முகப்பு »
இந்தியாவின் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள்
இந்தியாவின் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள்
இந்தியாவின் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள ஆட்டோமேட்டிக் கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பட்ஜெட் குறைவாக உள்ள வாடிக்கையாளர்களின் ஆட்டோமேட்டிக் கார் கனவை கச்சிதமாக பூர்த்தி செய்யும் மாடலாக மாருதி செலிரியோ கார் உள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதன் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்தியாவில் முதல்முறையாக ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வந்த மாடல் என்ற பெருமையும் உண்டு. மைலேஜ், பட்ஜெட், இடவசதி என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இருபாலரும் ஓட்டுவதற்கு ஏற்ற ஆட்டோமேட்டிக் வகை கார் மாடலாக குறிப்பிடலாம்.
பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் இளம் தலைமுறையினரை கவரும் டிசைன் அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் ஹூண்டாய் சான்ட்ரோ கார் முன்னிலை பெறுகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த காரில் ரியர் ஏசி வென்ட் வசதி கொடுக்கப்படுவதும் முக்கிய விஷயமாக கூறலாம். டிசைன், விலை, மைலேஜ் என அனைத்திலும் நிறைவை தரும் பட்ஜெட் ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார் மாடலாக முதன்மை பெறுகிறது.
மாருதி ஸ்விஃப்ட் கார் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. இந்த காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 23.76 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், ஆட்டோமேட்டிக் கார் வாங்க திட்டமிடுவோரின் தேர்வில் மாருதி ஸ்விஃப்ட் முதன்மையான இடத்தை தக்க வைத்து வருகிறது.
அட்டகாசமான டிசைன், நிரம்பிய வசதிகளுடன் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மாடலாக ஹூண்டாய் ஐ20 வலம் வருகிறது. அந்தஸ்தை விரும்புவோருக்கான சிறந்த பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மாடல் ஹூண்டாய் ஐ20 கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 87 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் ஐஎம்டி எனப்படும் புதுமையான வகை மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகிறது. இதன் டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.
மாருதி பலேனோ கார் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த கார் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் மிகச் சிறந்த தேர்வாக கூறலாம்.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் வெனியூ இருந்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர் சாதாரண வகை பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எ]்சின் தேர்வுகலில் கிடைக்கிறது. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலில் டியூவல் க்ளஸ்ட்ச் டிரான்ஸ்மிஷன் வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹோண்டா அமேஸ் கார் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த பிரிமீயம் தேர்வாக கூறலாம். இந்த கார் அதிக இடவசதியை பெற்றிருப்பதுடன், டிசைன், வசதிகளில் அசத்தலாக இருக்கிறது. அத்துடன், இந்த காரின் பெட்ரோல், டீசல் வேரியண்ட்டுகளில் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படுவது முக்கிய விஷயமாக கூறலாம். இதன் டீசல் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சாய்ஸாகவும் உள்ளது. ஹோண்டா சிட்டி காரில் வழங்கப்படும் அதே சிவிடி கியர்பாக்ஸ்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் போலோ காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. சிறந்த கட்டுமானத் தரத்துடன் எக்காலத்திற்கும் ஏற்ற டிசைன் அம்சங்களும் கவர்ந்து வருகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் சாதாரண வகை பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரை வழங்குவதுடன், 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.47 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் எஸ்யூவி வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. இந்த காரின் டிசைன், பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமின்றி, சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகளும் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் என இரண்டிலுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது.