ராயல் என்ஃபீல்டை இன்னும் சில வருஷதுக்கு எதுவும் பண்ண முடியாது! இந்த 2 பைக்குகள் வெச்சே கஸ்டமர்ஸை ஈர்த்திடும்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து புதியதாக 2026 குரில்லா 450 (Guerrilla 450) பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் பயன்படுத்தலாம் என முன்பு கூறப்பட்டுவந்த குரில்லா 450 பைக் 2026ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களின் மூலமாக, முற்றிலுமாக வழக்கமான சாலைகளுக்கு ஏற்ற பைக்காக மாற்றப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், கரடுமுரடான அட்வென்ச்சர் பயணங்களுக்காகவே ஹிமாலயன் 450 (Himalayan 450) என்கிற இன்னொரு பைக்கை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்கிறது.
இன்னும் சொல்லப்போனால், ஹிமாலயன் பைக்கிற்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்துதான் அதன் அடிப்படையில் குரில்லா 450 பைக்கை உருவாக்கி கடந்த 2024 ஜூலை மாதத்தில் ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தியது. தற்போது மேம்படுத்தப்பட்டிருக்கும் 2026 குரில்லா 450 பைக்கிற்கும், விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் 450 பைக்கிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

தோற்றம்: ஏற்கனவே கூறியதுபோல், புதிய குரில்லா 450 பைக் முழுக்க முழுக்க வழக்கமான சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டர் ரக பைக்கின் 17-இன்ச் சக்கரங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புறங்களிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றவையாக உள்ளன. மறுப்பக்கம், ஹிமாலயன் 450 ஆனது ஓர் பக்கா அட்வென்ச்சர் ரக பைக் ஆகும். இதற்காக, இந்த பைக்கில் முன் சக்கரம் மட்டும் சற்று பெரியதாக 21 இன்ச்சில் வழங்கப்படுகிறது. அட்வென்ச்சர் பயணங்கள் மட்டுமின்றி, தொலைத்தூர பயணங்களுக்கும் ஹிமாலயன் 450 ஏற்றதாகும்.
செயல்படுதிறன் மற்றும் ஹேண்ட்லிங்: இந்த இரு பைக்குகளும் ராயல் என்ஃபீல்டின் ஷெர்பா 450 என்ஜின் உடன் வழங்கப்படுகின்றன. இருப்பினும், குரில்லா 450 ஆனது ஷார்ப்பான ஸ்டீயரிங் மற்றும் குறைவான எடை மூலமாக ஹேண்ட்லிங் செய்வதற்கு எளிதாக இருக்கும். ஹிமாலயன் 450 பைக் அதிவேகத்தில் செல்லும்போதும் சிறந்த ஸ்டெபிலிட்டியை வழங்குவதுடன், பள்ளம் குழி நிறைந்த பாதைகளிலும் சவுகரியமான பயணத்தை வழங்கும்.

சஸ்பென்ஷன் & கிரவுண்ட் கிளியரென்ஸ் (தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரம்): 2026 குரில்லா 450 பைக்கில் முன்பக்கத்தில் 140 மில்லி மீட்டரிலும், பின்பக்கத்தில் 150 மில்லி மீட்டரிலும் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரென்ஸ் 169மிமீ ஆகும். ஹிமாலயன் 450 பைக்கில் சற்று நீளமாக 200மிமீ டிராவல் உடன் சஸ்பென்ஷன் மற்றும் 230மிமீ-இல் கிரவுண்ட் கிளியரென்ஸ் கிடைக்கிறது.
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: ஹிமாலயன் 450 பைக் ஆனது தொலைத்தூர பயணங்களுக்கும் கொண்டு செல்வதற்கு ஏற்ப பெரிய அளவில் 17 லிட்டர்கள் கொள்ளளவிலான பெட்ரோல் டேங்க் உடன் கிடைக்கிறது. அதுவே, குரில்லா 450 ஆனது சிறியதாக 11 லிட்டர்கள் கொள்ளளவிலான பெட்ரோல் டேங்க் உடன் வழங்கப்படுகிறது.
விலை: புதிய 2026 குரில்லா 450 பைக் ரூ.2.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அபெக்ஸ் (Apex) வேரியண்ட் இந்த விலையில் கிடைக்கும். ஆனால், ஹிமாலயன் 450 பைக் அதன் ஆஃப்-ரோடு திறன்களுக்காக சற்று அதிகமாக ரூ.3.06 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் எதை வாங்குவது என்பது உங்களது தேவையை பொறுத்தது ஆகும். அதாவது, நீங்கள் பெரும்பாலும் நகரத்திற்குள் அனறாடம் பயணம் செய்பவர்கள் என்றாலோ மற்றும் தரையில் இருந்து குறைவான உயரத்தில் ரைடர் இருக்கை உடன் நன்கு சவுகரியமான ரைடிங் பொசிஷனை வழங்கும் பைக்கை எதிர்பார்ப்பவராக இருந்தாலோ குரில்லா 450 பைக்கே போதுமானது. அதுவே, அடிக்கடி தொலைத்தூர பயணங்களை மேற்கொள்பவராக இருந்தாலோ மற்றும் கிராமப்புறங்கள் அல்லது மலைப்பகுதிகளில் வசிப்பவராக இருந்தாலோ உங்களுக்கு ஹிமாலயன் 450 ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








