டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

Written By:

அமெரிக்க அதிபர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் விமானங்களை ஏர்ஃபோர்ஸ் ஒன் என்ற சங்கேத வார்த்தையில் குறிப்பிடுகின்றனர். அந்த விமானங்கள் பல்வேறு விசேஷ வசதிகளை கொண்டவை. இந்த நிலையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் பழமை அடைந்து விட்ட காரணத்தால், அதன் பராமரிப்புப் பணிகள் மிகுந்த செலவீனமும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி உள்ளன.

இதையடுத்து, இரண்டு புதிய விமானங்கள் வாங்குவதற்கு போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் டொனால்டு டிரம்ப் இந்த புதிய விமானங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரும் பணக்காரரான டொனால்டு டிரம்ப் வசம் ஏற்கனவே சொந்த விமானம் இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட அவர் தனது சொந்த விமானத்தை பிரச்சார வாகனம் போன்று மாறுதல்களை செய்து பயன்படுத்தினார்.

இந்த நிலையில், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் இல்லாவிட்டால் கூட டொனால்டு டிரம்ப் தனது விமானத்தையே அதிகாரப்பூர்வ விமானமாக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால்தான் புதிய விமானங்களுக்கான ஆர்டரை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆயினும், அவர் முடிவு சாத்தியப்படுமா என்பதை இந்த செய்தியை படித்து முடிக்கும்போது நீங்களே உணர்ந்துகொள்ள முடியும். ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருக்கும் சில விசேஷ பாதுகாப்பு வசதிகள் டொனால்டு டிரம்ப் விமானத்தில் இல்லை. இரு விமானங்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொனால்டு டிரம்ப் பயன்படுத்தி வரும் விமானம் போயிங் 757-200 என்ற ரகத்தை சேர்ந்தது. தற்போது உற்பத்தியில் இல்லை. கடந்த 1991ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 25 ஆண்டுகள் பழமையானது. சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை மதிப்புடையது.

மறுபுறத்தில் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் எவ்வாறெல்லாம் டொனால்டு டிரம்ப் விமானத்தை விஞ்சுகிறது என்பதை பார்க்கலாம். தற்போது இரண்டு போயிங் 747-200 பி மாடல் விமானங்கள்தான் அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ விமானங்களாக பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விமானம் 26 ஆண்டுகள் பழமையானது. மற்றொன்று 25 ஆண்டுகள் பழமையானது.

சாதாரண போயிங் 757 விமானத்தில் 200 பயணிகள் வரை செல்ல முடியும். ஆனால், டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான போயிங் 757 விமானம் பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளுடன் தனி நபர் பயன்பாட்டு விமானமாக மாற்றப்பட்டுள்ளது. 43 பேர் செல்வதற்கான வசதி கொண்டது. ஆனால், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் 70 பேர் வரை செல்ல முடியும்.

டொனால்டு டிரம்பின் போயிங் 757 விமானத்தை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 8,000 டாலர்கள் செலவு பிடிக்கும். ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தை ஒரு மணிநேரம் இயக்குவதற்கு 1.79 லட்சம் டாலர்கள் செலவாகிறது.

 

 

டொனால்டு டிரம்ப் விமான்ததில் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு 980 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 7,100 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களாக பயன்படுத்தப்படும் போயிங் 747-200 பி விமானத்தில் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மணிக்கு 1,128 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. ஆனால், சராசரி வேகம் இதைவிட சற்றே குறைவாக இருக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 12,150 கிமீ தூரம் வரை பறக்கும்.

டொனால்டு டிரம்ப் விமானத்தில் படுக்கை வசதி, 53 இன்ச் திரை டிவி பொருத்தப்பட்ட பொழுதுபோக்கு அறை, சாப்பாட்டுக்கூடம், குளியல் அறை போன்ற வசதிகள் உள்ளன. வாஷ் பேஸின், திருகு பம்புகள் மற்றும் சீட்பெல்ட் பட்டைகள் தங்க நிற முலாம் பூசப்பட்டவை.

மறுபுறத்தில் அமெரிக்க அதிபர் பறக்கும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் படுக்கை அறைகள், உடற்பயிற்சி கூடம், அலுவலக அறை, ஆலோசனைக் கூடம், சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த வங்கி, சாப்பாட்டுக் கூடம் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகள் உள்ளன.

இந்த விமானத்தில் 80 தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளன. பெரும்பாலானவை எதிரிகள் அல்லது வெளியாட்கள் இடைமறித்து கேட்க முடியாத வசதி கொண்டது. அதாவது, பறக்கும்போதே ராணுவத்திற்கும், அரசு உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கும், கட்டளை பிறப்பிதற்கும் ஏதுவானதாக இருக்கும்.

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களில் ஏவுகணை எதிர்ப்பு வசதி, ரேடார் செயலிழப்பு கருவிகள், பறக்கும்போதே நாட்டு மக்களுக்கு அதிபர் உறை நிகழ்த்துவதற்கான ஸ்டூடியோ, அணுகுண்டு தாக்குதல்களின்போது பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விசேஷ கட்டமைப்பு என பாதுகாப்பு அம்சங்களின் பட்டியல் நீள்கிறது. ஆனால், டிரம்ப் விமானத்தில் இந்த பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

அவசர சமயங்களில் தொடர்ந்து பறக்க நேர்ந்தாலும் எரிபொருள் பற்றிய பிரச்னை இல்லை. பறக்கும்போதே வேறு விமானத்திலிருந்து அமெரிக்க அதிபரின் விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியும். ஆனால், இந்த வசதி டொனால்டு டிரம்ப் விமானத்தில் இல்லை.

டொனால்டு டிரம்பின் விமானம் 30 மில்லியன் டாலர்கள் விலை மதிப்பு கொண்டது. ஆனால், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் ஒவ்வொன்றும் 325 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது.

இந்த நிலையில், புதிதாக வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்ட இரண்டு விமானங்களும் 2024ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. இரண்டு விமானங்களும் 2.7 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி பார்த்தாலும், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் தனது சொந்த விமானத்தை பயன்படுத்துவது ஆபத்து மிக்கதாகவே இருக்கும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆனால், டிரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பது அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Donald Trump Private Jet Vs Airforce One Jet: Comparison
Please Wait while comments are loading...

Latest Photos