இந்தியாவின் சிறந்த சிஎன்ஜி கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள சிஎன்ஜி கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவின் மிக குறைவான விலை கார் மாடல் என்ற பெருமைக்குரிய டாடா நானோ கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் வகைகளில் கிடைக்கிறது. இதில், சிஎன்ஜி மாடல் நானோ இமேக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதால், தினசரி அலுவலக பயன்பாட்டிற்கு சிறப்பான மாடலாக இருக்கும். போதுமான இடவசதி, குறைந்த டர்னிங் ரேடியஸ், பராமரிப்பு செலவு போன்றவை இந்த காரின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
மாருதி ஆல்ட்டோ கே10 கார் பட்ஜெட் கார் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக உள்ளது. இந்த காரின் 1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் சிஎன்ஜி எரிபொருள் வகையிலும் கிடைக்கிறது. எளிமையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட உட்புறம், போதுமான இடவசதி ஆகியவற்றுடன் இந்த காரின் சிஎன்ஜி மாடல் மிகச் சிறந்த மதிப்பை வழங்குகிறது. மாருதி ஆல்ட்டோ கே10 காரின் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டில் மட்டுமே சிஎன்ஜி மாடல் கிடைக்கிறது.
இந்தியாவின் மிக குறைவான விலை 7 சீட்டர் எம்பிவி ரக கார் மாடல் மாருதி சுஸுகி ஈக்கோ. இந்த காரின் சிஎன்ஜி மாடல் அதிக எரிபொருள் சேமிப்பை வழங்கும் எம்பிவி கார் மாடலை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறப்பானதாக கூறலாம். அதிக இடவசதி, போதுமான அடிப்படை வசதிகளுடன் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த காருக்கு கூடுதல் மதிப்பை வழங்குகிறது.