ஹோண்டா CB500 பைக் விற்பனைக்கு அறிமுகம்: ரூ.2.75 லட்சம் விலையில் 500cc பைக்!!
இந்தியாவில் 500cc பைக் பிரிவில் மீண்டும் கவனம் ஈர்க்கும் வகையில் ஹோண்டா CB500 மோட்டார்சைக்கிளை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட்ரோ தோற்றம், பெரிய சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், நவீன தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றுடன் வந்துள்ள இந்த பைக், அதிக விலை கொண்ட பிரீமியம் பைக்குகளுக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது.
இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த பைக், 500cc பிரிவில் எளிமையான வடிவமைப்புடன் அதிக டார்க் வழங்கும் மோட்டார்சைக்கிளை எதிர்பார்ப்பவர்களுக்கு புதிய தேர்வாக அமையலாம்.

ஹோண்டா CB500 பைக்கில் 501cc, சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27.6 எச்பி பவரையும், 43.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. நகரப் போக்குவரத்தில் எளிதாக ஓட்டுவதுடன், நெடுஞ்சாலைகளில் தேவையான டார்க் திறனையும் வழங்கும் வகையில் இதன் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதிக டார்க் கிடைக்கும் வகையில் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு கியரிலும் பைக்கை இயக்குவது சுலபமாக இருக்கும். குறிப்பாக குறைந்த வேகத்தில் ஓட்டும்போது, அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய அவசியத்தை குறைக்கும் வகையில் இதன் எஞ்சின் செயல்பாடு இருக்கும்.
ஹோண்டா CB500 பைக் இந்தியாவில் மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆரம்ப வேரியண்ட்டில் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. அடுத்த வேரியண்ட்டில் கிராஸ் ஸ்போக் வீல்கள் இடம்பெறுகின்றன. டாப் வேரியண்ட்டில் ஸ்போக் வீல்களுடன் பிரத்யேக வண்ணத் தேர்வுகள் மற்றும் கிராபிக்ஸ் வழங்கப்படுகின்றன.
ஹோண்டா CB500 அலாய் வேரியண்ட்டின் விலை ரூ.2.75 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CB500 ஸ்போக் டியூப்லெஸ் வேரியண்ட்டின் விலை ரூ.2,99,900 ஆகவும், CB500 ஸ்போக் டியூப்லெஸ் வித் ஸ்ட்ரைப்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.3,01,900 எக்ஸ்ஷோரூம் விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
CB500 பைக் கிளாசிக் ரோட்ஸ்டர் வடிவமைப்புடன் கவர்கிறது. வட்ட வடிவ முகப்பு விளக்கு, தசைநார் போன்ற தோற்றமுடைய ஃப்யூல் டேங்க், எளிமையான பாடி அமைப்பு ஆகியவை பழைய தலைமுறை மோட்டார்சைக்கிள்களின் வடிவமைப்பை நினைவுபடுத்துகின்றன. அதேசமயம் நவீன விளக்குகள் மற்றும் புதிய கிராபிக்ஸ் இதற்கு நவீனத் தோற்றத்தையும் வழங்குகின்றன.
இந்த பைக்கில் ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (HSTC) வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புற சக்கரத்தில் ஏற்படும் வழுக்கும் தன்மையை கட்டுப்படுத்த இந்த தொழில்நுட்பம் உதவும். மேலும், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதனால் கியர் மாற்றும்போது கிளட்ச் செயல்பாடு எளிதாக இருப்பதுடன், திடீரென டவுன்ஷிஃப்ட் செய்யும்போது பின்புற சக்கரத்தின் நிலைத்தன்மைக்கும் உதவுகிறது.
CB500 பைக்கில் அனலாக் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் இடம்பெறும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. வேகம் உள்ளிட்ட முக்கியமான பயணத் தகவல்களை ஓட்டுனர் எளிதாக அறிந்துகொள்ள முடியும். மேலும், ஹோண்டா ரோட்ஸிங்க் கனெக்டிவிட்டி வசதியும் இடம்பெற்றுள்ளதால், ஸ்மார்ட்போனுடன் இணைத்து சில டிஜிட்டல் அம்சங்களை பயன்படுத்த முடியும். இந்த பைக்கில் முழுமையான எல்இடி லைட்டிங் வசதியும் இடம்பெற்றுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சாலைகளில் காணப்படும் பள்ளங்கள், மேடு பள்ளங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள இந்த அமைப்பு உதவும். முன்புறம் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்படுவது பாதுகாப்பான பிரேக்கிங்கிற்கு முக்கியமான அம்சமாகும்.
இந்த பைக்கை இந்தியாவிலேயே தயாரிப்பது அதன் விலையை சவாலாக நிர்ணயிக்க ஹோண்டாவுக்கு உதவியுள்ளது. இந்த பைக் 350cc பைக்குகளிலிருந்து மேம்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும், அதிக சிசி பைக்குகளில் கிடைக்கும் டார்க் மற்றும் சாலை பயண அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும் புதிய தேர்வாக அமையும். குறிப்பாக ரெட்ரோ பைக் பிரியர்களை இது ஈர்க்கலாம்.
எளிமையான டிசைன், பெரிய சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், அதிக டார்க், நவீன பாதுகாப்பு வசதிகள் என அனைத்தையும் ஒரே பைக்கில் எதிர்பார்ப்பவர்களுக்கு ஹோண்டா CB500 ஒரு சுவாரஸ்யமான தேர்வாக இருக்கும். ரூ.2.75 லட்சம் ஆரம்ப விலையில் 500cc பைக்கை அறிமுகப்படுத்தியிருப்பது, இந்தியாவின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் ஹோண்டாவின் போட்டியை மேலும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications


