ஒரு சிலரோட வண்டி டயர் ரொம்ப வருஷத்துக்கு உழைக்கும்... ஏன்னா அவங்க இதையெல்லாம் கண்டிப்பா பண்ணுவாங்க!
கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் அடிக்கடி டயர்களை மாற்றும் சூழலில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குதான் இந்த செய்தி. டயர்களின் ஆயுட்காலம் அதிகரிக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் கூறியுள்ளோம். சரி, வாருங்கள். செய்திக்குள் செல்லலாம்.
காற்றழுத்தம் ரொம்ப முக்கியம்: உங்கள் வாகனத்தின் டயர்களில் காற்றழுத்தத்தை (Air Pressure) தவறாமல் சோதனை செய்யுங்கள். உற்பத்தி நிறுவனம் பரிந்துரை செய்த அளவில் காற்றழுத்தம் இருந்தால் மட்டுமே, நீண்ட டயர் ஆயுட்காலத்தை உங்களால் பெற முடியும் என்பதை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஓவர்வெயிட் வேண்டாமே பாஸ்: அதிக எடை உங்கள் டயர்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் உங்கள் வாகனத்தில் அதிக எடையை ஏற்றினால், அவை மிகவும் வேகமாக தேய்ந்து விடும். எனவே உற்பத்தி நிறுவனம் பரிந்துரை செய்த திறனை தாண்டி உங்கள் வாகனத்தில் அதிக சுமையை ஏற்றுவதை தவிர்த்து விடுங்கள்.
பாத்து நிதானமா ஓட்டுங்க: திடீரென ஆக்ஸலரேட்டர் பெடலை போட்டு மிதி மிதியென மிதிப்பது, சடன் பிரேக் பிடிப்பது போன்ற விஷயங்களை அறவே தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இந்த விஷயங்கள் எல்லாம், உங்கள் வாகனத்தின் டயருடைய ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்பீடு லிமிட் ஃபாலோ பண்ணுங்க: வாகனத்தை எப்போதும் அதிக வேகத்தில் ஓட்ட வேண்டாம். ஏனெனில் நீங்கள் அதிக வேகத்தில் ஓட்டினால், டயர்களில் அதிக வெப்பம் உருவாகும். இது நடக்கும்பட்சத்தில் டயர்களின் தேய்மான விகிதம் துரிதப்படுத்தப்படும் என்பதை மறந்து விட வேண்டாம். எனவே உங்கள் வாகனத்தின் டயருடைய ஆயுட்காலம் அதிகரிக்க வேண்டுமென்றால், வேக வரம்புகளை பின்பற்றுவது நல்லது.
சுத்தி போனா கூட பரவாலங்க: பள்ளங்கள் மற்றும் கரடுமுரடான சாலைகள், டயர் சேதத்தை ஏற்படுத்தும். எனவே வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். இதுபோன்ற சாலைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அதாவது சற்று சுற்றி செல்வதாக இருந்தாலும் கூட, நல்ல பாதையை தேர்வு செய்யவும்.
காசு வேஸ்டலாம் இல்லங்க: உங்கள் டிரைவிங் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நல்ல தரமான டயர்களில் முதலீடு செய்யுங்கள். நல்ல தரமான டயர்களை வாங்குவதென்றால், ஆரம்பத்தில் அதிக செலவு ஆகத்தான் செய்யும். ஆனால் நல்ல தரமான டயர்கள்தான் நீண்ட ஆயுளை வழங்கும். எனவே சற்று செலவு அதிகம் ஆனாலும் பரவாயில்லை என, தரமான டயர்களை தேர்வு செய்வதுதான் புத்திசாலித்தனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாங்கள் இங்கே கூறியுள்ளவை அனைத்தும் பின்பற்றுவதற்கு மிகவும் எளிமையானவைதான். இந்த வழிகளை எல்லாம் நீங்கள் தவறாமல் பின்பற்றும்பட்சத்தில், உங்கள் டயரின் ஆயுட்காலம் நிச்சயமாக உயரும். எனவே அடிக்கடி டயர்களை மாற்றுவதற்காக நீங்கள் செலவு செய்யும் தொகை ஓரளவிற்கு குறையும்.


Click it and Unblock the Notifications








