இந்தியாவில் ஹெலிகாப்டர் பாகங்கள் உற்பத்தி... மஹிந்திரா - ஏர்பஸ் நிறுவனங்களிடையே ஒப்பந்தம்...

Written By: Krishna

இந்திய பாதுகாப்புப் படையில் பயன்படுத்தப்படும் தளவாடங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை அதி நவீனமாக மாறிக் கொண்டு வருகின்றன. இதைத் தவிர நாட்டின் போர் விமானங்களை இயக்க பெண் விமானிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.

இவ்வாறு நமது பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மேக் இன் இந்தியாவின் (இந்தியாவில் தயாரிப்போம்) கீழ் ஃபிரான்ஸைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்தின் ராணுவ ஹெலிகாப்டர்களை நம் நாட்டில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

ஹெலிகாப்டர் டீல்

அதன் அடிப்படையில் மஹிந்திரா டிஃபென்ஸ் நிறுவனம், பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனத்துக்காக ஹெலிகாப்டர் பாகங்களை உற்பத்தி செய்து தரப்போகிறது.

இதற்கான உடன்படிக்கையில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.

இதுதொடர்பான செய்திக் குறிப்பை அந்த இரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ளன.

ஏஎஸ் 565 எம்பிஇ பேந்தர் ரக ஹெலிகாப்டரின் சில முக்கிய பாகங்களை இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட பாகங்கள் பிரான்ஸில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்துக்கு கப்பல் வழியே அனுப்பி வைக்கப்படும். அந்த பாகங்களைக் கொண்டு பேந்தர் ரக ஹெலிகாப்டர்கள் பிரான்ஸில் உருவாக்கப்படும்.

ஏர்பஸ் நிறுவனத்துக்காக ஹெலிகாப்டர் பாகங்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் மஹிந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர, இந்திய கடற்படை பயன்பாட்டுக்கான கண்காணிப்பு ஹெலிகாப்டர்களின் பராமரிப்பு மற்றும் உற்பத்தியில் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் மஹிந்திரா மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதற்காக, கூட்டு நடவடிக்கைக் கொள்கையின் (ஜாயின்ட் வென்ட்சர்) கீழ் அந்த இரு நிறுவனங்களும் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன.

ஏஎஸ் 565 ரக பேந்தர் ஹெலிகாப்டர்கள் இந்திய பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டால், ஏர்பஸ்ஸின் சர்வதேச ஹெலிகாப்டர் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புள்ளது.

பிற நாடுகளின் பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரிக்கும் நடவடிக்கையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ள இந்தியா, வல்லரசு பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என ஒவ்வொரு குடிமகனும் பெருமை கொள்ளலாம்.

English summary
Airbus Helicopters Sign Deal With Mahindra To Make Parts For Helicopters.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark