வாடகைக்கு வண்டி ஓட்றீங்களா? அப்ப லாபத்தை அதிகரிக்க இதை பண்ணுங்க!
இந்தியாவில் லாரி, பஸ் மற்றும் டெம்போ போன்ற வர்த்தக வாகனங்களை வைத்து பலர் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் லாபம் ஈட்ட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.
லாபத்தை அதிகரிக்க வேண்டுமென்றால், பொருத்தமான வணிக வாகனத்தை தேர்ந்தெடுப்பது முக்கியம். நீங்கள் வாங்கவுள்ள வர்த்தக வாகனத்தின் சுமை திறன், எரிபொருள் திறன் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற காரணிகளை மிகவும் தெளிவாக கவனியுங்கள். இவை அனைத்தும் ஓகே என்றால் மட்டும், அந்த வாகனத்தை வாங்குங்கள்.

எரிபொருள் செலவை குறைத்தல்: வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்தத்தை பராமரிப்பதன் மூலம் எரிபொருள் செலவை குறைக்க முடியும். அதாவது வாகனம் ஓரளவிற்கு சிறப்பான மைலேஜை தரும். இதுதவிர நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதை தவிர்ப்பது, மென்மையாக ஆக்ஸலரேஷன் செய்வது மற்றும் மிதமான வேகத்தில் பயணம் செய்வது உள்ளிட்ட நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமும், எரிபொருள் செலவை குறைக்கலாம்.
சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வது: அதிகம் செலவு வைக்க கூடிய பழுதுபார்ப்புகளை தடுக்க வேண்டுமென்றால், உங்கள் வர்த்தக வாகனத்தை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்து விடுங்கள். சீரான இடைவெளிகளில் ஆயில் மாற்றுவது, ஃபில்டர்களை மாற்றுவது போன்ற விஷயங்கள், பிற்காலத்தில் அதிக செலவு வைப்பதை தடுக்கும்.

திட்டமிட்டு பயணம் செய்யுங்கள்: பயணிக்கும் தூரத்தை குறைப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கும், செல்ல வேண்டிய வழிகளை முன்கூட்டியே திறம்பட திட்டமிடுங்கள். இதன் மூலம் எரிபொருள் செலவை உங்களால் குறைக்க முடியும். எரிபொருள் செலவு குறைகிறது என்றாலே, லாபம் அதிகரிக்கிறது என்பதுதான் அர்த்தம்.
தொழில்நுட்பத்தின் உதவியை நாடுங்கள்: ஓட்டுநர்களின் நடத்தையை அவ்வப்போது கண்காணிப்பது அவசியம். சரியான பாதையில்தான் பயணம் செய்கிறாரா? என்பது போன்ற விஷயங்களை கண்காணியுங்கள். வாகனம் எங்கு இருந்தாலும், அதை நீங்கள் வீட்டில் அமர்ந்து கொண்டே செல்போனில் கண்காணிக்க முடியும். அதற்கு தொழில்நுட்பத்தின் உதவியை நாடுங்கள்.
பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம் என்று இருக்க வேண்டாம்: கண்ணை கவரும் கிராபிக்ஸ் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களுடன் உங்கள் வர்த்தக வாகனம் தொடர்பான விளம்பரத்தை பிரபலப்படுத்த முயற்சி செய்யுங்கள். இது சாத்தியமான வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவும். அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்தால், உங்கள் லாபம் தானாகவே உயர்ந்து விடும்.
விபத்து நடக்காம இருக்கணும், சரக்கு டேமேஜ் ஆக கூடாது: உங்கள் டிரைவர்கள், சரக்குகள் மற்றும் பிற சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சி செய்யுங்கள். ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் டேஷ்போர்டு கேமராக்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பொருத்துதல், டிரைவர்களுக்கு சீரான இடைவெளிகளில் பயிற்சி வழங்குதல் ஆகியவற்றின் மூலம் இதை எளிமையாக செய்ய முடியும்.
வாடிக்கையாளர்கள் முக்கியம்: சிறப்பான சேவையை வழங்குவதன் மூலம், உங்கள் வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால உறவுகளை உருவாக்க முடியும். இது உங்கள் லாபத்தை அதிகரிப்பதற்கான மிக முக்கிய நெறிமுறை ஆகும். உங்கள் சேவையால் ஒரு வாடிக்கையாளர் திருப்தியடைந்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் உங்களிடமே வருவார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாங்கள் இங்கே கூறியுள்ள விஷயங்களை நீங்கள் தவறாமல் பின்பற்றினால், நிச்சயமாக உங்கள் வர்த்தக வாகனம் நல்ல லாபத்தை வழங்க தொடங்கும். அத்துடன் இந்த லாப தொகை, உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யவும் பயன்படும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








