விறுவிறுப்பான கட்டத்தில் டக்கார் ராலி... கலக்கும் சி.எஸ்.சந்தோஷ்!!

By Saravana

உலக அளவில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் ரசிகர்களிடம் பெரும் ஆவலையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது உலகின் மிக சவாலான மோட்டார்ஸ்போர்ட்ஸ் பந்தயமாக வர்ணிக்கப்படுகிறது டக்கார் ராலி.

டக்கார் ராலியை கூர்ந்து கவனிக்கவும், ரசிக்கவும் தற்போது இந்திய ரசிகர்களுக்கு கூடுதல் காரணம் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு டக்கார் ராலியில் முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த சி.எஸ்.சந்தோஷ் பங்கேற்றிருக்கிறார்.

மனதளவிலும், உடலளவிலும் வலுவான மோட்டார் பந்தய வீரர்களுக்கான இந்த டக்கார் ராலி தற்போது 4வது கட்டத்தை எட்டியிருக்கிறது. 3வது ஸ்டேஜ் முடிவில் சி.எஸ்.சந்தோஷ் 53வது இடத்தை பெற்றிருக்கிறார். இது உண்மையிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமும், இடமுமாக கருதப்படுகிறது.

கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 டக்கார் ராலி

டக்கார் ராலி

1979ம் ஆண்டு துவங்கிய டக்கார் ராலி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து, டக்கார் என்ற பகுதிக்கு நடத்தப்பட்டது. ஆனால், வீரர்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்னை காரணமாக, 2008ம் ஆண்டு தென் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது. மோட்டார்சைக்கிள், ஏடிவி வாகனம் அல்லது குவாட் பைக், கார்கள் மற்றும் டிரக்குகள் என 4 வகையான வாகனங்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் ராலி பந்தயமாக நடத்தப்படுகிறது.

பந்தய அம்சங்கள்

பந்தய அம்சங்கள்

நாள் ஒன்றுக்கு சராசரியாக 800 முதல் 900 கிமீ தூரத்தை கடக்கும் வகையில் இந்த பந்தயம் பல்வேறு கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் குறைவான நேரத்தில் இலக்கை அடைபவர் அந்த கட்டத்தில் வெற்றி பெற்றவராவர். ஆனால், ஒட்டுமொத்த போட்டியிலும் குறுகிய நேரத்தில் இலக்குகளை கடந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு சாம்பியன் பட்டத்தை வெல்வர். இந்த போட்டியில் 2,000க்கும் அதிகமான வீரர்களும், 400க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்கின்றன.

சவாலான ரேஸ்

சவாலான ரேஸ்

உலகிலேயே நீண்ட தூர மோட்டார் பந்தயங்களில் மிக மிக சவாலானது இந்த டக்கார் ராலி ரேஸ். கரடு முரடான மலைச் சாலைகள், பாலைவனம், கடற்கரையோரப் பகுதிகள் என பல்வேறு மோசமான நிலவமைப்புகள் கொண்ட பகுதிகள் வழியாக போட்டியாளர்கள் வாகனங்களில் கடக்க வேண்டும்.

மன வலிமை

மன வலிமை

உடல் வலிமையுடன் மன வலிமையும் மிகவும் அதிகமாக தேவைப்படும் ராலி பந்தயம் இது. இந்த ராலி பந்தயத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலர் உயிரிழந்த வரலாறு கிலியை ஏற்படுத்தும் விஷயம்.

2015 டக்கார் ராலி

2015 டக்கார் ராலி

இந்த ஆண்டு தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் வழியாக 9,000 கிமீ தூரத்தை கடக்கும் விதத்தில் நடத்தப்படுகிறது. கடந்த 4ந் தேதி துவங்கிய இந்த ஆண்டு டக்கார் 13 கட்டங்களாக 14 நாட்கள் நடத்தப்படுகிறது. தற்போது 4 வது கட்டம் வரை டக்கார் ராலி நிறைவடைந்துள்ளது.

முதல் இந்தியர்

முதல் இந்தியர்

உலகிலேயே மிகவும் சவாலான இந்த பந்தயத்தில் இந்தியரான சி.எஸ்.சந்தோஷ் பங்கேற்றிப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். பெங்களூரை சேர்ந்த சந்தோஷ் பல்வேறு கடினமான ராலி பந்தயங்களில் பல வெற்றிகளை குவித்து நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவரது உழைப்பு, விடா முயற்சி போன்றவற்றின் மூலம் டக்கார் ராலியில் இடம்பெறும் வாய்ப்பை பெற்ற முதல் இந்தியராகியுள்ளார்.

சந்தோஷ் ரேங்க்

சந்தோஷ் ரேங்க்

தற்போது மூன்று கட்டங்களுக்கான முடிவுகள் வெளியாகிவிட்டன. அதில், முதல் கட்டத்தில் சி.எஸ்.சந்தோஷ் 85 இடத்தையும், இரண்டாவது கட்டத்தில் 49வது இடத்தையும், மூன்றாவது கட்டத்தில் 68வது இடத்தையும் பிடித்திருக்கிறார். மோட்டார்சைக்கிள் பிரிவின் 139 வீரர்கள் கொண்ட பட்டியலில், ஒட்டு மொத்த நிலையில் 53வது இடத்தில் இருக்கிறார் சிஎஸ்.சந்தோஷ்.

இலக்கு

இலக்கு

டக்கார் ராலியில் முதல் 20 இடங்களுக்குள் வருவதே தமது லட்சியமாக குறிப்பிட்டிருக்கிறார் சிஎஸ்.சந்தோஷ். அதற்கான துடிப்பும், வைராக்கியமும் அவரது கண்களில் பளிச்சிடுகிறது.

 சான் சுந்தர்லேண்ட்

சான் சுந்தர்லேண்ட்

டக்கார் ராலியின் முதல் நாள், முதல் கட்டத்தில் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்தை சேர்ந்த சான் சுந்தர்லேண்ட் இரண்டாவது நாளில், இரண்டாவது கட்ட போட்டியிலும் வெற்றிபெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அவர் வழி தவறி சென்றதால், இரண்டாவது கட்டப் போட்டியில் முதல் இடத்தை தவறவிட்டு பின்தங்கினார்.

வீரர் மரணம்

வீரர் மரணம்

இந்த ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தில் போலந்து நாட்டை சேர்ந்த மைக்கேல் ஹெர்னிக்(39) என்ற மோட்டார்சைக்கிள் பந்தய வீரர் மரணமடைந்தார். கட்டுப்பாட்டு அறையுடன் அவருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குறிப்பிட்ட வழித்தடத்திலிருந்து விலகி சற்று தூரத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மரண விளையாட்டு

மரண விளையாட்டு

1979ம் ஆண்டு துவங்கப்பட்ட டக்கார் ராலி பந்தயத்தில் நடைபெறும் 24வது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்காவிற்கு டக்கார் ராலி மாற்றப்பட்டது முதல் நடைபெறும் 5வது மரணம்.

Most Read Articles
English summary
CS Santosh staged a strong comeback from his start at 53rd position amongst the 160 bikers that started in Dakar rally.
Story first published: Wednesday, January 7, 2015, 17:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X