கார் இன்ஷூரன்ஸ் தொகையை நீங்களே கணக்கிடலாம்... இதோ எளிய வழி...!!

Written By: Krishna

காரை வாங்கி பந்தாவாக வீட்டில் நிறுத்தி விடுகிறோம். ஆனால் ஆண்டுதோறும் முறையாக நாம் இன்ஷூர் செய்கிறோமா? என்றால் பெரும்பாலானோர் முகத்தில் இருந்து அசட்டு சிரிப்புதான் தோன்றும்.

சரி, அப்படியே இன்ஷூரன்ஸ் செய்தாலும், அதில் என்னென்ன ஆப்ஷன்கள் உள்ளன? அவற்றை முறையாக நாம் எப்படி தேர்வு செய்ய வேண்டும்? என்பன குறித்த விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை.

கார் இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸுக்கு பணம் செலவழிப்பதற்கு முன்னால், அதில் உள்ள நிபந்தனைகள், வசதிகள், விதிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் நான் ரொம்ப ஸ்மார்ட் என்று உங்களது காலரை நீங்களே தூக்கி விட்டுக் கொண்டு பெருமை கொள்ள முடியும். எனவே கார் இன்ஷூரன்ஸ் குறித்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். அவை குறித்த ஒரு சிறு அறிமுகம் இதோ உங்களுக்காக....

கார் இன்ஷூரன்ஸில் முக்கியான இரு அம்சங்களாகக் கருதப்படுபவை விபத்து சேதாரத்துக்கான இழப்பீடு (டேமேஜ் கவரேஜ்) மற்றும் மூன்றாம் நபருக்கான காப்பீடு (தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ்).

இதில் சேதாரத்துக்கு வழங்கப்படும் இழப்பீடு மூன்று விஷயங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. விபத்து நேர்ந்த இடம், கார் வாங்கிய ஆண்டு, எஞ்சின் திறன் ஆகிய மூன்றும் இழப்பீடு பெறுவதற்கான முக்கிய காரணிகள். இதில் மூன்றாம் நபருக்கான காப்பீடும் எஞ்சின் திறன் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.

அடுத்ததாக ஐடிவி எனப்படும் இன்ஷூர்ட்ஸ் டிக்ளேர்டு வேல்யூ. அதாவது இன்ஷூர் செய்யப்படும் பொருளின் காப்பீட்டு மதிப்பு. உதாரணமாக மாருதி ஆல்ட்டோ கார் நீங்கள் வைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஓரிரு ஆண்டுக்கு முன்பு நீங்கள் அந்த காரை வாங்கியிருந்தால் அதன் தற்போதைய ஐடிவி வேல்யூ 80 சதவீதமாகும்.

ரூ.4 லட்சத்துக்கு அந்த காரை நீங்கள் வாங்கியிருந்தால், இரண்டாம் ஆண்டில் அதன் காப்பீட்டு மதிப்பு அதிலிருந்து 80 சதவீதமாகக் கணக்கிடப்படும். மீதமுள்ள 20 சதவீதம் வாகனத்தின் தேய்மானத்துக்கு பிடித்தம் செய்யப்பட்டு விடும்.

அப்படியானால் காரின் காப்பீட்டு மதிப்பு ரூ.3.20 லட்சமாகும். அதன் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை 3.12 சதவீதமாக் கணக்கிட்டால் நீங்கள் ரூ.10,000 ப்ரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

அதேவேளையில் காப்பீட்டு நிறுவனங்கள் சில தள்ளுபடிகளையும், சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வழக்கம். உதாரணமாக 50 சதவீதம் தள்ளுபடியை ஒரு காப்பீட்டு நிறுவனம் தருவதாக வைத்துக் கொண்டால் நீங்கள் ரூ.5,000 மட்டுமே ப்ரீமியம் தொகையாக செலுத்தினால் போதுமானது.

இதைத் தவிர, நோ க்ளைம் போனஸ் என்ற ஆப்ஷன் உள்ளது. அதாவது, இன்ஷூரன்ஸ் காலத்தில் நீங்கள் ஒரு முறை கூட காப்பீடு கோரவில்லை என்றால், அதற்கு 20 சதவீத போனஸ் உள்ளது. அடுத்தாண்டு ப்ரீமியம் செலுத்தும்போது அந்த தொகை குறையலாம். அல்லது சலுகைகள் இருக்கலாம்.

ப்ரீமியம் தொகை ரூ.5,000 என்றால் நோ கிளைம் போனஸ் வசதியைப் பயன்படுத்தி அதிலிருந்து 20 சதவீதத்தைக் கழித்துக் கொள்ளலாம். இப்போது நீங்கள் ரூ.4,000 மட்டுமே ப்ரீமியமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

மூன்றாம் நபருக்கான காப்பீடு... அதாவது உங்களது வாகனம் மோதி பிறருக்கு ஏற்படும் சேதம், காயம் ஆகியவற்றுக்காக வழங்கப்படும் காப்பீடு. நீங்கள் ஆல்ட்டோ கார் வைத்திருந்தால் அதன் எஞ்சின் திறன் 1000 சிசி. அந்த எஞ்சின் திறன் கொண்ட காருக்கான மூன்றாம் நபர் காப்பீடு ப்ரீமியம் ரூ.1,468. அதே 1000 - 1500 சிசி எஞ்சின் கார்களுக்கு ரூ.1,598 ப்ரீமியமாக செலுத்த வேண்டியிருக்கும்.

1500 சிசிக்கு அதிகமான திறன் கொண்ட கார்களுக்கான ப்ரமீயம் ரூ.4,931. ஆல்ட்டோ காரை எடுத்துக் கொண்டால், காருக்கான காப்பீடாக ரூ.4,000 (நோ க்ளைம் போனஸ், 50 சதவீத தள்ளுபடி உள்ளடக்கியது) மற்றும் மூன்றாம் நபர் காப்பீடு ரூ.1,468 ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.5,468 செலுத்த வேண்டியது இருக்கும்.

ஆனால், இதோடு முடிந்து விடவில்லை. தனிப்பட்ட விபத்து காப்பீடாக ரூ.100-ம், மொத்தத் தொகையில் 14 சதவீத வரியும் சேர்க்கப்படுகிறது. கடைசியாக நீங்கள் ரூ.6,348 உங்கள் ஆல்ட்டோ காருக்கு செலுத்த வேண்டும்.

இவ்வாறுதான் இன்ஷூரன்ஸ் ப்ரிமீயங்கள் கணக்கிடப்படுகின்றன.

English summary
Insurance Guide: How To Calculate Car Insurance Premium?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark