கார்கள் பளிச்சென்று ஆக வேண்டுமா? இதோ 10 ரகசியங்கள்...

Posted By: Gopi

ஆள்பாதி... ஆடை பாதி... என்பார்கள். நாம் போட்டிருக்கும் உடையிலும், புறத்தோற்றத்திலும், மிடுக்கான பார்வையிலும்தானே நமது ஆளுமை அதாவது பெர்சானிலிட்டி ஒளிந்திருக்கிறது.

அழுது வடிந்த முகத்துடன் அழுக்குப் படிந்த சட்டையுடன் வெளியே போனால் நம் நிழல் கூட நம்மை மதிக்காது. அதுபோலத்தான் வாகனங்களும். லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி காரை வாங்கிய பிறகு அதை தூய்மையாக வைத்துக் கொள்ளாவிட்டால் பயனில்லை.

கார் பராமரிப்பு டிப்ஸ்

இதுதான் எனது கார் என்று அழுக்கும், சேறும் படிந்த வாகனத்தைக் காட்ட முடியுமா? கார் வாங்குவதைக் காட்டிலும், அதைப் பராமரிப்பது என்பது ஓர் ஆகச்சிறந்த கலை.

தொலை தூரம் பயணித்த பிறகு காரில் எத்தனையோ கறைகளும், அழுக்குகளும் படிந்திருக்கலாம். அதைக் கவனித்துத் தூய்மைப்படுத்துவது அவசியம்.

இதில் இன்னொரு ரகசியமும் உள்ளது. வாட்டர் வாஷுக்கு வெளியில் காரைக் கொடுப்பதைக் காட்டிலும் நீங்களே அதைக் கழுவும்போது உங்களது காரின் மீதான மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். அதன் மீது நீங்கள் வைத்திருக்கும் நேசம் அதிகரிக்கும் என்பது உளவியல் ரீதியான உண்மை.

சரி விஷயத்துக்கு வருவோம்.... காரைத் தூய்மைப்படுத்த எளிமையான 10 வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றினாலே உங்கள் கார் பளிச்சென்று இருக்கும். பார்ப்போர் கண்ணைப் பறிக்கும்...

1. இரண்டு வாளி தண்ணீர் இருந்தாலே காரைக் கழுவிவிடலாம் என நினைப்பது தவறு. அதிகமாக தண்ணீர் ஊற்றிக் கழுவுவது நல்லது.

2. அதேபோல் காரைத் தூய்மையாக்க நீங்கள் பயன்படுத்தும் துணியோ அல்லது ஸ்பான்சோ கீறல்களை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு கார் கழுவுவதற்கான தரமானப் பொருள்களைக் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

3. நீண்ட தொலைவுப் பயணம் மேற்கொண்டால் ரிம்கள் மற்றும் வீல்களில் கிரீஸ் படிந்துவிடுவது இயல்பு. எனவே, அதை நீக்க டிஷ் வாஷ் சோப்பைப் பயன்படுத்தித் துடைக்கலாம்.

4. முகப்புக் கண்ணாடியில் காய்ந்து படிந்திருக்கும் பூச்சி, புழுக்களை அகற்ற கோலா பானத்தை சிறிதளவு பயன்படுத்தலாம். அவற்றின் மீது கொஞ்சமாகத் தெளித்து சிறிது நேரம் கழித்து துடைத்தெடுக்கலாம். பெயிண்ட் மீது கோலாவை ஊற்றினால், அது உரிந்துவிடும் ஜாக்கிரதை.

5. சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போது நமது கார் அங்கு சென்றால் தார் கறைகள் படிய வாய்ப்புண்டு. அப்படியாக உள்ள தார் கறைகளை நீக்க மையோனிஸ் (உணவுப் பொருள்) பயன்படுத்தலாம். 5 நிமிடத்துக்கு மையோனிஸைத் தேய்த்து துடைத்தால் தார் கறை காணாமல் போய்விடும்.

6. முகப்புக் கண்ணாடியில் படிந்துள்ள பறவைகளின் எச்சத்தைத் துடைக்க சோடாவைப் பயன்படுத்தித் துடைக்கலாம்.

7. குரோம் பிட் எனப்படும் எவர் சில்வர் தோற்றத்தில் வடிவமக்கப்பட்ட பொருள்கள் காரின் வெளியே பொருத்தப்பட்டிருந்தால், நீண்ட நேரப் பயணத்துக்குப் பிறகு அதன் பளபளப்பு மங்கி விடும். அதை மீட்டெடுக்க சிறிதளவு சாம்பலை வைத்து மென்மையாகத் தேய்த்து துடைத்தால் மீண்டும் பளிச்சென அவை பிரகாசிக்கும்.

8. காரின் உள்ளே இருக்கும் மேட்கள் எளிதில் மாசடைந்து விடும். அவற்றை குறிப்பிட்ட காலத்துக்கு வெளியே எடுத்து சோப் போட்டு கழுவி மீண்டும் பொருத்த வேண்டும்.

9. காருக்குள்ளே அமர்ந்து உணவருந்தினாலோ, புகை பிடித்தாலோ சிறிது நேரத்துக்குப் பிறகு அது விரும்பத்தகாத கெட்ட வாசனையாக மாறிவிடும். அதைத் தவிர்க்க அதிக நெடியில்லாத டியோடரன்ட்களைப் (வாசனை திரவியங்கள்) பயன்படுத்துவது நல்லது.

10. கார் கதவுகளில் வரும் கீச்சிடும் சத்தத்தையும், இறுக்கத்தையும் தவிர்க்க ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். சிறிதளவு ஆலிவ் எண்ணையை துணியில் நனைத்துக் கொண்டு கார் கதவுகளின் இடுக்குகளில் தடவினால் இந்தப் பிரச்னை வராது.

இந்த 10 ரகசியங்களையும் கடைப்பிடித்தால் உங்கள் கார், பார்க்க செம ஸ்மார்ட்டான லுக்கைக் கொடுக்கும்.

English summary
10 Car Cleaning Secrets To Try At Home.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark