பெரும் வீழ்ச்சியை சந்தித்த ஹீரோ... உலகின் நம்பர்-1 நிறுவனத்திற்கு ஏற்பட்ட சோகத்திற்கு காரணம் இதுதான்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் நம்பர்-1 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவின் தலைநகர் புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இதன்படி கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 5,74,366 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 6,94,022 டூவீலர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது 21 சதவீத வீழ்ச்சி.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்த டூவீலர்களின் எண்ணிக்கையானது, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மட்டும் குறைவானது அல்ல. மாறாக 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் இந்த எண்ணிக்கை குறைவானதுதான்.

ஏனெனில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஹீரோ நிறுவனம் 5,95,706 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. நாடாளுமன்ற தேர்தல், இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுவாகவே தற்போது இந்தியாவின் வாகன மார்க்கெட் 'டல்' அடித்து கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனையும் சரிவை சந்தித்திருக்கும் என கருதப்படுகிறது. ஹீரோ நிறுவனம் அடுத்தபடியாக, தனது மாடல்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய திட்டமிட்டு வருகிறது.

இந்த பணிகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை, இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

முன்னதாக எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய 3 புதிய மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்திய மார்க்கெட்டில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், எக்ஸ்பல்ஸ் ரேஞ்ச் மோட்டார்சைக்கிள்கள் ஆஃப் ரோடு மற்றும் டூரிங் ஆர்வலர்களுக்கானது. அதே நேரத்தில், எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலானது, ஸ்போர்ட்ஸ் பைக் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களிலும் ஒரே 200 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல்களின் டெலிவரி நடப்பு மாத இறுதியில் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல்களாக வந்துள்ளதால் இவை விற்பனையில் சாதிக்கலாம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய மாடல்களின் விலை, சிறப்பு அம்சங்கள், வசதிகள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள். இதுதவிர இந்தியாவின் 150 சிசி - 400 சிசி செக்மெண்ட்டிலும் புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








