3 லட்ச ரூபாய் கொடுத்து பைக் வாங்கியும் நிம்மதியா பயன்படுத்த முடியல! ரூ.3,250இல் பிரச்சனையை சரி பண்ணிடலாம்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ஹிமாலயன் 450 (Himalayan 450) மோட்டார்சைக்கிளுக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு அட்வென்ச்சர் (Adventure) பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்கள் பலரது முதன்மையான சாய்ஸாக ஹிமாலயன் உள்ளது. முன்பு 411சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹிமாலயன் கடந்த சில வருடங்களாகவே 450சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஹிமாலயன் 450 பைக்கில் மேம்படுத்தப்பட்ட சைடு ஸ்டாண்ட் (Side stand) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு முன், இந்த பைக்கை நிறுத்தும் போது அதிகப்படியான சாய்வு ஏற்படுவதாகப் வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சைடு ஸ்டாண்ட் ஆனது அந்த வடிவமைப்புச் சிக்கலுக்கு ஒரு முக்கியத் தீர்வை வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது. குறிப்பாக, பொருட்களைச் சுமந்து செல்லும் ஓட்டுநர்களுக்கு இது பயனுள்ளதாக அமைகிறது.

ஹிமாலயன் 450 பைக்கில் முன்பு சைடு ஸ்டாண்டில் நிறுத்தும் போது பைக் வழக்கத்தை விட அதிகமாகச் சாய்ந்து நின்றது. இது அட்வென்ச்சர் பைக்குகளின் சராசரி சாய்வை விட அதிகமாக இருந்தது. இதனால், பைக்கை நிமிர்த்துவது கடினமாக இருந்ததுடன், சாய்வான இடங்களில் பைக்கின் நிலைத்தன்மை குறைவாக இருந்தது.
பைக்கில் சாமான்களைச் சுமந்து செல்லும் பயணிகளுக்கும், இடது பக்கத்தில் இருந்து பைக்கில் ஏறுபவர்களுக்கும் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்தியாவில் சாலைகள் மற்றும் பார்க்கிங் இடங்கள் பெரும்பாலும் சமமாக இல்லாததால், இந்தப் பிரச்சனை ஹிமாலயன் 450 பைக் ஓட்டிகள் பலருக்கு எரிச்சலூட்டக் கூடியதாக இருந்தது.

இத்தகைய பிரச்சனையை தற்போது புதிய மேம்படுத்தப்பட்ட சைடு ஸ்டாண்ட் உடன் தீர்த்து வைத்திருப்பதுடன், இது பைக்கின் இயந்திரப் பிரச்சனை அல்ல, மாறாக அதன் பயன்பாட்டைப் பாதிக்கும் ஒரு வடிவமைப்பு குறைபாடு என்று ராயல் என்ஃபீல்டு குறிப்பிட்டுள்ளது. பைக்கின் சாய்வுக் கோணத்தை நடுநிலையான நிலைக்குக் கொண்டு வரும் வகையில், புதிய சைடு ஸ்டாண்ட்டில் ஸ்டாண்டின் நீளம் மற்றும் பொருத்தும் புள்ளிகளில் ராயல் என்ஃபீல்டு மாற்றங்களைச் செய்துள்ளது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பு, பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரம்) அல்லது சைடு ஸ்டாண்ட்டை மடக்கும் தன்மையை பாதிக்காது. சமமற்ற பரப்புகளில் பைக் ஒரு பக்கமாக அதிகம் சாய்வதைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இந்த மேம்பாடு எலக்ட்ரானிக் (Electronic) அல்லது சஸ்பென்ஷன் (Suspension) சார்ந்தது அல்ல என்பதால், பைக்கில் ரைடிங் பொசிஷனிலும், ஹேண்ட்லிங்கிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
மேலும், இந்த மேம்படுத்தப்பட்ட சைடு ஸ்டாண்ட் ஆனது ஏற்கனவே ஹிமாலயன் 450 பைக்கை வாங்கியவர்களும் பயனடையும் வகையில், மாற்று உதிரிபாகமாக (Accessories) சந்தையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பைக்குடன் ஸ்டாண்டை பொருத்தும் புள்ளிகளில் எந்த மாற்றமும் இன்றி, இதனை வழக்கம்போல் எளிதாகப் பொருத்தலாம். தனியாக வாங்கினால் இதன் விலை ரூ.3,250 ஆகும்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் ஆரம்ப விலை தற்சமயம் ரூ.3.06 லட்சம் முதல் தொடங்கி, டாப்-எண்ட் 'மாணா பிளாக்' வேரியண்ட்டிற்கு ரூ.3.37 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சைடு ஸ்டாண்ட் ஆனது இனி வரும் 2026 ஹிமாலயன் 450 பைக்குகளில் ஸ்டாண்டர்ட் அம்சமாக கிடைக்கும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 என்கிற உயரமான அட்வென்ச்சர் பைக்கை நிறுத்தி பயன்படுத்த, வாடிக்கையாளர்களுக்கு நடைமுறையில் உள்ள சிக்கலுக்கு இது ஒரு பயனுள்ள தீர்வை உறுதி செய்கிறது. மேலும், எதிர்மறை கருத்துகளால் பைக் வாங்கத் தயங்கியவர்களுக்கும் இது நம்பிக்கையை அளிக்கும். இந்தியாவின் டூரிங் மோட்டார்சைக்கிள் சந்தையில், இத்தகைய மேம்பாடுகள் ஹிமாலயன் 450 பைக் மீதான நம்பிக்கையையும், மறுவிற்பனை மதிப்பையும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








