டொயோட்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! தர லோக்கலா இறங்கி அடிக்க போறாங்க! நடுக்கத்தில் டாடா!
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் கார்களுக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டொயோட்டா நிறுவனம் பதிவு செய்து கொண்டுள்ளது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் விதிவிலக்கு அல்ல.
தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், டொயோட்டா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் 26,414 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 30,737 ஆக உயர்ந்துள்ளது. இது 16 சதவீத வளர்ச்சி ஆகும்.

அதே நேரத்தில் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2,000 கார்களை மட்டுமே டொயோட்டா நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3,297 ஆக உயர்ந்துள்ளது. இது 65 சதவீத வளர்ச்சி ஆகும்.
அதாவது கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) வெறும் 28,414 கார்களை மட்டுமே டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 34,034 ஆக உயர்ந்துள்ளது. இது 20 சதவீத வளர்ச்சி ஆகும். டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின் மூலம் இது நமக்கு தெரிய வந்துள்ளது.

க்ளான்சா (Toyota Glanza), ரூமியான் (Toyota Rumion), அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor), அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta), இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) மற்றும் ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) ஆகிய கார்களுக்கு எல்லாம், நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. இதன் காரணமாகவே டொயோட்டா நிறுவனத்தால் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை எட்ட முடிந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இனி வரும் காலங்களில் டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை தற்போது இருப்பதை காட்டிலும் மேலும் உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. ஏனெனில் டொயோட்டா நிறுவனம் 2 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா (Toyota Urban Cruiser Ebella) மற்றும் புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் (New-gen Toyota Fortuner) ஆகிய கார்களின் வருகைதான் இதற்கு காரணம். இதில், அர்பன் க்ரூஸர் இபெல்லாதான், இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) அனேகமாக வெறும் 18 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரை டொயோட்டா நிறுவனம் பாஸ் (BAAS - Battery As A Service) திட்டத்தின் கீழும் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த முறையில் அறிமுகம் செய்யப்பட்டால், இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 11 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீங்கள் இந்த முறையை தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு தோராயமாக 4 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இதன் வருகை, டாடா நெக்ஸான் இவி மற்றும் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார்களுக்கு, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காருக்கு பிறகு, வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் காரின் புதிய தலைமுறை மாடலை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது போன்ற புதிய கார்களின் வருகை காரணமாகவே, டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயரலாம் என நாங்கள் கூறுகிறோம்.


Click it and Unblock the Notifications








