ஆக்ரா- லக்ணோ எக்ஸ்பிரஸ் சாலை: 11 சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

ஆக்ரா- லக்ணோ இடையே அமைக்கப்பட்டிருக்கும் எக்ஸ்பிரஸ் சாலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலை என்ற பெருமையுடன் இன்று திறப்பு விழா காண இருக்கிறது.

இதற்கான நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அவரது தந்தையும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், இந்த சாலையின் தரத்தை உலகுக்கு பரைசாற்றும் விதத்தில் 8 போர் விமானங்கள் தரையிறங்கி, டேக் ஆஃப் செய்ய இருக்கின்றன. இந்த நிலையில், இந்த சாலை பற்றி 10 சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

உத்தரப்பிரதேச தலைநகர் லக்ணோவிலிருந்து சுற்றுலா நகரமான ஆக்ராவுக்கு இடையில் 302 கிமீ தூரத்துக்கு இந்த சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் கொண்ட பசுமை சாலையாகவும் இது வர்ணிக்கப்படுகிறது. இது 6 வழித்தடங்கள் கொண்டது.

தற்போது ஆக்ரா- லக்ணோ நகரங்களுக்கு இடையிலான 7 மணிநேரமாக உள்ள பயணம் இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை மூலமாக 3.5 மணி நேரமாக குறையும். மேலும், டெல்லி- லக்ணோ இடையிலான பயண நேரமும் 6 மணிநேரம் வரை குறையும்.

ஆக்ரா- லக்ணோ எக்ஸ்பிரஸ் சாலையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரை வாகனங்கள் செல்வதற்கான கட்டமைப்புடன் இருக்கிறது. விபத்துக்களை தவிர்க்கவும், பனி மூட்டத்தின்போது விபத்துக்களை தவிர்க்கவும், தானியங்கி போக்குவரத்து மேலாண்மை வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 6 வழித்தடங்கள் கொண்ட இந்த சாலையை எதிர்காலத்தில் 8 வழித்தடங்கள் கொண்டதாக விரிவாக்கம் செய்ய முடியும். மேலும், அதற்கு தக்கவாறு இந்த சாலையில் இருக்கும் பாலங்கள், கீழ்பாலங்கள் ஆகியவை 8 வழித்தட சாலைக்கு ஏற்ற வகையில் முன் யோசனையுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த சாலையில் கங்கை ஆற்றின் குறுக்கே 8 வழித்தடங்கள் கொண்ட பாலமும் உள்ளது. கான்பூர் மற்றும் உன்னோவ் ஆகிய நகரங்களையும் இந்த பாலம் இணைக்கிறது.

சாலையின் இருபக்கமும் இரும்பு கர்டர்கள் கொண்ட தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இந்த சாலையில் செல்வோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த சாலையில் 13 பெரிய பாலங்கள், 57 சிறிய பாலங்கள், 4 ரயில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, வாகனங்கள் செல்வதற்கன 74 கீழ்பாலங்கள், 148 பாதசாரிகளுக்கான கீழ்பாலங்கள் மற்றும் 9 மேம்பாலங்கள் உள்ளன.

இந்த எக்ஸ்பிரஸ் சாலை வெறும் 23 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உத்தரபிரதேச மாநில தொழில் மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்தியது. இந்த சாலை அமைப்பதற்கான திட்டம் ஒரு நிறுவனத்திடம் மட்டும் வழங்காமல் பல நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. ரூ.15,000 கோடி மதிப்பீடு செய்யப்பட்ட இந்த பாலத்தை ரூ.13,200 கோடி செலவீட்டிலேயே முடித்து விட்டதாகவும் உத்தரபிரதேச அரசு கூறியிருக்கிறது.

பெட்ரோல் பங்குகள், சர்வீஸ் மையங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்டவையும் உள்ளன. இதனால், இந்த எக்ஸ்பிரஸ் சாலை வாகன ஓட்டிகளுக்கு புதிய அனுபவத்தையும், விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த எக்ஸ்பிரஸ் சாலை உத்தரபிரதேச மாநிலத்தின் 10 மாவட்டங்கள், 236 கிராமங்கள் வழியாக 3500 ஹெக்டேர் பரப்பு கொண்டதாக செல்கிறது. ஆக்ராவிலிருந்து சிகோஹாபாத், பைரோபாத், மெயின்புரி, எட்டவா, ஆரையா, கன்னோஜ், கான்பூர் நகர், உன்னோவ் மற்றும் ஹர்தோய் ஆகிய நகரங்கள் வழியாக செல்கிறது. மேலும், 4 தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் 2 மாநில நெடுஞ்சாலைகளை கடந்து செல்கிறது.

கங்கை, யமுனை, இசான், சாய் மற்றும் கல்யாணி ஆகிய 5 நதிகளை கடந்து செல்கிறது. இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது ஆக்ரா அருகில் உள்ள எத்மத்பூர் மத்ரா என்ற கிராமத்தில் துவங்கி, லக்ணோ நகரின் மோகன் ரோடு அருகில் உள்ள சரோசா பரோசா என்ற கிராமத்தில் முடிவடைகிறது.

இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது ஆக்ரா- நொய்டா இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையை ஆக்ரா வெளிவட்டச் சாலை மூலமாக இணைக்கிறது. இதனால், லக்ணோ- டெல்லி இடையிலான பயணம் இப்போது மிக இலகுவாகியிருக்கிறது.

இந்த சாலையின் இருபுறத்திலும், சாலையின் நடுவில் உள்ள தடுப்புப் பகுதியிலும் மரம், செடி, கொடிகள் நடப்பட்டு வருகின்றன. இதனால், இதனை பசுமை சாலையாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதனிடையே, ஏற்கனவே அறிவித்தபடி, திறப்பு விழாவின்போது இந்திய விமானப்படையின் 8 போர் விமானங்கள் ஆக்ரா- லக்ணோ எக்ஸ்பிரஸ் சாலையில் தரையை தொட்டு மீண்டும் மேல் எழும்பி பறந்தன. அப்போது, தெருநாய் ஒன்று விமானம் தரையிறங்கும் பகுதியில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சாலையில் 100 கிமீ வேகத்திற்கு மிகாமல் செல்லுமாறு திறப்பு விழா சிறப்பு உரையில் அம்மாநில முதல் அகிலேஷ் யாதவ் கேட்டுக் கொண்டார். அவர் சொல்லி அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பிய விமானப்படை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்ற கார் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில், விமானப்படை அதிகாரி உள்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Agra-Lucknow Expressway: 11 facts to know.
Story first published: Monday, November 21, 2016, 17:23 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos