இந்தியாவில் கார்களை ரீகால் செய்வதற்கான நடைமுறைகளும், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும்...!

Written By:

வாகனங்களில் ஏற்படும் தயாரிப்பு நிலை குறைபாடுகள் மற்றும் பிரச்னைகளால் விபத்தில் சிக்கும் ஆபத்தை பயணிகள் சந்திக்க நேர்கிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்திலும், நம்பகத்தன்மையை தக்க வைக்கும் விதத்திலும், வாகனத்தில் இருக்கும் குறைபாடுகளை சரி செய்து தருவதற்காக ரீகால் எனப்படும் திரும்ப அழைக்கும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. தற்போது நம் நாட்டில் இந்த ரீகால் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாகனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், வாகனங்களில் குறைபாடு இருப்பது தெரிய வந்தால், அரசாங்கமே குறிப்பிட்ட வாகனத்தை ரீகால் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உத்தரவிடும். துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் அப்படியொரு சட்டத்திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை.

இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களில் குறைபாடு அல்லது பிரச்னை இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட கார் தயாரிப்பு நிறுவனங்களே தாமாக முன்வந்து ரீகால் செய்யும் நடைமுறையை இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு (சியாம்) அறிவித்தது. இதன்படி, கார் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ரீகால் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், ரீகால் குறித்து வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

அனைத்து ரக வாகனங்களுக்கும்...

அனைத்து ரக வாகனங்களுக்கும்...

இந்தியாவில், 18 மாதங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்து, சியாம் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நிறுவனங்கள் இந்த ரீகால் நடைமுறையை பின்பற்ற வேண்டும். கார், இருசக்கர வாகனம், வர்த்தக வாகனம், இறக்குமதி வாகனம் என அனைத்திற்கும் இந்த ரீகால் விதிமுறைகள் பொருந்தும். இறக்குமதி வாகனங்களுக்கு, சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர் குறைபாட்டை சரிசெய்து தரும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

எத்தனை ஆண்டுகள்?

எத்தனை ஆண்டுகள்?

சியாம் அமைப்பு வெளியிட்டிருக்கும் ரீகால் நடைமுறையின்படி, வாகனம் தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து 7 ஆண்டுகள் வரை வாகனங்களில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்து தரும் பொறுப்பு சம்பந்தப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

ஸ்டீயரிங் சிஸ்டம், பிரேக்கிங் சிஸ்டம், எரிபொருள் கசிவு, சக்கரங்களில் ஏற்படும் தெறிப்பு அல்லது விரிசல், இருக்கைகள், சீட் பெல்ட் மெக்கானிசம், மின்சார ஒயரிங் சிஸ்டம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும். தவிர, விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புடைய பாகங்களை உடனடியாக மாற்றித் தருவதற்கு ரீகால் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

எவ்வாறு கண்டறியப்படுகிறது?

எவ்வாறு கண்டறியப்படுகிறது?

வாகனங்களில் குறிப்பிட்ட சில பாகங்களில் குறைபாடு இருப்பது சர்வீஸ் சென்டர்கள் வழியாக வாகன தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து புகார் வந்தால், அது குறித்து உடனடியாக ஆய்வு செய்து ரீகால் செய்ய வேண்டும். அதேபோன்று, வாடிக்கையாளர்களின் புகார்களும் சர்வீஸ் மையங்கள் வழியாக கார் உள்ளிட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

தரமற்ற வாகனமா?

தரமற்ற வாகனமா?

ரீகால் அறிவிப்பு செய்யப்பட்டால், அந்த வாகனங்கள் மீது தர நிலை குறித்த ஐயப்பாடு எழுவது சகஜம். ஆனால், மிக தீவிரமான சாலை சோதனைகளுக்குட்பட்டே கார் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. எனவே, குறிப்பிட்ட சில சூழல்கள், தட்பவெப்ப நிலைகள், ஓட்டுதல் முறைகளால் கூட உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் செயல்பாடு, தரத்தில் வேறுபாடு ஏற்படும். எனவே, ரீகால் செய்யப்பட்ட வாகனத்தை தரமற்றது என்று கருதமுடியாது என்று வாகனத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு குறைபாடு இருப்பது போன்று தோன்றினால், வாடிக்கையாளர்கள் உடனடியாக கார் நிறுவனங்களின் புகார் மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

2வது, 3வது உரிமையாளர்கள்

2வது, 3வது உரிமையாளர்கள்

அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை கார்களை ரீகால் செய்யும் வாய்ப்புள்ளது. அதுபோன்ற சமயங்களில் பல கார்கள் 2வது அல்லது 3வது உரிமையாளரின் கைகளுக்கு மாறியிருக்கலாம். ஆனால், கார் நிறுவனத்திடம் பெரும்பாலும் முதல் உரிமையாளரின் விபரங்களே இருக்கும் என்பதால், செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவோர், சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தின் அறிவிப்புகளை கவனித்து வர வேண்டியது அவசியம். அவ்வாறு, அறிவிப்பு கிடைத்தால் உடனடியாக சர்வீஸ் மையத்தை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறியலாம்.

அறிவிப்பு

அறிவிப்பு

ரீகால் அறிவிப்பு செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியிடுவது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக, மின்னஞ்சல், தொலைபேசி, கடிதம் வாயிலாக தகவல் தெரிவிப்பது அவசியம் என்று சியாம் அமைப்பின் ரீகால் நடைமுறையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்தோடு இல்லாமல், ரீகால் அறிவிப்பு பற்றி நிறுவனத்தின் இணையதளத்தின் தகவல் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எளிய வழி

எளிய வழி

இப்போது பல கார் நிறுவனங்கள் ரீகால் செய்யும்போது, வாடிக்கையாளர்கள் தங்களது காரின் வின் நம்பரை கொடுத்து ரீகால் அறிவிப்பில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை கண்டறியும் வசதியை அளிக்கின்றன. இதன்மூலமாக, இருந்த இடத்திலிருந்தே உங்களது கார் ரீகால் அறிவிப்பில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை கண்டறிய முடியும்.

 கூடுதல் செலவு

கூடுதல் செலவு

சில வேளைகளில் குறைபாடுடைய உதிரிபாகத்தை மாற்றித் தருவதை கட்டணமில்லா சேவையாகவே கார் தயாரிப்பு நிறுவனங்களும், டீலர்களும் செய்கின்றனர். சில வேளைகளில் குறைபாடுடைய பாகத்தை மாற்றித் தரும்போது, அதனுடன் தொடர்புடைய உதிரிபாகங்களையும் மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு வாடிக்கையாளர்களிடத்தில் இருந்து தொகை வசூலிக்கப்படலாம். எனவே, சர்வீஸ் மையத்தில் கேட்டுக் கொண்டு காரை அனுப்ப வேண்டும்.

சொந்தமாக செய்தாலும் சிக்கல்...

சொந்தமாக செய்தாலும் சிக்கல்...

சில வேளைகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும்போதும் ஏற்படும் பாதிப்புகள், சம்பந்தப்பட்ட உதிரிபாகத்தை அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் மையங்களில் செய்யும்போதும், கார் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்காது. அத்துடன், தரமற்ற உதிரிபாகங்களை பயன்படுத்தி அதனால் ஏற்படும் இழப்புகள், அபாயங்களுக்கும் கார் நிறுவனங்கள் பொறுப்பேற்காது என்பதையும் மனதில் வைக்க வேண்டியுள்ளது.

 அரசாங்கமும் தீவிரம்

அரசாங்கமும் தீவிரம்

அதிகரித்து வரும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக, கார் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தும் பல்வேறு புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில், கார்களில் ஏற்படும் பிரச்னைகளை ஆய்வு செய்து, அரசாங்கமே ரீகால் செய்யும் நடைமுறையும் பரிசீலனையில் உள்ளது. மேலும், வாகனங்கள் தயாரிக்கப்படும்போது கடைபிடிக்க வேண்டிய தரக் கொள்கையிலும் கடும் விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வருவதற்கும் அரசின் வசம் திட்டம் உள்ளது.

தாமதம்...

தாமதம்...

குறிப்பிட்ட குறைபாடுடைய உதிரிபாகம் அல்லது பிரச்னையை சரிசெய்து தருவதற்கு சில மணிநேரங்களில் முடியலாம். சில பிரச்னைகளுக்கு ஒரு சில நாட்கள் பிடிக்கலாம். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சில நிறுவனங்கள் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தரும். இல்லையெனில், அதனை உறுதி செய்து கொண்டு, நமக்கு நாமே மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியிருக்கும். எனவே, காரை கொடுக்கும்போதே, எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

 
English summary
You Must Know Few Things About vehicle recall Policy In India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark