முகப்பு »
இந்தியாவின் குறைந்த பராமரிப்பு செலவுடைய சிறந்த கார்கள்
இந்தியாவின் குறைந்த பராமரிப்பு செலவுடைய சிறந்த கார்கள்
இந்தியாவின் குறைந்த பராமரிப்பு செலவுடைய சிறந்த கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள பராமரிப்பு குறைவான சிறந்த கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மாருதி ஆல்ட்டோ காரின் செயல்திறன் மிக்க மாடலாக கே10 விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. குறைவான பராமரிப்பு செலவு என்பதுடன், அதிக மைலேஜ், மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த காருக்கான மதிப்பை உயர்த்துகிறது. சற்றே கூடுதல் செயல்திறனை விரும்பும் பட்ஜெட் கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
மாருதி செலிரியோ கார் இந்தியாவின் சிறந்த பட்ஜெட் கார் மாடல் என்பதுடன், பராமரிப்பு செலவிலும் வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமாக இருக்கும். இந்த காரின் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் மாடல் கூட பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதால், இந்த காருக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிக சிறந்த தேர்வாக உள்ளது. இளம் வயது மற்றும் நடுத்தர வயதினர் விரும்பும் பட்ஜெட் கார் மாடலாக உள்ளது.
எஸ்யூவி போன்ற தோற்றத்தில் வாடிக்கையாளர்களை வசியம் செய்திருக்கும் பட்ஜெட் கார் மாடல் ரெனோ க்விட். அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் என்பதுடன், மிக குறைவான பராமரிப்பு செலவும் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த கார் கவர்ச்சிகரமாக இருப்பதுடன், 800 சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றுடன் இதன் ரகத்தில் மதிப்பு மிக்க மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் ஹேட்ச்பேக் கார் மாடல் மாருதி ஸ்விஃப்ட். துள்ளலான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், அதிக எரிபொருள் சிக்கனம் போன்ற விஷயங்களுடன் இது குறைவான பராமரிப்பு செலவு கொண்ட கார் என்பதுதான் இதனை முன்னிறுத்தும் காரணங்களில் மிக முக்கியமானது. சொகுசு வசதிகள், பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள், சிறப்பான கையாளுமை போன்றவையும் இந்த காரின் மார்க்கெட்டை ஸ்திரமாக வைத்துள்ளது.
இந்தியாவின் சிறந்த காம்பேக்ட் செடான் கார் மாடலாக மாருதி டிசையர் விளங்குகிறது. இந்த கார் விற்பனையில் கொடி கட்டி பறப்பதற்கு பராமரிப்பு குறைவான கார் என்பதும் முக்கிய காரணமாக உள்ளது. சாதாரண பட்ஜெட் கார்களை வைத்திருக்கும் அளவிலேயே இதன் பராமரிப்பு செலவு இருப்பதும், அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த ரீசேல் மதிப்பு ஆகியவையும் இந்த காரின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. டிசைன், வசதிகள், மைலேஜ், விலை அனைத்திலும் தன்னிறைவை அளிப்பதுடன் குறைவான பராமரிப்பு செலவும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு முக்கிய காரணமாக கூறலாம். இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.