கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறையினருக்கு கடும் சவால்கள் நிறைந்ததாகவே முடிந்துள்ளது. சில சொகுசு கார் நிறுவனங்களை தவிர பெரும்பான்மையான கார் நிறுவனங்கள் பல சோதனைகளை சந்தித்தன. இந்த நிலையில், புத்தாண்டில் புதிய நம்பிக்கையுடன் கார் தயாரிப்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
மேலும், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை தங்களுக்கு சாதகமான வர்த்தக களமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய மாடல்களை வரிசைக்கட்டுவதற்கு முனைப்புடன் ஆயத்தமாகி வருகின்றனர். பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மொத்தம் 70 புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதில், மேம்படுத்தப்பட்ட மாடல்கள், கான்செப்ட் மாடல்கள் மற்றும் புதிய கார் மாடல்கள் அடங்கும். தவிர, 15 புதிய கார் மாடல்கள் உலகளாவிய முறையில் இங்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி, ஹோண்டா, டட்சன் உள்ளிட்ட பிராண்டுகளின் புதிய கார் மாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில், பல முக்கிய பிராண்டுகள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள புதிய கார் மாடல்கள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை ஸ்லைடரில் காணலாம்.
மாருதி சுஸுகி
நாட்டின் நம்பர்-1 கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, செலிரியோ, புதிய எஸ்எக்ஸ்-4 மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, புதிய காம்பெக்ட் எஸ்யூவி பற்றிய தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ்
கார் மார்க்கெட்டில் புதிய உத்வேகத்துடன் டாடா மோட்டார்ஸ் களமிறங்குகிறது. இதற்காக, இண்டிகா மற்றும் இன்டிகோ கார் மாடல்களுக்கு மாற்றாக, ஃபால்கன் மற்றும் டால்பின் வரிசையில் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினையும் டாடா மோட்டார்ஸ் வெளியிடுகிறது. டாடாவின் அங்கமான பிரிட்டிஷ் சொகுசு கார் பிராண்டுகளான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் 2 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.
ஃபோர்டு
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் புதிய ஃபிகோ காரை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் சர்வதேச அறிமுகத்தை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து நடத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய்
ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 காரின் அடிப்படையிலான 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பெக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய உள்ளது. தவிர, புதிய சான்டா பீ சொகுசு எஸ்யூவியும் அறிமுகம் செய்யப்படும்.
ஹோண்டா கார்ஸ்
ஹோண்டா கார் நிறுவனம் புதிய தலைமுறை ஜாஸ் கார், மொபிலியோ எம்பிவி கார்களை அறிமுகம் செய்கிறது. இதில், மொபிலியோ எம்பிவி கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் புதிய தலைமுறை கரொல்லா ஆல்டிஸ் காரை களமிறக்குகிறது. டிசைனில் மிக கவர்ச்சியாக மாறியிருக்கும் கரொல்லா ஆல்டிஸ் அந்த ரகத்தில் சிறந்த காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிசான்
நிசான் நிறுவனம் புதிய சன்னி காரை அறிமுகப்படுகிறது. இதுதவிர, நிசானின் அங்கமான டட்சன் பிராண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கோ ஹேட்ச்பேக் காரும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஃபியட்
ஃபியட்டுக்கு இது மிக முக்கியமான ஆண்டு. மேம்படுத்தப்பட்ட லீனியா காரையும், ஜீப் பிராண்டில் சொகுசு எஸ்யூவி மாடல்களையும் அந்த நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மூலம் இந்திய மண்ணில் களமிறக்குகிறது.
இதர நிறுவனங்கள்
மொத்தம் 41 நிறுவனங்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைக்க உள்ளன. இசசூ மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்கோடா ஆட்டோ, ரெனோ, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன.
எஸ்யூவி மாடல்கள்
எஸ்யூவி கார்கள் மீதான ஈர்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக பல புதிய எஸ்யூவி மாடல்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் அறிமுகமாகின்றன. இதில், ஜீப் பிராண்டின் செரோக்கீ, மாருதியின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி, பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்ஏ காம்பெக்ட் சொகுசு எஸ்யூவி மற்றும் ஆடியின் புதிய க்யூ7 எஸ்யூவி, புதிய ரேஞ்ச்ரோவர் ஆடம்பர எஸ்யூவி மாடல்கள் வசீகரிக்க உள்ளன.
கான்செப்ட் மாடல்கள்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 20க்கும் மேற்பட்ட கான்செப்ட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. எதிர்காலத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார் மாடல்கள் இந்த கார்களின் அடிப்படையிலானதாக இருக்கும் என்பதால் அதிக முக்கியத்துவம் பெறும்.
Source: Economic Times


Click it and Unblock the Notifications