Just In
- 5 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 7 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 10 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
- 11 hrs ago
ஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...
Don't Miss!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Sports
புதிய கிளர்ச்சியே ஏற்படும்... பூதாகரமாக வெடித்த பிட்ச் சர்ச்சை... ஐசிசியை விளாசும் முன்னாள் வீரர்
- News
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்? அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட்டகாசமான வசதிகளுடன் வேற லெவலுக்கு மாறியுள்ள 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி... டெஸ்ட் ரைடு ரிவியூ!
இந்தியாவில் அப்பாச்சி ஆர்டிஆர் சீரிஸ் மூலம் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட்-நேக்கட் மோட்டார்சைக்கிள்களை டிவிஎஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வரிசை பைக்குகளில், 160 சிசி மாடல் முதல் ஆர்டிஆர் 200 4வி வரையிலான மாடல்கள் அடங்குகின்றன.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் வரிசை பைக்குகளின் டாப் மாடலான 200 4வி, கடந்த 2020ம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டது. அப்போது இதன் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டன. இந்த வரிசையில் தற்போது மற்றொரு அப்டேட்டையும் டிவிஎஸ் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளின் டிசைனில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. எனினும் சில புதிய வசதிகளை டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த புதிய மாடலை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பரபரப்பான பெங்களூர் மாநகர சாலைகள் மட்டுமல்லாது, நெடுஞ்சாலைகளிலும் நாங்கள் இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். 2021 மாடலில் என்னென்ன புதிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன? இந்த புதிய மாடல் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்பது உள்பட உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் இந்த செய்தியில் விடை அளிக்கிறோம்.

டிசைன் & ஸ்டைல்
2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, 2020 மாடலை போலவே உள்ளது என பார்த்தவுடன் கூறி விடலாம். நாங்கள் ஏற்கனவே கூறியபடி, டிசைனை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க அளவில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் முன் பகுதியில், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்களும், ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்களும் வழங்கப்பட்டுள்ளன. 2020 பிஎஸ்-6 மாடலில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட அதே ஹெட்லேம்ப் யூனிட்தான் இது. இந்த பைக்கின் பிஎஸ்-4 மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய ஹெட்லேம்ப்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன. அதிக தூரத்திற்கு ஒளியை வீசுகின்றன.

அதே நேரத்தில் முந்தைய மாடலில் உள்ள அதே எரிபொருள் டேங்க்தான் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. நிறைய ஷார்ப்பான லைன்கள் மற்றும் மடிப்புகள், எரிபொருள் டேங்க்கிற்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகின்றன. மேலும் இந்த பைக் ஸ்பிளிட் இருக்கைகளை பெற்றுள்ளது.

பின் பகுதியை பொறுத்தவரை எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து டிசைன் அம்சங்களும் முந்தைய மாடலில் இருந்து அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, தற்போது சிகப்பு நிற பாடி கிராபிக்ஸ் உடன் மேட் ப்ளூ வண்ண தேர்வில் வருகிறது. இந்த வண்ண தேர்வை, புதிய மாடலில் இடம்பெற்றுள்ள மாற்றமாக குறிப்பிடலாம்.

முக்கியமான வசதிகள்
2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பல்வேறு வசதிகளுடன் வந்துள்ளது. ஆனால் இதில் பெரும்பாலான வசதிகள் கடந்த ஆண்டின் பிஎஸ்-6 மாடலில் இருந்து அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட்கள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்பிளிட் இருக்கைகள் உள்பட பல்வேறு வசதிகள் அடங்குகின்றன.
எனினும் ரைடிங் மோடுகள், ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் தொழில்நுட்பம், க்ளைடு த்ரூ டெக்னாலஜி, அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் க்ளட்ச் லிவர்கள், முன் மற்றும் பின் பகுதியில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸன் செட்-அப் ஆகிய வசதிகளை சேர்த்திருப்பதை 2021 மாடலின் முக்கிய அப்டேட்களாக குறிப்பிடலாம்.

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில், ரெயின், அர்பன் மற்றும் ஸ்போர்ட் என செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. செயல்திறன் மற்றும் இதர அம்சங்களில், இந்த மூன்று ரைடிங் மோடுகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக உள்ளன. அவற்றை இதே செய்தியில் பின் வரும் செயல்திறன் பிரிவில் கூறியுள்ளோம். வலது பக்க ஹேண்டில்பாரில் உள்ள மோடு பட்டனை பயன்படுத்தி, ரைடிங் மோடுகளை ரைடர் மாற்றி கொள்ளலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் 2021 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ள மற்றொரு வசதி டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் தொழில்நுட்பம். இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ப்ளூடூத் வசதியுடன் வருகிறது. பிரத்யேகமான செயலி மூலம் ரைடரின் ஸ்மார்ட்போனுடன் மோட்டார்சைக்கிளை இணைத்து கொள்வதற்கு இது அனுமதிக்கிறது. இணைக்கப்பட்டவுடன், மெசேஜ் அலர்ட்கள், கால் அலர்ட்கள் மற்றும் நேவிகேஷன் உள்பட பல்வேறு கூடுதல் வசதிகளை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்குகிறது.

இதுதவிர டிவிஎஸ் நிறுவனத்தின் ஜிடிடி எனப்படும் க்ளைடு த்ரூ டெக்னாலஜியும் (GTT - Glide Through Technology), 2021 அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. குறைவான வேகத்தில் செல்லும்போது, க்ளட்ச்சை விட்டு விடுவதற்கு இந்த தொழில்நுட்பம் ரைடரை அனுமதிக்கிறது. குறைவான வேகத்தில் க்ளட்ச்சை பிடிக்காமல் இருப்பதால், பைக் ஆஃப் ஆகாது. இதன் மூலம் கைகளுக்கு சற்று ஓய்வு கிடைக்கும். இந்த தொழில்நுட்பம் கிட்டத்தட்ட கார்களில் இருக்கும் க்ரூஸ் கண்ட்ரோலை போன்றது.
அதே சமயம் இந்த பைக்கில் ஷோவா நிறுவனத்தின் சஸ்பென்ஸன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன் பகுதியில் வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் மோனோ-ஷாக் யூனிட்டும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக்கின் இருபுறமும் பெட்டல் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது.

இன்ஜின், பெர்ஃபார்மென்ஸ் & ஹேண்ட்லிங்
2020 மாடலில் உள்ள பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான அதே 197 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஆயில்-கூல்டு இன்ஜின்தான், 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9000 ஆர்பிஎம்மில் 20.5 பிஎச்பி பவரையும், 7250 ஆர்பிஎம்மில் 17.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இது ஸ்போர்ட் மோடில் வெளிப்படும் பவர், டார்க் திறன்களாகும்.
ரெயின் மற்றும் அர்பன் மோடுகளில், இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7800 ஆர்பிஎம்மில் 17.2 பிஎச்பி பவரையும், 5750 ஆர்பிஎம்மில் 16.5 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும். அதே சமயம் இந்த இன்ஜினுடன் அதே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் வழங்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது.

ரைடிங் மோடுகளுக்கு ஏற்ப பவர் மற்றும் டார்க் திறன் மாறுபட்டாலும், ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில், இன்ஜின் செயல்திறனில் பெரிதாக எந்த வித்தியாசத்தையும் உணர முடியவில்லை. எரிபொருள் சிக்கனத்தை பொறுத்தவரை 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள், ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டருக்கு 44 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. எனினும் அர்பன் மோடில் ஒரு லிட்டருக்கு 46 கிலோ மீட்டருக்கும் மேலான மைலேஜ் கூட கிடைக்கலாம்.
இங்கே ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில், உங்களது தினசரி நகர பயன்பாட்டிற்கு ஏற்ற பவர் போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் நெடுஞ்சாலைகளுக்கு சென்று விட்டால், ஸ்போர்ட் மோடுக்கு மாற வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஸ்போர்ட் மோடில்தான் இன்ஜின் செயல்திறனை ரைடரால் முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடிகிறது. ஆரம்ப நிலையில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லாவிட்டாலும், அதிக வேகத்தில் பயணிக்கும்போது சிறப்பான உணர்வை இந்த மோடு தருகிறது.

அதே சமயம் இன்ஜின் ரீஃபைன்மெண்ட் மிகவும் சிறப்பாக இருக்கிறது. எந்த வேகத்தில் ஓட்டினாலும், இன்ஜின் மென்மையான உணர்வைதான் கொடுக்கிறது. அதே நேரத்தில் சிறிய அளவிலான அதிர்வுகள் இருக்கின்றன. ஆனால் இன்னும் வேகமாக செல்லக்கூடிய நம்பிக்கை ரைடருக்கு கிடைக்கிறது.
2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் இருக்கைகள் சௌகரியமான பயணத்தை உறுதி செய்கின்றன. தொலை தூர பயணங்களை மேற்கொள்வது எளிமையாக இருக்கும். அத்துடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் க்ளட்ச் லிவர்களுடன் இந்த பைக் வருவதும் ரைடருக்கு கூடுதல் சௌகரியத்தை வழங்கும்.
எனினும் சிறப்பான கையாளுமைதான், இந்த பைக்கில் ஒருவரை ஈர்க்க கூடிய மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கும். இந்த பைக்கின் எடை வெறும் 151 கிலோ மட்டுமே. குறைவான எடை காரணமாக, இந்த பைக் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

அதே சமயம் முன் மற்றும் பின் பகுதியில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஸன் அமைப்பால், ஹேண்ட்லிங் இன்னும் சிறப்பானதாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் ரைடர் தனது எடைக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸனை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்கு இது உதவி செய்கிறது.
முன் பகுதியில் உள்ள டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளை எளிதாக செட் செய்து விட முடியும். இதனை நாணயம் மூலமாக ரைடரே மிக எளிமையாக செய்து விடலாம். எனினும் பின் பகுதியில் மோனோ-ஷாக் சஸ்பென்ஸனை அட்ஜெஸ்ட் செய்வது சற்று கடினமானது. இதனை செட் செய்வதற்கு சிறிது நேரம் ஆகும். அதே நேரத்தில் இந்த பைக்கின் பிரேக்குகளும் மிக சிறப்பான செயல்படுகின்றன. வேகமாக சென்றாலும் அவை பைக்கை உடனடியாக நிறுத்தி விடுகின்றன.

வேரியண்ட்கள், வண்ண தேர்வுகள் & விலை
சிங்கிள் சேனல் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் என மொத்தம் 2 வேரியண்ட்களில், 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் விற்பனைக்கு கிடைக்கும். ரைடிங் மோடுகள் மற்றும் சஸ்பென்ஸனை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதிகள் டாப் மாடலான ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகின்றன. கூடுதலாக வழங்கப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 1.33 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். க்ளோஸ் பிளாக், பேர்ல் ஒயிட் மற்றும் மேட் ப்ளூ என மொத்தம் மூன்று வண்ண தேர்வுகளில் இந்த பைக் கிடைக்கும்.

போட்டியாளர்கள்
இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 மற்றும் கேடிஎம் 200 ட்யூக் உள்ளிட்ட பைக்குகளுடன், 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி போட்டியிடும்.

தீர்ப்பு
முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி நன்றாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் செயல்திறன் சிறப்பாக இருப்பதுடன், சௌகரியமான பயணமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பான கையாளுமையையும் இந்த பைக் வழங்குகிறது. கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகள் இந்த பைக்கின் மதிப்பை உயர்த்துகின்றன.