கேடிஎம்மை பழிவாங்க புதிய பைக்கை களமிறக்கும் யமஹா.. ஆகஸ்ட் 27ல் வெளியீடு!
இந்தியாவில் யமஹாவின் மிகவும் வெற்றிகரமான ஒரு பைக் என்றால் R15-வைக் கூறலாம். இந்நிலையில், இதன் மற்றொரு வெர்ஷனாக, இதனை விட சற்று பெரிய இன்ஜின் கொண்ட பைக்கை யமஹா வெளியிடவிருக்கிறது. R2 என்ற பெயரில் ஆகஸ்ட் 27ல் இந்தப் புதிய பைக் வெளியாகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் புதிய பைக் எப்படி இருக்கும்?
150 சிசி பிரிவிலேயே மிகவும் பவர்ஃபுல்லான ஒரு பைக்காக R15 இருந்து வருகிறது. இந்நிலையில் புதிய R2 பைக்கானது 200 சிசி பிரிவிலேயே மிகவும் பவர்ஃபுல்லான, மிரட்டலான பெர்ஃபான்ஸை வெளிப்படுத்தக்கூடிய ஒரு பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. R15 பைக்கின் பெரிய இன்ஜின் கொண்ட வெர்ஷனாகவே புதிய R2 இருக்கும்.

யமஹாவின் R சீரிஸுக்கே உரியே ஸ்போர்ட்டியான, அதே நேரம் R15 பைக்கில் இருக்கும் தனித்துக் காட்டும் வகையிலான டிசைனை R2 கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. எனினும் இரண்டு பைக்குகளுக்கும் இடையே சின்னச் சின்ன டிசைன் வித்தியாசங்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. யமஹாவின் R சீரிஸே அப்படித் தான். ஆனால் ஏரோடைனமிக்கலாக பைக்கின் பெர்ஃபாமன்ஸைக் குறைக்கும் வகையில் எந்த டிசைன் அம்சமும் இருக்காது.
R15 பைக்கை விட சற்று கூடுதல் பவரைக் கொண்டிருக்கும் என்பதால், அதனை சமாளிக்கவும், பாதுகாப்பு கருதியும் கூடுதலான எலெக்ட்ரானிக் அம்சங்களை R2 பைக்கில் யமஹா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. R15 பைக்கில் க்விக் ஷிப்டர், ABS மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய வசதிகளே கொடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய R2-வில் சற்று கூடுதலாக லாஞ்ச் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் உள்ளிட்டவை போன்ற எலெக்ட்ரானிக் அம்சங்களில் ஏதேனும் சில வசதிகளை யமஹா கூடுதலாகக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் R15 பைக்கில் கொடுக்கப்பட்டு வரும் TFT டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் திராட்டில் உள்ளிட்ட வசதிகளும் புதிய பைக்கில் இருக்கும்.
R15 பைக்கில் தற்போது 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டு வருகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 18.4 hp பவர் மற்றும் 14.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினையே மறுவடிவமைப்பு செய்து 200 சிசி ஒன்றாக R2 பைக்கில் யமஹா பயன்படுத்தவுள்ளது.
இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இன்ஜினானது 25 hp பவர் மற்றும் 20 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் மிகவும் பவர்ஃபுல்லான 200 சிசி பைக்காக புதிய யமஹா R2-வே இருக்கும். கேடிஎம் RC200-க்குக் கூட இரண்டாமிடம் தான் கிடைக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.
கூடுதல் பெர்ஃபாமன்ஸுடன் விலையும் கூடத்தானே செய்யும். R15 பைக்கானது அதிகபட்சமாக 1.98 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே புதிய R2 பைக்கை 2.20 லட்சம் ரூபாய் முதல் 2.40 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் யமஹா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த R2 பைக், இந்தியாவில் குறைவான விலையில் முழுமையான ஸ்போர்ட்டினை உணரவைக்கக் கூடிய மற்றொரு பைக்காக இருக்கும். டியூக் RC200 பைக்கிற்கு நேரடியாக எந்தவொரு போட்டியும் இல்லாமல் இருந்து வந்தது. அதற்கு சரியான போட்டியாக புதிய யமஹா R2 இருக்கும்.
150 சிசி பிரிவில் டியூக் 200 பைக்கின் இன்ஜினை 160 சிசியாக மறுவடிவமைப்பு செய்து டியூக் 160 பைக்கை வெளியிட்டது கேடிஎம். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே R15-ன் இன்ஜினை 200 சிசியாக மறுவடிவமைப்பு செய்து களத்தில் இறக்குகிறதா யமஹா? முன்னதாக 150 சிசி மற்றும் 200 சிசி பிரிவுகளில் டியூக் மற்றும் யமஹா நேரடியாக மோதாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications