டிரைவரில்லாமல் இயங்கும் கார்: வரிந்து கட்டிய அந்த 30 ஜாம்பவான் நிறுவனங்கள்!

By Saravana Rajan

அடுத்தவரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை; பாதுகாப்பான பயணம்; சாலையில் வைத்த கண் வாங்காமல் ஓட்டிச் செல்லும் தலைவலி இல்லை," என்ற பல காரணங்களால் டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்களுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு இருக்கும் என கருதப்படுகிறது.

இதனால், தொழில்நுட்பத்திலும், கார் தயாரிப்பிலும் ஜாம்பவானாக விளங்கும் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்றன. அதில், தானியங்கி கார் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியையும், முனைப்பையும் காட்டி வரும் ஜாம்பவான் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

01. ஆப்பிள்

01. ஆப்பிள்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலகப்புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் டைட்டான் என்ற பெயரில் டிரைவரில்லாமல் இயங்கும் காரை தயாரித்து வருகிறது. இதற்காக, ரகசிய இடத்தில் மிகப் பிரம்மாண்டமான ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியிருக்கும் அந்த நிறுவனம் 1,000 பணியாளர்களை இந்த திட்டத்தில் ஈடுபடுத்தியிருக்கிறது. இதில் பெரும்பாலான பணியாளர்கள் டெஸ்லா, ஃபோக்ஸ்வேகன், என்விடியா ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். 2019ல் தானியங்கி காரை அறிமுகப்படுத்தவும், 2020ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு பணிகளை துரிதப்படுத்தியிருக்கிறது.

02. ஆடி

02. ஆடி

ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனமும் தானியங்கி கார் தயாரிப்பில் பல படிகள் முன்னை நிற்கிறது. தனது ஏ7 மற்றும் ஆர்எஸ்7 கார்களின் அடிப்படையிலான டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை ஆடி கார் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கிறது. ஆடி பைலட்டேட் டிரைவிங் என்ற பெயரில் இந்த புரோட்டோடைப் மாடல்களை சோதனை செய்து வருவதுடன், இப்போதே பிரபலப்படுத்தி வருகிறது. மேலும், ஆடி ஏ8 காரில் இந்த தானியங்கி கருவிகளை பொருத்தி, தானாகா பார்க்கிங் செய்து கொள்வதற்கும், மணிக்கு 59 கிமீ வேகத்தில் பயணிக்கும். மேலும், தானியங்கி கார் உருவாக்குவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேஷ அமைப்பிலும் பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுடன் ஆடியும் சேர்ந்து செயலாற்றி வருகிறது.

03. பிஎம்டபிள்யூ

03. பிஎம்டபிள்யூ

ஜெர்மனியின் மற்றொரு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ ஐ-நெக்ஸ்ட் என்ற பெயரில் தனது டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கு பிஎம்டபிள்யூ திட்டமிட்டிருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு சீனாவை சேர்ந்த பெய்டு என்ற தேடுதல் தள நிறுவனத்துடன் பிஎம்டபிள்யூ கூட்டணி அமைத்து தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தவிரவும், நோக்கியாவின் HERE என்ற வரைபட சேவை நிறுவனத்திலும் முக்கிய முதலீட்டு பங்களிப்பை செய்திருக்கிறது. இந்த வரைபட தொழில்நுட்பம் பிஎம்டபிள்யூ தானியங்கி கார் தயாரிப்பில் முக்கிய பங்காற்றும்.

04. பாஷ்

04. பாஷ்

வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குவதில் ஜாம்பவானாக விளங்கும் ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனமும் தானியங்கி கார் தொழில்நுட்பத்திலும் பல நிறுவனங்களுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. டெஸ்லா, கூகுள், போர்ஷே உள்ளிட்ட நிறுவனங்களின் தானியங்கி கார் உருவாக்கத்தில் பாஷ் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. இதற்காக, 2,000 பணியாளர்களை பாஷ் ஈடுபடுத்தியிருக்கிறது.

 05. டெல்பி

05. டெல்பி

பாஷ் போன்றே வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் பெயர் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த டெல்பி நிறுவனமும், தானியங்கி கார் தொழில்நுட்பத்தை தயாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தானியங்கி கார்களுக்கு தேவையான சென்சார்கள், சாஃப்ட்வேர் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் வழங்குகிறது. டெல்பி நிறுவனம் உருவாக்கிய தானியங்கி கார் தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் கொண்ட ஆடி எஸ்க்யூ5 எஸ்யூவி 4,900 கிமீ தூரம் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.

06. ஃபோர்டு

06. ஃபோர்டு

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனமும் தானியங்கி காரை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. மேலும், 30 தானியங்கி கார்களை வைத்து சோதனை ஓட்ட முயற்சிகளை விரிவுப்படுத்தியிருக்கிறது. சாதாரண சூழல்கள் தவிர்த்து, பனி நிறைந்த சாலைகள், முழுவதும் இருளான பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் வைத்து தனது தானியங்கி கார்களின் செயல்பாட்டையும், அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் ஃபோர்டு மேற்கொண்டிருக்கிறது.

07. ஜெனரல் மோட்டார்ஸ்

07. ஜெனரல் மோட்டார்ஸ்

கார் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், தானியங்கி கார் தயாரிப்பில் முழு மூச்சுடன் இறங்கியிருக்கிறது. சொந்தமாக செமி ஆட்டோனாமஸ் காரை தயாரிக்கும் திட்டத்தையும், சில நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து தானியங்கி கார் தயாரிப்பதிலும் இரு விதங்களில் தனது இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. 2017ம் ஆண்டில் கேடில்லாக் சொகுசு கார்களில் சூப்பர் க்ரூஸ் டெக்னாலஜி எனப்படும் செமி ஆட்டோனாமஸ் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

 08. கூகுள்

08. கூகுள்

கூகுள் நிறுவனமும், தானியங்கி கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறது. டொயோட்டா கார்களை வைத்து தனது தானியங்கி கார் தொழில்நுட்பத்தை சோதித்து வருவதுடன், புதிய தானியங்கி காரை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டி வருகிறது. 2020ம் ஆண்டில் இந்த கார் பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 09. ஹோண்டா கார்ஸ்

09. ஹோண்டா கார்ஸ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாலைகளில் ஹோண்டா நிறுவனம் தனது தானியங்கி கார்களை சோதனை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை பெற்றிருக்கிறது. மேலும், ஆட்டோமேட்டிக் பிரேக், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், தடத்தை கண்டுணர்ந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய சிவிக் காரையும் ஹோண்டா அறிமுகம் செய்திருக்கிறது. இதனை மேம்படுத்தி, முற்றிலும் சுயமாக இயங்கும் தானியங்கி கார் மாடல்களை அடுத்த சில ஆண்டுகளில் ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கிறது.

10. ஜாகுவார் லேண்ட்ரோவர்

10. ஜாகுவார் லேண்ட்ரோவர்

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் - லேண்ட்ரோவர் நிறுவனமும் புதிய தானியங்கி காரை களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. உலகின் முழமையான முதல் தானியங்கி காரை நாங்கள்தான் அறிமுகம் செய்ய இருக்கிறோம் என்றும் சமீபத்தில் மார்தட்டியிருக்கிறது. இதனால், ஜாகுவார்- லேண்ட்ரோவர் நிறுவனத்தின் தானியங்கி கார் மீது அதிக ஆவல் எழுந்திருக்கிறது.

11. மெர்சிடிஸ் பென்ஸ்

11. மெர்சிடிஸ் பென்ஸ்

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தனது தானியங்கி கார்களை சில கட்டுப்பாடுகளுடன் சோதனை செய்ய அனுமதி பெற்றிருக்கிறது. கார் மட்டுமின்றி, பஸ், டிரக்குகளையும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே தீவிரமாக சோதனை செய்து வருவதும், அதில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டிருப்பதும் நினைவுகூறத்தக்கது.

 12. மைக்ரோசாஃப்ட்

12. மைக்ரோசாஃப்ட்

உலகிலுள்ள பல கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களுக்கு உயிர் மூச்சாக விளங்கும் விண்டோஸ் சாஃப்ட்வேரை உருவாக்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, வால்வோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் மைக்ரோசாஃப்ட் கூட்டணி அமைந்துள்ளது. மேலும், டொயோட்டாவின் ரோபோவிற்கான சாஃப்ட்வேர் தயாரிப்பிலும் மைக்ரோசாஃப்ட் முக்கிய பஙகளிப்பை வழங்கி வருகிறது.

13. நிசான்- ரெனோ

13. நிசான்- ரெனோ

நிசான்- ரெனோ கூட்டணியும் தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது. வரும் 2020ல் தங்களது தானியங்கி கார்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கு இந்த கூட்டணி திட்டமிட்டிருக்கிறது. நிசான் லீஃப் எலக்ட்ரிக் காரில் தானியங்கி தொழில்நுட்பங்களுடன் மாற்றங்களை செய்து, சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

14. என்விடியா

14. என்விடியா

கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்களுக்கான பிராசஸர் தயாரிப்பில் புகழ்பெற்ற என்விடியா நிறுவனமும், தானியங்கி கார்களுக்கான சூப்பர் கம்ப்யூட்டரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. Nvidia Drive PX2 என்ற பெயரிலான இந்த சாஃப்ட்வேர், எதிர்காலத்தில் தானியங்கி கார்களின் துல்லியமான இயக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

15. டாடா எல்க்ஸி

15. டாடா எல்க்ஸி

டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் டாடா எல்க்ஸி நிறுவனமும் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. கடந்த ஆண்டிலேயே தானியங்கி முறையில் கார்கள் பார்க்கிங் செய்வதற்கான தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. மேலும், தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

16. டெஸ்லா

16. டெஸ்லா

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் புகழ்பெற்றது. அதேநேரத்தில், தானியங்கி கார் தொழில்நுட்பத்தையும் கார்களில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து, முன்னோடியாக விளங்குகிறது. இந்த தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட சில கார்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியதால் சர்ச்சை எழுந்தது. மேலும், இந்த தொழில்நுட்பத்தை திரும்பப் பெறும் வலியுறுத்தப்பட்டன. இதற்கு டெஸ்லா மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், விலை குறைவாக வரும் மாடல் 3 காரிலும் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்பதால், பலத்த ஆவல் எழுந்துள்ளது.

17. டொயோட்டோ

17. டொயோட்டோ

2014ம் ஆண்டில் பாதுகாப்பு காரணங்களை கருதி தானியங்கி கார்களை தயாரிக்க மாட்டோம் என்று சொன்ன டொயோட்டா, அதே வாயால், புதிய தானியங்கி காரை உருவாக்குவதற்காக ஒரு மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்காக, பல நிபுணர்களை டொயோட்டா பணியமர்த்தி இருக்கிறது. இதனால், அடுத்த சில ஆண்டுகளில் டொயோட்டாவின் தானியங்கி காரும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 18. உபர்

18. உபர்

சில ஓட்டுனர்களால் பெரும் சிக்கலில் அவ்வப்போது சிக்கி தவித்து வரும் அமெரிக்காவை சேர்ந்த உபர் டாக்சி நிறுவனமும், டிரைவர் தேவைப்படாத புதிய தானியங்கி காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது. இதற்காக, 40 நிபுணர்களை அந்த நிறுவனம் பணியர்த்தியிருக்கிறது.

 19. ஃபோக்ஸ்வேகன்

19. ஃபோக்ஸ்வேகன்

வி-சார்ஜ் புரொஜெக்ட் என்ற பெயரில் டிரைவரில்லாமல் இயங்கும் கார் கான்செப்ட்டை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்தது. மனித ஆற்றல் இல்லாமல் தானாகவே காரை பார்க்கிங் செய்வதற்கான தொழில்நுட்பம் அது. அதனை மேம்படுத்தி, முழுவதுமாக தானியங்கி முறையில் சாலைகளில் செல்வதற்கான காரை உருவாக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டிருக்கிறது. 2025ம் ஆண்டில் தானியங்கி கார்கள் சர்வசாதாரணமான விஷயமாகிவிடும் என்பதை கணித்து, அதற்குள் தனது கார்களை தானியங்கி தொழில்நுட்பத்துடன் களமிறக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

20. வால்வோ

20. வால்வோ

உலகிலேயே பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் நிறுவனமாக கருதப்படும் வால்வோ நிறுவனமும், தானியங்கி கார் நுட்பத்தில் முன்னோடியாக விளங்குகிறது. 2020ல் வால்வோ கார்கள் விபத்தில் சிக்காத நிலையையும், உயிரிழப்பை ஏற்படுத்தாத நிலையையும் கொண்ட பாதுகாப்பு அம்சங்களோடு வர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதர நிறுவனங்கள்

இதர நிறுவனங்கள்

ஹூண்டாய் மோட்டார்ஸ், இவேகோ, டெய்ம்லர், மேன், ஸ்கானியா, டிஏஎஃப், மொபைல் ஐ, பீஜோ குழுமம்,யூடாங் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தானியங்கி காரை தயாரிப்பதிலும், சோதனை நடத்துவதிலும் தற்போது மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன.

போற போக்கில்...

போற போக்கில்...

இவங்க போற ஸ்பீடை பார்த்தால், இன்னும் 5 ஆண்டுகளில் தானியங்கி கார்கள் மெல்ல சாலைகளில் ஆக்கிரமிக்க துவங்கும். அடுத்த தசாப்தத்தில் இந்திய போன்ற வளரும் மார்க்கெட்டுகளிலும் தானியங்கி கார்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. மேலும், சந்தைப் போட்டி அதிகமாக இருக்கும் என்பதால், தானியங்கி கார்களை சல்லுசான விலையில் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles
English summary
30 Companies Working On Autonomous Vehicles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X