சி.எஸ்.சந்தோஷுக்கு ரியாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை... பூரண நலம்பெற ரசிகர்கள் பிரார்த்தனை!

டக்கார் ராலியில் நேற்று நடந்த விபத்தில் காயமடைந்த இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் விபத்தில் சிக்கியதை முதலில் பார்த்த ஹஸ்க்வர்னா அணி வீரர் அவருக்கு முதலுதவி கொடுத்தது தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிக்கிய சி.எஸ்.சந்தோஷுக்கு தீவிர சிகிச்சை

2021ம் ஆண்டுக்கான டக்கார் ராலி போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு போட்டியில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து வந்தனர்.

இந்த நிலையில், நான்காவது நாளான நேற்று ஸ்டேஜ்-4 போட்டி நடந்தது. இதில், எதிர்பாராத விதமாக ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கு கொண்டு வரும் சி.எஸ்.சந்தோஷ் விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்தார்.

அவர் மீட்கப்பட்டு ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனிடையே, சந்தோஷ் விபத்தில் சிக்கியதை முதலில் பார்த்து உதவி செய்த ஹஸ்க்வர்னா அணி வீரர் பால் ஸ்பைரிங்ஸ் முக்கியத் தகவல்களை ராலிமானியாக்ஸ் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

அதில், போட்டி துவங்கிய இடத்தில் இருந்து 135 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு சந்தோஷ் மற்றும் ஹஸ்க்வரனா அணியின் மற்றொரு வீரர் மருஷியோ கெரினி ஆகியோர் விபத்தில் சிக்கி அந்த வழியில் இருபுறமும் கீழே விழுந்து கிடந்தனர்.

அப்போது, மருஷியோ கெரினி உடனடியாக எழுந்துவிட்டார். ஆனால், சந்தோஷ் எழுந்திருக்கவில்லை. உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர், சந்தோஷுக்கு இதயத் துடிப்பை மீட்பதற்கான முதலுதவி அளித்தோம். அடுத்த 15 நிமிடங்களில் மீட்புப் படையினர் 3 ஹெலிகாப்டர்களில் அங்கு வந்துவிட்டனர். அவர்களிடம் சந்தோஷை ஒப்படைத்தபோது, அவருக்கு இதயத் துடிப்பு இருந்ததால் நிம்மதி அடைந்தேன்.," என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலமாக அல் துவதிமியில் உள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார். தலையில் காயம் இருந்தது கண்டறியப்பட்டதால், அங்கிருந்து ரியாத்தில் உள்ள சவூதி ஜெர்மன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலையில் அசைவு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. அதன்பிறகு காயத்தின் தன்மை அறிந்த பிறகு மேல் சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று மோட்டார் பந்தய ரசிகர்கள் மற்றும் வீரர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Read Articles

English summary
Indian rally race rider Santosh has suffered head injury in Dakar rally crash and undergoing treatment in Riyadh hospital.
Story first published: Thursday, January 7, 2021, 9:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X