வல்லரசுகளின் வயிற்றிலேயே புளியை கரைக்கும் நவீன ஏவுகணையை வாங்கும் இந்தியா!

Written By:

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளையே ஒரு கணம் திகைக்க செய்யும் வல்லமை பொருந்திய புதிய எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணையை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது இந்தியா. இதன்மூலமாக, சீனா, பாகிஸ்தான் போன்ற தொல்லை கொடுத்து வரும் அண்டை நாடுகளை அடக்கி வைக்க வழிபிறக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எஸ்-400 ஏவுகணையுடன், அதனை செலுத்துவதற்கு தேவையான வாகனம், ஏவு கருவிகளும் அடங்கிய 5 தொகுப்புகளை இந்தியா வாங்குகிறது. அண்டை நாடுகளிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எளிதாக கையாளும் திறன் கொண்ட இந்த அதிநவீன ஏவுகணை மற்றும் அதன் தொகுப்பு அமைப்பு குறித்த சிறப்புத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

உலக அளவில் மிக மிக நவீன ரக ஏவுகணைதான் எஸ்-400 டிரையம்ப். தரையிலிருந்து வான் இலக்குகளை துல்லியமாக தகர்க்கும் திறன் கொண்டது. 2007ம் ஆண்டிலிருந்து ரஷ்ய ராணுவ பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தி வந்த எஸ்-300 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் இந்தியா வாங்க இருக்கும் எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணை.

எஸ்-400 டிரையம்ப் ஏவுகணைகளுடன், அதற்கு தேவையான 5 ஏவு தள வாகனங்களையும், அதற்கான கருவிகளையும் இந்தியா வாங்குகிறது. இதில், மூன்று ஏவுதள வாகனங்களை பாகிஸ்தான் எல்லை நோக்கியும், இரண்டு ஏவுதள வாகனங்களை சீனா நோக்கியும் நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்திருக்கிறது.

இந்த ஏவுகணையானது, ஒரே நேரத்தில் நூறு இலக்குகளை கூட கண்காணித்து தாக்கும் வல்லமை கொண்டது. ஏவுகணை மட்டுமல்ல, இதற்கான தானியங்கி ஏவு தளமாக செயல்படும் வாகனத்தில் இருக்கும் நவீன ரேடார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

வான் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயலும் அதிவேக ஏவுகணைகள் மற்றும் ஸ்டீல்த் ரகத்தை சேர்ந்த ரேடார் கண்களுக்கு புலப்படாத விசேஷ வடிவமைப்பு கொண்ட விமானங்களை கூட இந்த ரேடார்கள் கண்டறிந்து இடைமறித்து தாக்கும்.

அதாவது, 600 கிமீ சுற்றளவிலும், 100 கிமீ உயரத்தில் எந்த திசையிலிருந்தும் வரும் எதிரிகளின் ஏவுகணைகள், ஆள் இல்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பொசுக்கித் தள்ளிவிடும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை 40 கிமீ, 120கிமீ, 250கிமீ மற்றும் 400 கிமீ பாய்ந்து செல்லும் திறன் கொண்ட மாடல்களில் தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்காவே அஞ்சும் ஏவுகணை என்று குறிப்பிடுவதற்கு காரணம். அந்நாட்டின் ஸ்டீல்த் ரக போர் விமானமான எஃப்-15 விமானத்தையே கூட இந்த ஏவுகணை கண்டறிந்து சுட்டுத் தள்ளும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா மொத்தம் 6,000 எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணைகளையும், அதற்கான 5 ஏவு வாகனங்களையும் வாங்க இருக்கிறது. ஒரு ஏவு வாகனத்தில் ஏவுகணையை செலுத்துவதற்கான 8 லாஞ்சர்கள், ஒரு நடமாடும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் 16 ஏவுகணைகளை பொருத்தி வைப்பதற்கான வசதியை கொண்டிருக்கும்.

600 கிமீ சுற்றளவுக்கான இலக்குகளை கண்காணிக்கும். குறைந்தது 2 கிமீ முதல் 400 கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும். அதாவது, மணிக்கு 17,000 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது. லாஞ்சர் மூலமாக 30 மீட்டர் உயரத்திற்கு ஏவப்படும். பின்னர் ஏவுகணையில் இருக்கும் ராக்கெட் எஞ்சின் உயிர்பெற்று இலக்கை நோக்கி செல்லும்.

இதற்கான ஒப்பந்தம் கோவாவில் நாளை துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒபந்தத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட உள்ளனர்.

எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணை மற்றும் அதற்கான உபகரணங்களை ரூ.40,000 கோடி செலவில் வாங்குகிறது இந்தியா. ஏற்கனவே, தைவான் நாட்டை மிரட்டுவதற்காக 6 எஸ்-400 ஏவுகணை மற்றும் அதற்கான உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு சீனா ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ராணுவம் #military
English summary
Important Facts About S400 Triumf Missiles. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos