ஐக்மா கண்காட்சி மூலம் அறிமுகமானது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 பைக்
ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மூலமாக இந்தியாவில் சாகசப் பயண மோட்டார்சைக்கிள்களுக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தற்போது தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் ஐக்மா 2026 சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹிமாலயன் குடும்பத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிக திறன் கொண்ட எஞ்சின், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற வடிவமைப்பு எனப் பல சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மோட்டார்சைக்கிள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நடுத்தர ரக சாகச மோட்டார்சைக்கிள் சந்தையில் தனது நிலையை வலுப்படுத்த ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.

பவர்ஃபுல் எஞ்சின்
புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிளில் 743 சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7,000 ஆர்பிஎம்மில் 54.25 எச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 63 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், கியர் மாற்றுவதை எளிதாக்கும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதிக வேகத்தில் பயணிக்கும்போதும், நெடுஞ்சாலைகளில் முந்திச் செல்லும்போதும் இந்த அமைப்பு உதவியாக இருக்கும்.
குறிப்பாக, 3,500 ஆர்பிஎம்மிலேயே அதிகபட்சமான டார்க்கில் 90 சதவீதத்தை வழங்கும் திறன் கொண்டதாக இந்த எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த வேகத்திலும் சிறப்பான இழுவைத்திறன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன்
ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 43 மிமீ ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க சஸ்பென்ஷன் 190 மிமீ டிராவல் நீளத்தை கொண்டுள்ளது. பின்புறத்தில் லிங்கேஜ் அமைப்புடன் கூடிய ஷோவா மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது. இதனை பிரீலோடு மற்றும் ரீபவுண்ட் அடிப்படையில் மாற்றியமைக்கலாம். நீண்ட பயணங்களின்போது கூடுதல் சுமை மற்றும் பின்னால் அமர்பவருக்கு ஏற்ப சஸ்பென்ஷனை மாற்றிக்கொள்ளும் வசதி கிடைக்கிறது.
பிரேக்கிங் வசதிக்காக முன்பக்கத்தில் இரண்டு 280 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 255 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்ப வசதிகள்
இந்த மோட்டார்சைக்கிளில் 4 அங்குலத்தில் வட்ட வடிவ டிஎஃப்டி டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் இணைப்பு, வழிகாட்டுதல் வசதி, அழைப்புகள் மற்றும் பாடல்கள் மற்றும் இசையைக் கட்டுப்படுத்தும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் பயணத்தின்போது தேவையான தகவல்களை எளிதாகப் பெற முடியும்.
மேலும், ரோடு, ரோடு ஸ்போர்ட், ரெயின், டிரெயில் மற்றும் கஸ்டம் என ஐந்து ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை பயணச் சூழலுக்கு ஏற்ப எஞ்சின் செயல்பாடு, ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் அமைப்புகளை மாற்றியமைக்கின்றன. கார்னரிங் ஏபிஎஸ், மோட்டார்சைக்கிளின்சாய்வு நிலைக்கு ஏற்ப செயல்படும் டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டயர்களில் காற்றழுத்த கண்காணிப்பு வசதி ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், 27W வேக சார்ஜிங் ஆதரவுடன் இரண்டு டைப் சி யுஎஸ்பி போர்ட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிள் அன்டார்டிக் சில்வர், சைபீரியா ஒயிட், வைக்கிங் பிரான்ஸ், டெக்டானிக் பிளாக் மற்றும் அஸ்டெக் கிரீன் என ஐந்து நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. வேரியண்ட்டுகளுக்கு ஏற்ப அலாய் வீல்கள் அல்லது டியூப்லெஸ் வசதியுடன் கூடிய ஸ்போக் வீல்களைத் தேர்வு செய்யலாம். நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் கூடுதல் உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.
இந்திய அறிமுகம் எப்போது?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹிமாலயன் 750 மோட்டார்சைக்கிளின் இந்திய அறிமுக தேதி மற்றும் விலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், நவம்பர் மாத இறுதியில் கோவாவில் நடைபெற இருக்கும் மோட்டோவெர்ஸ் 2026 நிகழ்ச்சியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications



