மாருதி ஆல்டோ விலையில் களமிறங்கிய 7 சீட்டர் காரின் டெலிவரி தொடங்கியது! எர்டிகா சோலி முடின்ச்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் க்ராவைட் (Nissan Gravite) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டெலிவரி (Delivery) பணிகள் இந்தியா முழுவதும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிஸான் க்ராவைட் காரில், 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.

இதில், மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 19.3 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஏஎம்டி மாடல் ஒரு லிட்டருக்கு 19.6 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்க கூடியவையாக உள்ளன. இவை நிஸான் நிறுவனத்தால் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நிஸான் க்ராவைட் காரில் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எதிர்காலத்திலும் இது நடக்குமா? என்பது சந்தேகம்தான். இருப்பினும் க்ராவைட் காரில் ட்யூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என நிஸான் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

இது இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரக கார்களில் ஒன்றாகும். இருப்பினும் நிஸான் நிறுவனம் க்ராவைட் காரில் ஏராளமான வசதிகளை வாரி வழங்கியுள்ளது. இதில், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் 8.89 செமீ எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பிஎம் 2.5 ஃபில்டர், கூல்டு க்ளவ் பாக்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய வசதிகளும், நிஸான் க்ராவைட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நிஸான் க்ராவைட் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை. 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், பிரேக் அஸிஸ்ட் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை எல்லாம் இந்த காரின் மிக முக்கியமான பாதுகாப்பு வசதிகள் ஆகும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காரின் டாப் வேரியண்ட்டின் விலையிலேயே உங்களால் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வாங்கி விட முடியும்.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் டாப் வேரியண்ட்டின் விலை 5.45 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் நிஸான் க்ராவைட் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8.94 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் 7 சீட்டர் எம்பிவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, நிஸான் க்ராவைட் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. நிஸான் க்ராவைட் காரின் வருகை, மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








