உலகின் விசித்திரமாக வடிவமைக்கப்பட்ட விமானங்கள் - சுவாரஸ்யத் தொகுப்பு
வழமையிலிருந்து வேறுபடுத்தி தனித்தன்மையை நிலைநாட்டவும், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் வாகனங்கள் வடிவமைக்கப்படுவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
ஆனால், விமானஙகளில் அத்தகைய வித்தியாசமான வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்தபோது கிடைத்த ஆச்சரியமான விமானங்களின் பட்டியலைத்தான் இப்போது காணப் போகிறீர்கள். இவற்றில் பெரும்பான்மையான விமானங்கள் ராணுவ பயன்பாட்டு பரிசோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்டவை. செய்தித் தொகுப்புக்குள் செல்லலாம்.

01. அலெக்ஸான்டர் லிப்பிச் ஏரோடைன்
1968ல் பரிசோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்ட மாடல். பாதி வெட்டி எடுக்கப்பட்டது போன்று தோற்றத்தை கொண்டுள்ளது. ஏரோடைனமிக் வாகன வடிவமைப்பில் புகழ்பெற்ற ஜெர்மனி எஞ்சினியர் அலெக்ஸான்டர் லிப்பிச் எண்ணத்தில் இந்த விசித்திர விமானம் உருவானது. ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பரிசோதனைகளுக்காக இந்த விமானம் உருவாக்கப்பட்டது.

02. ப்ளாம் அண்ட் வாஸ் பிவி 141
இரண்டு விமானங்களை ஒன்று சேர்த்தது போன்று காட்சியளிக்கும் இந்த விமானம் இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் வேவு விமானமாக பயன்படுத்தப்பட்டது. எஞ்சினும், புரொப்பல்லரும் காக்பிட்டிலிருந்து தனியாக பொருத்தப்பட்டிருப்பதை காணலாம்.

03. டார்னியர் டூ 31
மேற்கு ஜெர்மனியின் ஊசி மூக்குடன் வடிவமைக்கப்பட்ட விமானம். செங்குத்தாக ஏறி, இறங்கும் விதத்தில் பரிசோதனைக்காக இந்த விமானம் வடிவமைக்கப்பட்டது.

04. எக்ஸ்- 29
பொதுவாக விமானங்களின் இறக்கைகள் பின்னோக்கி இருக்கும். அதற்கு நேர் மாறாக இந்த விமானத்தின் இறக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1980களில் நாசா அமைப்பின் கான்செப்ட் விமானமாக பயன்படுத்தப்பட்டது.

05. அவ்ரோ கனடா விஇசட்9 அவ்ரோகார்
பறக்கும் தட்டு போன்று வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் 1959ல் அமெரிக்காவின் விமானப்படைக்காக ரகசியமாக வடிவமைக்கப்பட்டது. இதுவும் பரிசோதனை முயற்சியாக வடிவைக்கப்பட்ட மாடல்தான்.

06. ஹைப்பர் - III
1969ல் நாசா அமைப்பு பரிசோதனை முயற்சியாக வடிவமைத்த விமானம். இறக்கைகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த விமானத்தின் பாடியும் மேலே எழும்புவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

07. நார்த்ராப் எக்ஸ்பி- 35
இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அமெரிக்க விமானப்படையின் சக்திவாய்ந்த குண்டு வீச்சு விமானமாக இதனை பரிசோதனை முயற்சியாக உருவாக்கினர். இதன் பின்புறம் அதிக புரொப்பல்லர்களுடன் வடிவமைக்கப்பட்டது.

08. டி லாக்னெர் எச்இசட்1 ஏரோசைக்கிள்
ஒரு வீரர் மூலம் வேவு பார்க்கும் பணிக்காக அமெரிக்க ராணுவம் 1954ல் உருவாக்கிய பறக்கும் வாகனம் இது. தற்போது ஆளில்லா உளவு விமானம் போன்று அந்த காலத்தில் எளிதாக சென்று வேவு பார்க்கும் பணிகளுக்காக பரிசோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்டது.

09. கேப்ரோனி கா.60 நேவிப்ளானோ
இந்த விமானம் 9 இறக்கைகளுடன் வடிவமைக்கப்பட்ட பறக்கும் படகு என்று கூறலாம். இத்தாலியை சேர்ந்த விமானவியல் நிபுணர் கியானி காப்ரோனி வடிவமைத்த பறக்கும் படகு இது. இரண்டாவது முறை சோதனை முயற்சியின்போது இந்த பறக்கும் படகு தண்ணீரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனை மீண்டும் மறுகட்டமைப்பு செய்ய காப்ரோனி முயற்சித்தார். ஆனால், இதன் வடிவமைப்பு செலவீனத்தை கருதி, திட்டம் கைவிடப்பட்டது.

10. டக்ளஸ் எக்ஸ்பி 42 மிக்ஸ்மாஸ்டர்
அதிவேக குண்டு வீச்சு விமானமாக இதனை டக்ளஸ் நிறுவனம் வடிவமைத்தது. வால்பகுதியில் இரண்டு புரொப்பல்லர்களுடன் கூடிய இந்த விமானத்தை அமெரிக்க விமானப் படையிடம் பரிசோதனைக்காக கொடுத்தது. மொத்தம் இரண்டு விமானங்கள் மட்டும் தயாரித்து வழங்கப்பட்டது. ஆனால், இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் ஜெட் எஞ்சின் பயன்பாடு அதிகரித்ததால், இதன் தொழில்நுட்பம் செயலற்றது.

11. லிபெல்லுலா
இங்கிலாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட ராணுவ பயன்பாட்டு விமானம். இதுவும் பரிசோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்டது. விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் தரை இறக்கும்போது பைலட் எளிதாக பார்ப்பதற்கு போதிய பார்வை திறன் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இது வடிவமைக்கப்பட்டது. இறக்கை அமைப்பும் வித்தியாசமானது.

12. வாட் வி173
சாதாரண விமானங்களுக்குரிய எந்தவொரு வடிவமைப்பு இலக்கணமும் இல்லாமல், ஒரு வட்ட வடிவிலான ஹெலிகாப்டர் போன்று தோற்றமளிக்கிறது. 1942ல் அமெரிக்க ராணுவத்தின் சோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்ட மாடல் இது.

13. தி ஏர்பஸ் ஏ300 - 600எஸ்டி
சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் என்று பொருள்படும் வகையில் பெயரிடப்பட்டிருக்கிறது. ராட்சத பொருட்களை விரைவாக எடுத்துச் செல்லும் வகையில், சிறப்பான இடவசதியுடன் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட விமானம். தற்போது பெலுகா என்று அழைக்கப்படுகிறது. திமிங்கலம் போன்ற வித்தியாசமான தோற்றத்தை கொண்டது.

14. எச்எல் 10
இறக்கை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலமைப்பும் விமானம் மேலே எழும்புவதற்கு உதவும் வகையில், வடிவமைக்கப்ட்ட நாசாவின் விசித்திர விமானம்.

15. நார்த் அமெரிக்கன் எக்ஸ்எஃப் 82
மாற்றான் சினிமாவில் இரண்டு சூர்யாக்களை இணைந்திருப்பது போன்று இருக்கும் இந்த விமானம் அமெரிக்காவின் பரிசோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்டது. அதிக தூரம் செல்லும் வகையில், இரண்டு மஸ்டாங் விமானங்களை இணைந்து இதுபோன்று வடிவமைத்தனர்.

16. பெரிவ் பி 200 சீப்ளேன்
1988ல் ரஷ்யா தயாரித்த இந்த விமானம் தண்ணீரில் தரையிறக்க முடியும்.

17. ஸ்டிபா கேப்ரோனி
1932ல் இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட பரிசோதனை முயற்சி விமானம்.

18. தி காஸ்பியன் சீ மாஸ்டர்
தண்ணீரில் தரையிறக்கக்கூடிய இந்த விமானத்தை ரஷ்யாவை சேர்ந்த ரோஸ்டிஸ்லேவ் அலெக்ஸியெவ் அமைப்பின் டிசைன் பிரிவு வடிவமைத்தது. 1966ல் வெளியிடப்பட்ட இந்த விமானத்தின் முன்பகுதியில் வரிசையாக எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதை காணலாம்.

19. பார்டினி பெரிவ் விவிஏ14
தண்ணீரில் தரையிறக்கூடியதாகவும், செங்குத்தாக மேலே எழும்பும் விதத்திலும் சோவியத் யூனியன் வடிவமைத்த விமானம்.

20. மெக்டோனல் எக்ஸ்எஃப் 85 கோப்லின்
1948ல் வடிவமைக்கப்பட்ட சிறிய வகை போர் விமானம்.

21. ஸ்னெக்மா பிளையங் கோலியோப்டெர்
1958ல் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் ராக்கெட் போன்று செங்குத்தாக மேலே எழும்பும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. ஆனாலும், சாதாரண விமானங்கள் போன்று படுக்கைவாட்டில் பறக்கும் தன்மை கொண்டது.

22. லாக்ஹீட் எக்ஸ்எஃப்வி
1953ல் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் வால்பகுதியை உந்திக் கொண்டு செங்குத்தாக மேலே எழும்பும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது.

23. புரோட்டியஸ்
1998ல் ஸ்கேல்டு காம்பேசிட்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட வித்தியாசமான விமானம் இது.


Click it and Unblock the Notifications








