2023-24 பட்ஜெட்: பழைய வாகனங்களை அழிக்க நிதி ஒதுக்கீடு!! அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிரடியான மூவ்...

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) லோக்சபாவில் தாக்கல் செய்தார். அடுத்த 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு ஆண்டிற்கான பட்ஜெட் இது என்பதால் வழக்கத்தை காட்டிலும் 2023-24 பட்ஜெட் நாடு முழுவதும் கவனிக்கப்பட்டது.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்ட இந்த பட்ஜெட் உரையை லோக்சபாவில் வாசிக்க துவங்கிய நிதி அமைச்சர், நடப்பு நிதியாண்டின் (2022-23) பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், சவால்கள் இருந்த போதிலும் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வர போகும் 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறையை பொருத்தமட்டில், சில அறிவிப்புகளும், திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

2023-24 பட்ஜெட்: பழைய வாகனங்களை அழிக்க நிதி ஒதுக்கீடு!!

குறிப்பாக, சாலையில் இயங்கி கொண்டிருக்கும் பழைய வாகனங்களை முறையாக அழிக்க குறிப்பிடத்தக்க அளவிலான நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஆளும் மத்திய அரசு வாகனங்களில் இருந்து வெளிவரும் காற்று மாசை கட்டுப்படுத்த கடந்த பல ஆண்டுகளாவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2020இன் துவக்கத்தில் அமலுக்கு வந்த புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதி & விரைவில் இந்த உமிழ்வு விதிமுறைகளில் வரப்போகும் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்கள் என்பவை அந்த நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

அதேநேரம் காற்று மாசடைவதற்கு நீண்ட வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய வாகனங்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை அறிந்த மத்திய அரசு, அந்த பழைய வாகனங்களை முறையாக அழித்து அவற்றிற்கு பதிலாக புதிய வாகனங்களை கொண்டுவருவதில் முனைப்பு காட்டி வருகிறது. பழைய வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட ஸ்க்ராபேஜ் மையத்தில் அழித்து அதன் மூலம் கிடைக்கும் மானியம் & சலுகைகளில் புதிய வாகனத்தை மக்கள் வாங்க வேண்டும் என விரும்பும் மத்திய அரசு, முதற்கட்டமாக பழைய அரசு வாகனங்களில் விரைவில் இந்த திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த உள்ளது.

2023-24 பட்ஜெட்: பழைய வாகனங்களை அழிக்க நிதி ஒதுக்கீடு!!

இதன்படி, வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து 15 வருடங்கள் அல்லது அதற்கு மேல் பழையமான அரசு பேருந்துகள் அழிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம். வாகன ஸ்க்ராபேஜ் குறித்த அறிவிப்புகளை கடந்த 2021-22 பட்ஜெட்டில் இருந்தே நாம் பார்த்துவரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய 2023-24 பட்ஜெட்டிலும் இதுகுறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. "நமது பொருளாதாரத்தை பசுமையாக்குவதில் மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவது முக்கியமான பகுதி ஆகும்.

முன்னதாக பட்ஜெட் 2021-22-இல் வாகன அழித்தல் திட்டம் குறித்து குறிப்பிட்டு இருந்த நிலையில், தற்போது மத்திய அரசாங்கத்தின் பழைய வாகனங்களை ஸ்க்ராப் செய்ய போதுமான நிதியை ஒதுக்கியுள்ளேன்" என 2023-24 பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "பழைய வாகனங்களையும், பழைய மாநில ஆம்புலன்ஸ்களையும் மாற்ற மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்" எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

2023-24 பட்ஜெட்: பழைய வாகனங்களை அழிக்க நிதி ஒதுக்கீடு!!

பழைய வாகனங்கள் அழித்து அவற்றின் இடத்தில் புதிய வாகனங்களை கொண்டுவருவதுதான் புதிய ஸ்க்ராபேஜ் திட்டத்தின் நோக்கம் என்றாலும், பழைய வாகனங்கள் அனைத்தும் கண்மூடித்தனமாக அழிக்கப்பட போவதில்லை. அதாவது, 15 வருடங்கள் பழமையான கமர்ஷியல் வாகனங்கள் சில பல தகுதி சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அந்த சோதனைகளில் தகுதி பெறாமல், முறையான ஃபிட்னஸ் சான்றிதழை பெற முடியாமல் போகும் பட்சத்தில் அந்த பழைய கமர்ஷியல் வாகனம் அழிக்கப்பட வேண்டிய வாகனமாக அதன் உரிமையாளரிடம் தெரிவிக்கப்படும்.

கார்கள் உள்ளடங்கிய பயணிகள் வாகனங்களுக்கு 20 ஆண்டுகள் வரையறையாக தற்போதைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பயணிகள் வாகனத்திற்கு ஆர்டிஓ பதிவு சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்க முடியாவிடின் அந்த பயணிகள் வாகனத்தை அழிக்க வேண்டும். ஏற்கனவே கூறியதுபோல், இவ்வாறு அழிக்கப்பட வேண்டிய வாகனங்களை முறையாக, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்க்ராப்பிங் மையத்தில் அழித்தால் புதிய வாகனத்தின் விலை மற்றும் சாலை வரி உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க சதவீதத்தில் சலுகைகள் கிடைக்கும்.

Most Read Articles
மேலும்... #பட்ஜெட் #budget
English summary
2023 24 budget funds allocated for scrapping old central govt vehicles said minister
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X