அடையாளமாக கூட ராயல் என்ஃபீல்டை சொல்லலாம். அந்த அளவிற்கு மாதத்திற்கு மாதம் வளர்ந்துக் கொண்டே வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 80 ஆயிரத்து 799 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெறும் 67 ஆயிரத்து 922 பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது. இதில் இருந்து ராயல் என்ஃபீல்டு ஒரே வருடத்தில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை அறியலாம்.
மேலும், இந்த எண்ணிக்கை எல்லாம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் எண்ணிக்கை மட்டுமே ஆகும். இது இல்லாமல், கடந்த பிப்ரவரியில் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 ஆயிரமாக உள்ளது. இந்த புள்ளி விபரங்களை எல்லாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.

இந்த தொகுப்பில் நாம் பார்க்க போவது, ராயல் என்ஃபீல்டு பைக்குகளுள் எவை எவை கடந்த பிப்ரவரி மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை ஆகும். வழக்கம்போல், கடந்த பிப்ரவரி மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்காக முதலிடத்தை கிளாசிக் 350 (Classic 350) பிடித்துள்ளது.
கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்குகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 641 ஆகும். அதுவே, கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 28 ஆயிரத்து 310 கிளாசிக் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை ஆனது 8.23% அதிகரித்துள்ளது.

இதற்கடுத்து 2வது இடத்தில் புல்லட் 350 (Bullet 350) உள்ளது. 2024 பிப்ரவரியில் வெறும் 13,944 புல்லட் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரியில் 19 ஆயிரத்து 244 புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில், இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கின் விற்பனை 38.01% அதிகரித்துள்ளது.
இதற்கடுத்து 3வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் 16 ஆயிரத்து 599 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. மாடர்ன் ராயல் என்ஃபீல்டு பைக்கான இது 2024 பிப்ரவரியில் இதனை காட்டிலும் 36.93% குறைவாக 12 ஆயிரத்து 122 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இவற்றிற்கு அடுத்து 4வது இடத்தை மீட்டியோர் 350 பைக் 7 ஆயிரத்து 207 யூனிட்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது.

ஆனால், 2024 பிப்ரவரியில் 8 ஆயிரத்து 125 மீட்டியோர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், இந்த பைக்கின் விற்பனை ஆனது 11.30% குறைந்துள்ளது. 2024 பிப்ரவரியை காட்டிலும், இந்த ஆண்டு பிப்ரவரியில் விற்பனை குறைந்த மிகவும் சில ராயல் என்ஃபீல்டு பைக்குகளுள் மீட்டியோர் 350 ஒன்றாகும்.
இதற்கடுத்து, 5வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் பைக்குகள் (இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650) உள்ளன. 650சிசி பைக்குகளான இவை, கடந்த மாதத்தில் 2 ஆயிரத்து 882 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 பிப்ரவரியில் 2 ஆயிரத்து 70 650-ட்வின் பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது. 6வது இடத்தில் ராயல் என்ஃபீல்டின் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளான ஹிமாலயன் 2 ஆயிரத்து 158 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

ஆனால், 2024 பிப்ரவரியில் சற்று அதிகமாக 2,278 ஹிமாலயன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 7வது இடத்தில் சூப்பர் மீட்டியோர் 650 பைக் 1,183 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 8வது மற்றும் 9வது இடங்களில் ராயல் என்ஃபீல்டின் லேட்டஸ்ட் அறிமுகங்களான குரில்லா மற்றும் ஷூட்கன் பைக்குகள் முறையே 621 மற்றும் 264 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 9 பைக் மாடல்களை தான் தற்போதைக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த 9 பைக்குகளில் மீட்டியோர் 350 மற்றும் ஹிமாலயன் பைக்கை தவிர்த்து, மற்றவை அனைத்தும் கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications









