ஹிமாலயனை போன்று இன்னொரு புது பைக்கை களமிறக்கும் ராயல் என்ஃபீல்டு! சென்னை சாலைகளில் ஓட்டி பார்ப்பு!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் 650சிசி பைக்குகளை பவர்ஃபுல்லான பைக்குகளாக விற்பனை செய்து வருகிறது. இந்த நிலை இன்னும் நீண்ட நாட்களுக்கு நீடிக்க போவதில்லை. ஏனெனில், அவற்றை காட்டிலும் ஆற்றல்மிக்க 750சிசி பைக்குகளை உருவாக்கும் பணிகளை ராயல் என்ஃபீல்டு ஏற்கனவே துவங்கிவிட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக் ஒன்று பொது வெளியில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஸ்பை படங்கள் (Spy Images) 'மெட்ராஸ்_மோட்டோவிலாக்ஸ்' (madras_motovlogs) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தின் வாயிலாக நமக்கு கிடைத்துள்ளன. இந்த படங்களில் காட்சித்தருவது ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் 750 (Himalayan 750) பைக் ஆகும். அதாவது, தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் 450 பைக்கின் 750சிசி வெர்சன்.

ஹிமாலயன் 750 பைக் பலமுறை இவ்வாறு சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை சென்னைக்கு அருகே நெடுஞ்சாலை ஒன்றில் ஹிமாலயன் 750 ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின்போது ஹிமாலயன் 750 பைக்கை ரைடர் நின்றப்படியும் ஓட்டிப் பார்த்துள்ளார்.
அட்வென்ச்சரான பயணங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படும் ஹிமாலயன் பைக்குகளில் நின்றப்படி ஓட்ட நிறைய ரைடர்கள் முயற்சிப்பதால் இவ்வாறான சோதனைகள் அவசியமாகின்றன. இதற்கேற்ப புதிய ஹிமாலயன் 750 பைக்கில் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி ஆனது சற்று பின்னால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இந்த சோதனை ஓட்டத்தின்போது ரைடர் எழுந்து நின்று ஹேண்டில்பாரை சவுகரியமாக பிடித்தப்படி எளிதாக பைக்கை ஓட்ட முடிந்துள்ளது.

மேலும், இந்த ஹிமாலயன் 750 பைக்கில் அட்ஜெஸ் செய்யக்கூடிய முன் & பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப்ஸ் வழங்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. பின்பக்க சஸ்பென்ஷனை அட்ஜெஸ் செய்வதற்காக ஹேண்டில்பாரில் ரிமோட் டயல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிற்கு முன் சக்கரத்தில் டபுள் டிஸ்க் பிரேக்குகளும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன.
பைக்கை சுற்றிலும் விளக்குகள் அனைத்தும் எல்இடி (LED) தரத்தில் வழங்கப்படும் என்பது உறுதி. ஹேண்டில்பாருக்கு மத்தியில் டிஎஃப்டி திரை ஆனது மற்ற மாடர்ன் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை போன்று கூகுள் மேப்ஸ் மற்றும் மியுசிக் கண்ட்ரோலை கொண்டிருக்கும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக 750சிசி 2-சிலிண்டர் என்ஜின் உடன் ஹிமாலயன் 750 அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்னும் சில புதிய 750சிசி பைக்குகளையும் உருவாக்கி வருகிறது. பிரபலமான ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 (Continental GT650) பைக் அடிப்படையிலான கேஃப் ரேசர் (Cafe Racer) வகையை சேர்ந்த 750சிசி பைக் ஒன்றும் உருவாகி வருகிறது. இருப்பினும், முதலாவதாக அறிமுகம் செய்யப்படும் 750சிசி ராயல் என்ஃபீல்டு பைக்காக ஹிமாலயன் 750 தான் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதியில் இத்தாலியில் நடைபெற்ற EICMA மோட்டார் கண்காட்சியில் ஹிமாலயன் 750 காட்சிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2026இன் இறுதியில் நடைபெறும் EICMA கண்காட்சியிலும் ஹிமாலயன் 750-ஐ எதிர்பார்க்கிறோம். அங்கு வைத்து இந்த பைக் உலகளவில் வெளியீடு செய்யப்படலாம். அல்லது அந்த கண்காட்சிக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ உலகளவில் வெளியீடு செய்யப்படலாம். அதன்பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.
எப்படியிருந்தாலும், உலகளவில்தான் ஹிமாலயன் 750 முதலாவதாக வெளியீடு செய்யப்படும். ஏனெனில், இந்திய சந்தையை காட்டிலும் வெளிநாட்டு சந்தைகளை டார்க்கெட் செய்தே ஹிமாலயன் 750 உள்பட 750சிசி பைக்குகளை ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வருகிறது. சமீப காலமாக சோதனை ஓட்டங்களில் இந்த பைக்கை அடிக்கடி பார்க்க முடிவதால், அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications