ரூ.4.89 லட்சத்தில் புதிய ஹிமாலயன் 750 பைக் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டின் அதிசக்திவாய்ந்த மாடல் இதுதான்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கோவாவில் நடந்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டோவெர்ஸ் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த பைக் முறைப்படி இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பிராண்டில் வரும் மூன்றாவது பைக் மாடலாக ஹிமாலயன் 750 வந்துள்ளது. மேலும், ஹிமாலயன் வரிசையில் இதுதான் அதிகசக்திவாய்ந்த மாடலாகவும் இருக்கிறது. இந்த பைக் மூன்றுவிதமான தேர்வுகளில் கிடைக்கும். அலாய் வீல்களுடன் கூடிய அஸ்டெக் க்ரீன் மற்றும் டெக்டோனிக் பிளாக் என்ற இரண்டு ஆரம்ப ரக ஹிமாலயன் 750 பைக் வேரியண்ட்டுகளுக்கு ரூ.4.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்து ஹிமாலயன் 750 பைக்கின் நடுத்தர விலையிலான ட்யூப்லெஸ் டயர்கள், க்ராஸ் ஸ்போக் சக்கரங்கள் கொண்ட மாடலானது ரூ.5.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இந்த மாடலானது வைக்கிங் பிரான்ஸ் மற்றும் சைபீரியா ஒயிட் என்ற இரண்டு வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது.
மூன்றாவதாக, அதிக ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த வேரியண்ட்டிற்கு ரூ.6.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டானது அன்டார்ட்டிக் சில்வர் என்ற வண்ணத் தேர்வில் கிடைக்கும். இந்த மாடலில் நீண்ட தூர பயணங்களுக்கு தேவையான பல்வேறு ஆக்சஸெரீகள் ஆலையிலேயே பொருத்தப்பட்டு வருகிறது.
இத்தாலியை சேர்ந்த GIVI நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு டூரிங் பேக்கேஜ் கொண்டதாக இருக்கும். இதில், நீண்ட தூர பயணங்களுக்கு தேவையான டாப் பாக்ஸ், பொருட்கள் வைப்பதற்கான பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பெட்டிகள், விசேஷமான ஹீட்டடு க்ரிப் கவர்கள், கைகளுக்கு பாதுகாப்பை தரும் ஹேண்டுகார்டுகள், எஞ்சினுக்கான ஸ்கிட் பிளேட் அமைப்பு ஆகியவை வழங்கப்படும்.

புதிய ஹிமாலயன் 750 அட்வென்ச்சர் பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 743சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிஸ்டம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 55 எச்பி பவரையும், 63 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 648சிசி எஞ்சினிலிருந்துதான் இந்த புதிய 743சிசி எஞ்சின் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த எஞ்சின் 90 சதவீத டார்க் திறனை 3,500 ஆர்பிஎம் என்ற எஞ்சின் சுழல் வேகத்திலேயே வழங்கும் திறன் வாய்ந்ததாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், ஆரம்ப மற்றும் நடுத்தர வேகத்தில் எஞ்சின் செயல்திறன் மிகச் சிறப்பாக இருக்கும். மேலும், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் உள்ளது.
புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 பைக்கில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன. மேலும், ரோடு, ரோடு ஸ்போர்ட், ரெயின், டிரெயில் மற்றும் கஸ்டம் என்ற 5 விதமான ரைடிங் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப ரைடர் இதனை மாற்றிக் கொண்டு சிறந்த ரைடிங் அனுபவத்தை பெற வழிவகுக்கும்.
இந்த பைக்கில் 4 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு இருக்கிறது. புளூடூத் இணைப்பு வசதி, நேவிகேஷன், டயரில் காற்றழுத்தம் கண்காணிக்கும் வசதி, மொபைல்போனை அழைப்புகள், மியூசிக் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான வசதிகளும் உள்ளன. எல்இடி ஹெட்லைட், 5 நிலைகளில் விண்ட்ஸ்க்ரீனை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, எமெர்ஜென்சி பிரேக் லைட்டிங் சிஸ்டம், டைப் சி சார்ஜர்கள் ஆகியவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாக இருக்கின்றன.
மேலும், முன்சக்கரத்தில் இரண்டு 280மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்குகளும் பின்சக்கரத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பின் சக்கரத்திற்கான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை தேவையானபோது ஆஃப் செய்து வைக்கும் வசதியும் உள்ளது. முன்புறத்திலும், பின்புறத்திலும் ஷோவா பிராண்டின் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 190 மிமீ மிமீ டிராவல் நீளம் கொண்ட 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குளும், பின்புறத்தில் 175 மிமீ மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் எடைக்கு தக்கவாறு அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.
அதேபோன்று ஹிமாலயன் 750 பைக்கின் மூன்று மாடல்களிலுமே முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அலாய் வீல் மாடலில் சியட் க்ராஸ்ராட் ஏடி டயர்களும், க்ராஸ் ஸ்போக் மாடலில் வெர்டெஸ்டியன் சென்டாரோ எக்ஸ்ஆர் டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக் 224 கிலோ எடை கொண்டதுடன் 17.8 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் இருக்கிறது. 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும், 815 மிமீ இருக்கை உயரத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications


