டொயோட்டோவுக்கு ரூ.9 கோடி வரிச்சலுகை: கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூர் அருகே பிடதியில் டொயோட்டோ நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில், கரொல்லா அல்டிஸ், இன்னோவா மற்றும் பார்ச்சூனர் ஆகிய கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை அந்த நிறுவனம் கட்டி வருகிறது. இதில், எட்டியோஸ் மற்றும் லிவா கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவது தொழிற்சாலைக்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி மதிப்புடைய கார் தயாரிப்புக்கான கனரக இயந்திரங்களை பல கட்டங்களாக இறக்குமதி செய்து வருகிறது.
இதற்காக, கர்நாடக அரசு ஏற்கனவே ரூ.80 கோடி வரை இறக்குமதி வரியில் சலுகை அளித்துள்ளது.
இந்த நிலையில், கனரக இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்காக டொயோட்டோவுக்கு மேலும் ரூ.9 கோடி வரிச்சலுகை அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை, அம்மாநில உயர்கல்விதுறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, டொயோட்டோவுக்கு கர்நாடக அரசு அளித்துள்ள வரிச்சலுகை ரூ.89 கோடியாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








