ஜெனீவா மோட்டார் ஷோவில் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கும் சூப்பர் கார்கள்!

Written By:

ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஆண்டுதோறும் வெகுவாக கவர்ந்து வரும் ஜெனீவா மோட்டார் ஷோ வரும் மார்ச் 1ந் தேதி முதல் 13ந் தேதி வரை நடக்க இருக்கிறது. உலகின் மிகப்பெரிய சர்வதேச மோட்டார் கண்காட்சிகளில் ஒன்றான இதில், பல்வேறு வகை கார்களும் பார்வையாளர்களை கவர காத்திருக்கின்றன.

இந்த நிலையில், இந்த ஆட்டோ ஷோவில் களமிறங்கி இருக்கும் சூப்பர் கார்கள் குறித்து எமது டிரைவ்ஸ்பார்க் செய்தியாளர் இர்வின் மில்ஸ் பார்வையில் அதிக எதிர்பார்ப்பை தூண்டியிருக்கும் டாப் 10 சூப்பர் கார்கள் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

கோனிக்செக் ரெகரா

கோனிக்செக் ரெகரா

கடந்த ஆண்டு எமது செய்தியாளரின் மனதை கொள்ளை கொண்ட மாடலான இது தற்போது தயாரிப்பு நிலை மாடலாக காண இருக்கிறோம். பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் என ஒரு ஹைபிரிட் மாடலாக வர இருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து அதிகட்சமாக 1,500 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். இது போதாதா, அப்படியெனில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த காரின் கதவுகள் மற்றும் பாடி பேனல்களை பொத்தானை அழுத்தினால், தானாக திறக்கும் வசதியுடன் வருகிறது.

 மார்கன் இவி-3

மார்கன் இவி-3

பிற கார்களை போல அல்லாமல், ஒரு புதுமையான டிசைன் மற்றும் மூன்று சக்கர கார் மாடலாக வருகிறது. மேற்கூரை இல்லாமல் வரும் இந்த கார், ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். இந்த கார் முழுவதுமாக பேட்டரியில் இயங்கும் என்பதும் இதன் கூடுதல் சிறப்பு.

 ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ

ஃபெராரி ஜிடிசி4 லுஸ்ஸோ

இந்த புதிய ஃபெராரி காரின் பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா? இது ஃபெராரி எஃப்எஃப் காருக்கு மாற்றாக வரும் புதிய மாடல். ஷூட்டிங் பிரேக் எனப்படும் பிரத்யேகமான ரகத்தில் வரும் இந்த மாடல் கூபே மற்றும் ஸ்டேஷன் வேகன் கார்களின் கலப்பின வகையாக குறிப்பிடலாம். அதேநேரத்தில், ஃபெராரி எஃப்எஃப் காரைவிட சற்று கூடுதல் திறன் வாய்ந்த வி-12 எஞ்சின் இடம்பெற்றுல்ளது. இந்த காரின் பெயரில் இருக்கும் 4 என்ற எண் இது 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதை குறிக்கிறது. மேலும், இதன் பின்புற சக்கரங்கள் சற்றே திரும்பும் தொழில்நுட்பம் கொண்டது. அதாவது, வளைவுகளில் சிறப்பான கையாளுமையை தரும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையும் ஜெனீவா மோட்டார் ஷோவில் காணலாம்.

புகாட்டி சிரான்

புகாட்டி சிரான்

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமைக்குரிய புகாட்டி வேரான் காரின் வழித்தோன்றலாக வர இருக்கிறது புகாட்டி சிரான். புகாட்டி வேரான் காரைவிட ஹென்னிஸி வேனோம் கார் அதிவேக மாடலாக குறிப்பிடப்பட்டாலும், புகாட்டி வேரான் கார்தான் உலகின் அதிவேக கார் என்ற சாதனையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. மேலும், ஹென்னிஸி வேனோம் காரின் போட்டியை சமாளிக்க அதைவிட அதிசக்திவாய்ந்த மாடலை களமிறக்கும் உத்வேகத்தில் சிரான் காரை புகாட்டி களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. அஜெனீவா மோட்டார் ஷோவில் எதிர்பார்க்கப்படும் மிக மிக முக்கிய மாடல்களில் ஒன்று. ஹைப்பர் கார் ரகத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புகாட்டி சிரான் காரில் அதற்கு தகுந்தாற்போல 16 சிலிண்டர்கள், 4 டர்போசார்ஜர்கள் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதுவும் 1,500 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் என்பதோடு, மேக் 0.33 என்ற டாப் ஸ்பீடு கொண்டதா இருக்கும். எனவே, புகாட்டி வேரானைவிட அதிக வேகம் செல்லும் என்பது புலனாகிறது. மேலும், இந்த கார் வாங்குவதற்கு தகுதியுடைய, திறன் படைத்த பெரும் பணக்கார்களுக்கு ஏற்கனவே காண்பிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 மெக்லாரன் 570 ஜிடி

மெக்லாரன் 570 ஜிடி

மெக்லாரனின் புதிய சூப்பர் கார். மெக்லாரன் கார்களிலேயே மிகவும் சொகுசானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு சொகுசு என்பதை ஜெனீவா மோட்டார் ஷோவில்தான் பார்த்த பின்னரே நாம் இந்த காரை பாராட்ட முடியும்.

பகானி ஹூவைரா பிசி

பகானி ஹூவைரா பிசி

உலகின் மிகவும் பிரத்யேகமான கார் மாடல்களில் பகானி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு முக்கிய இடமுண்டு. வித்தியமாசமான தோற்றம், அதிர வைக்கும் செயல்திறன், நினைத்து பார்க்க முடியாத விலை என தன்னை போட்டியாளர்களிடமிருந்து மிகவும் வித்தியாசப்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையில், ஹூவைரா பிசி எடிசன் என்ற புதிய மாடலை ஜெனீவாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது பகானி. இலகு எடை, அதிக செயல்திறன், சிறப்பான காற்றியக்கவியல், அதிக விலை கொண்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்ன விலை இருந்து விடப்போகிறது என்பவர்களுக்கு, இது 2.6 மில்லியன் டாலர் விலையில் எதிர்பார்க்கப்படுவதையும் கூறி விட வேண்டும்.

 2017 ஜாகுவார் எஃப்- டைப் எஸ்விஆர்

2017 ஜாகுவார் எஃப்- டைப் எஸ்விஆர்

உலகின் அழகான ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக எஃப் டைப் காரை அனைவரும் புகழ்ந்து தள்ளுகின்றனர். அதேநேரத்தில், செயல்திறனிலும் பிச்சு உதறுகிறது. இந்த நிலையில், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சிறப்பு கார் வடிவமைப்புப் பிரிவின் கைவண்ணத்தில் இந்த காரின் மதிப்பை மேலும் கூட்டியுள்ளது. இந்த காரில் இருக்கும் வி8ஆர் எஞ்சினின் சக்தி 25 எச்பி வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும். கூடுதல் பாடி கிட் போன்ற சமாச்சாரங்கள் இடம்பெற்றிருக்கிறதா? எந்த அளவு இதன் மதிப்பு கூட்டப்பட்டிருக்கிறது என்பதை காண அடுத்த சில நாட்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

 அஸ்டன் மார்ட்டின் டிபி11

அஸ்டன் மார்ட்டின் டிபி11

தற்போது வெளிவரும் அஸ்டன் மார்ட்டின் கார் மாடல்களில் DB என்ற வரிசையில் குறிப்பிடப்பட்டால், மிக சொகுசான கிராண்ட் டூரர் கூபே கார் என்பதை குறிப்பால் உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ஜேம்ஸ்பாண்ட் டிபி5 காரிலிருந்து கூட நாம் நினைவுப்படுத்திக் கொள்ளலாம். அதிக விபரங்கள் வெளியிடப்படாவிட்டாலும், இந்த கார் டிபி9 காருக்கு மாற்றாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் உருவாக்கப்பட்ட டிபி10 கார் ஸ்பெக்டர் ஜெம்ஸ்பாண்ட் படத்திற்காக கான்செப்ட் மாடலாக தயாரக்கப்பட்டது நினைவுகூற வேண்டும். சரி, டிபி 11 காரின் விஷயத்துக்கு வருவோம். இந்த காரில் 5.2 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின் இடம்பெற்றிருக்கும் என்பது எமது எதிர்பார்ப்பு.

 லம்போர்கினி சென்டினரியோ

லம்போர்கினி சென்டினரியோ

லம்போர்கினி கார்களின் விந்தையான வடிவமைப்புடன் வந்த லிமிடேட் எடிசன் மாடல்களின் வரிசையில் வரும் புதிய மாடல். லம்போர்கினி நிறுவனர் ஃபெரூஷியோ லம்போர்கினியின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வெளியிடப்படும் லிமிடேட் எடிசன் மாடல். எனவே, வெனினோ, ஈகோயிஸ்டா, ரெவென்டன் மற்றும் செஸ்டோ எலிமென்டோ வரிசையில் இந்த காரும் சற்று வித்தியசமான டிசைன் அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறலாம். இந்த காருக்கான முன்பதிவு முடிந்து விட்டது என்பது கொசுறுத் தகவல். எனவே, ஜெனீவா வருபவர்கள் காரை பார்த்து வியக்கலாமே, தவிர முன்பதிவு பற்றி மூச் விட முடியாது.

போர்ஷே 911 ஆர்

போர்ஷே 911 ஆர்

ஜெனீவா மோட்டார் ஷோவில் இரண்டு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக போர்ஷே நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், ஒன்று 718 பாக்ஸ்டர் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், மற்றொன்று? அது 911ஆர் காராக இருக்கலாம் என்று கார்ஸ்கூப்ஸ் தளம் தெரிவிக்கிறது. பெர்ஃபார்மென்ஸ் பிரியர்களின் நெஞ்சத்தை தாளம் போடச் செய்திருக்கும் இந்த காரில், டிராக்கில் மட்டுமே ஓட்டும் அம்சங்கள் கொண்ட 911 ஜிடி3 காரில் இருக்கும் எஞ்சினுடன் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், பிடிகே டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஜெனீவா மோட்டார் ஷோ பற்றி அப்டேட்டுகளுக்கு டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

English summary
The 2016 Geneva International Motors Show scheduled from March 1 – 13 is surely going to drive auto journalists nuts, and car manufacturers crazy. It's time to show-off. Last year, the show floor witnessed the pulchritudinous Bentley EXP 10 Speed 6, the Bugatti Veyron, the Ferrari 488 GTB, and the one that really caught Mr. Mills attention was — the Koenigsegg Regera. So this year what are some beauteous cars we can expect?
Story first published: Sunday, February 28, 2016, 10:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more