சப்புக் கொட்ட வைக்கும் புதிய மெர்சிடிஸ்- மேபக் 'டாப்லெஸ்' கார்!

Written By:

டாப்லெஸ் கார்களுக்கு வாடிக்கையாளர்களிடத்தில் தனி விருப்பம் உண்டு. ஆனால், அதில் சில டாப்லெஸ் கார்கள் வாடிக்கையாளர்களை சப்புக் கொட்ட செய்வதோடு, உந்துதலை ஏற்படுத்தும்.

அந்த வகையில், மிகவும் அரிதான ஒரு டாப்லெஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய கார் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கார் பற்றிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

உலகின் மிகவும் விலை உயர்ந்த கார்களை தயார் செய்யும் மெர்சிடிஸ்- மேபக் பிராண்டின் எஸ்650 கார்தான் தற்போது மேல் ஆடையை களைந்து கேப்ரியோலோ மாடலாக ஒய்யாராமாக போஸ் கொடுத்து வருகிறது.

லிமிடேட் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, மொத்தமாக 300 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு காரும் பிரத்யேகமான எண் கொண்ட சாவி விளையம் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் டெய்டர் ஸெட்சேவின் கையொப்பத்துடன் கூடிய சான்றுடன் கிடைக்கும்.

டிசைனை பொறுத்தவரையில், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் கூரை இல்லாத கேப்ரியோலே ரகத்தில் வந்துள்ளது. புதிய பம்பர் அமைப்பு, 20 இன்ச் க்ரோம் வீல்கள், மெர்சிடிஸ்- மேபக் பிராண்டின் சின்னம் ஆகியவற்றுடன் வந்துள்ளது.

மெரிசிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த காரிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எஸ் க்ளாஸ் காரில் வழங்கப்படும் கிறிஸ்டல் கற்கள் பதிக்கப்பட்ட ஹெட்லைட்டுகளும் மேபக் எஸ்650 கேப்ரியோலே காரில் வழங்கப்படும்.

இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும் படில் விளக்குகள் தரையில் வெளிச்சத்தை பரப்பும்போது அதில் மேபக் எழுத்துக்கள் தெரியும் சிறப்பம்சம் கொண்டது. லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கான காரின் இன்டீரியர் வண்ணத்துடன் ஒத்துப்போகும் வகையில் விசேஷமான பைகளும் வழங்கப்படும்.

எஸ் க்ளாஸ் காரையும், மேபக் எஸ் கேப்ரியோலே மாடலையும் வேறுபடுத்துவதற்காக சில விசேஷ வேலைப்பாடுகள் வெளிப்புறத்திலும், டேஷ்போர்டிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொடுப்பதற்கும் மெர்சிடிஸ் பென்ஸ் தயாராக உள்ளது.

மெர்சிடிஸ் மேபக் காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 612.5 பிஎச்பி பவரையும், 999 என்எம் டார்க் திறனையும் வழங்கம். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விசேஷமான மெர்க் ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. இதனால், சொகுசான சவாரிக்கு உறுதியாக நம்பலாம். இதுதவிர, ஏராளமான சொகுசு வசதிகளும், நவீன தொழில்நுட்பங்களும் உள்ளன.

ஒரு காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.2.17 கோடி விலையில் விற்பனை செய்யப்படும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Mercedes-Maybach S650 Cabriolet has been revealed and it will be limited to just 300 ultra luxury units.
Please Wait while comments are loading...

Latest Photos